Sanitation Workers
Sanitation Workers

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

குப்பைகளை உருவாக்கத் தெரிந்த நமக்கு, குப்பைத்தொட்டியை பயன்படுத்தத் தெரியவில்லை. குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்தி இருந்தால், தெருக்கள் முழுவதிலும் குப்பைகள் மலைபோல் தேங்கியிருக்காது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் (நெகிழி) குப்பைகள் ஏராளமாய் குவிந்துள்ளன. குப்பைகளைக் குறைக்க முடியவில்லை என்றாலும், முடிந்த அளவுக்கு குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்தலாம் அல்லவா. அரசு சார்பில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் இருந்தாலும், அவற்றில் பலவும் காலியாகத் தான் இருக்கின்றன. சில இடங்களில் குப்பைத்தொட்டி முழுவதும் நிரம்பினால், சிலர் பொறுப்பற்ற முறையில் குப்பைகளை கீழே போட்டு விடுகின்றனர்.

உதாரணத்திற்கு, பயணம் செய்யும் போது ஏதேனும் சாப்பிட்டால், முடிவில் குப்பையை ஜன்னல் வழியே வெளியில் தூக்கி எரிவார்கள். அனைவரும் இம்மாதிரி செய்தால், பயணம் நெடுகிலும் உங்கள் கண்களுக்கு குப்பைகள் தான் காட்சியளிக்கும்.

சுற்றுச்சூழலைக் காக்க முடியாவிட்டாலும், அசுத்தப்படுத்த வேண்டாம். பயணத்தில் குப்பைத்தொட்டியை எங்கு தேடுவோம், எப்படி குப்பையை குப்பைத்தொட்டியில் சேர்ப்பது என்று சிலர் நினைக்கலாம். உண்மை தான் இரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் தோன்றும் இயல்பான எண்ணம் தான் இது. ஆனால், இனி அவ்வாறு நினைக்காமல் நம்மால் முடிந்ததை செய்து சுற்றுச்சூழலைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழலின் மீது உண்மையான அக்கறை இருந்தால் வெளியில் செல்லும் போதெல்லாம் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் உருவாக்கும் குப்பைகளை கீழே போடாமல், துணிப்பையில் போட்டு சேகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் இடங்களில் ஏதாவது ஓரிடத்தில் நிச்சயம் குப்பைத்தொட்டி இருக்கும். குப்பைத்தொட்டியைக் கண்டதும் சேகரித்த குப்பைகளை, குப்பைத்தொட்டியில் நிரப்புங்கள்.

நமக்கு இருக்கும் வேலையில் இது தேவையா, இதற்குத் தானே துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
‘எனது குப்பை எனது பொறுப்பு’
Sanitation Workers

துப்புரவுப் பணியாளர்களின் இடத்தில் ஒரு நிமிடம் உங்களை நினைத்துப் பாருங்கள். நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்குமல்லவா! ஆனால், அவர்கள் சலிக்காது தங்கள் கடமையை செய்து வருகிறார்கள். என்னைக் கேட்டால், சுற்றுச்சூழலைக் காக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் தான் அதிக சம்பளம் வாங்கத் தகுதியுடையவர்கள் என்பேன். ஆனால், தற்போது வரை அவர்கள் குறைந்த ஊதியத்திற்கே வேலை செய்கின்றனர் என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவர்களின் உழைப்புக்கேற்றவாறு சம்பளத்தை ஏற்றித் தர வேண்டும். அப்போது தான் அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும். சுத்தம் ஒன்றே இவர்களின் குறிக்கோள். சுற்றுச்சூழலை காக்க அனைவரிடமும் மாற்றம் தேவை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நம் பங்களிப்பை அளித்து உதவிடுவோம். நாளைய தலைமுறைக்கு சுற்றுச்சூழலைக் காத்து, சுத்தமான காற்றை அளிப்போம். தண்ணீருக்காக போராடும் வேதனையே போதும். காற்றுக்காகவும் போராட வைத்து விட வேண்டாம்.

கீழே விழுந்து கிடக்கும் குப்பைகளை பொறுக்கி சுத்தம் செய்ய சொல்லவில்லை. உங்களால் உருவாகும் குப்பைகளை நீங்களே அப்புறப்படுத்தி குப்பைத்தொட்டியில் சேர்த்து விடுங்கள் என்று தான் சொல்கிறேன். அனைவரிடத்திலும் இம்மாற்றம் உண்டானால் நமது சுற்றுச்சூழல் மாசுபடாது. முடிந்த அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, மாசுபாட்டினைக் குறைத்து சுற்றுச்சூழல் நலம் காத்து நாமும் நலமோடு வாழ்வோம். சுத்தத்தை விரும்பும் துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்.

logo
Kalki Online
kalkionline.com