‘எனது குப்பை எனது பொறுப்பு’

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம்
‘எனது குப்பை எனது பொறுப்பு’

காட்சி 1

இடம் : வீடு

நேரம் : காலை மணி 07:30

மாந்தர்கள் : அப்பா, அம்மா, குழந்தைகள் கணேஷ், காயத்ரி

‘காலை மாலை நடு இரவும் சுத்தம் காப்போமே....

சாலை வீடு பொது இடமும் அழகாய் வைப்போமே....

நாளை தலைமுறையை நாம் இன்றே காப்போமே....

எனது குப்பை எனது பொறுப்பு என உறுதி எடுப்போமே.’

புதிய விழிப்புணர்வுப் பாடலுடன் சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் ஆட்டோ தெருவுக்குள் நுழைகிறது)

அம்மா: என்னங்க...  பாட்டு சத்தம் கேக்குது...  குப்பை வண்டியா பாருங்க?

அப்பா:  ஆமாம்.  குப்பை வண்டிதான்.

அம்மா: ஏங்க... உங்ககிட்ட கதையா கேட்டுக்கிட்டு இருக்கேன். குப்பை வண்டின்னா குப்பையை கொட்டிட்டு வாங்க. சமையக்கட்டுல வேலையா இருக்கேன். எனக்கு மட்டும் பத்து கையா இருக்கு.

அப்பா:  டேய். பசங்களா....  கணேஷ்.... காயத்ரி…

கணேஷ்: அப்பா... ஸ்கூலுக்கு நேரம் ஆச்சுப்பா...

காயத்ரி: ஆமாம்பா.  எனக்கும் டைம் ஆச்சுப்பா.

அப்பா:  சரி, சரி... ரொம்ப பிகு பண்ணாம சீக்கிரம் வாங்க...  மொத்தம் மூணு குப்பைக் கூடை இருக்குல்ல.  ஆளுக்கு ஒண்ணை தூக்கிட்டு வாங்க.  நானும் ஒண்ணை எடுத்துக்கிட்டு வரேன்...  குப்பை வண்டி வாசல்ல நிக்குது.  இப்போ விட்டோம்னா அப்புறம் குப்பை சேர்ந்துரும். 

கணேஷ்: எதுக்குப்பா மூணு குப்பைக் கூடை? ஒரு குப்பைக் கூடை போதாதா? 

காயத்ரி: ஆமாம்பா.  நானும் அதைத்தான் கேக்கணும்னு நினைச்சேன்... 

அப்பா: காரணத்தைச் சொல்ல இப்போ நேரமில்லை. சொன்னதைச் செய்யுங்க... ராத்திரி சாப்பிடும்போது மூணு கூடைக்கான விவரத்தை சொல்றேன். குப்பையைக் கொட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பாருங்க. 

(குப்பையைக் கொட்டிவிட்டு குழந்தைகள் பள்ளிக்கும், அப்பா அலுவலகத்துக்கும் புறப்படத் தயாராகின்றனர். அம்மா அனைவரையும் அனுப்பிவிட்டு வீட்டு வேலையில் மூழ்கி விடுகிறார்)

******************

காட்சி 2

இடம் : வீடு

நேரம் : இரவு மணி 08:30

மாந்தர்கள்: அப்பா, அம்மா, குழந்தைகள் கணேஷ், காயத்ரி

(வீட்டுப் பாடங்களை கணேஷும் காயத்திரியும் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அப்பா காலை அவசரத்தில் படிக்கத் தவறிய பேப்பர் செய்திகளை நிதானமாகப் படித்துக்கொண்டிருக்கிறார்)

அம்மா: பசங்களா... சாப்பாடு ரெடி.  சாப்டப்புறம் மிச்ச பாடத்தை எழுதலாம். சிக்கிரம் வாங்க. ஆறிடப் போகுது.  என்னங்க... உங்களையும்தான். 

(எல்லோரும் மேஜையில் வட்டமாக அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பிக்கின்றனர்)

கணேஷ்: அப்பா.  அந்த மூணு குப்பைத் தொட்டி காரணத்தைச் சொல்லுங்கப்பா...

காயத்ரி:  ஆமாம். ஆமாம்.  நானும் கேக்கணும்னு நினைச்சேன்.  அண்ணா கேக்கும்போதுதான் எனக்கும் ஞாபகம் வருது.

அப்பா: எங்க காலத்துல தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கும்.  அதுலதான் குப்பையைப் போடுவோம். தொட்டில சேரும் குப்பையைத் தள்ளு வண்டிலேயும், மாட்டு வண்டிலேயும் எடுத்துட்டுப் போவாங்க.  வீட்டுக்கு வீடு வர்ர இந்த ஆட்டோ குப்பை வண்டி இப்பத்தான் பிரபலம்.

கணேஷ்: அது சரிப்பா. மூணு குப்பைக் கூடை எதுக்கு?

அப்பா: அவசரப் படாதே.  இன்னும் நிறைய விஷயம் இருக்கு. சாப்டுக்கிட்டே கேளுங்க.  பெரு நகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்கள்லே 200 வார்டுகள் இருக்கு.  ஒவ்வொரு நாளும் வீடுகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்பட பல இடங்களிலிருந்து 5000 டன்னுக்கும் அதிகமா குப்பையைச் சேகரிக்கறாங்க. குப்பை சேகரிக்கும் பணிக்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 'உர்பேசர் ஸுமீத்' நிறுவனத்தோட ஒப்பந்தம் செஞ்சிருக்காங்க. 'பேட்டரி' ஆட்டோல வீடு வீடாகக் குப்பை சேகரிப்பாங்க. ஆரம்பத்தில துப்புரவு தொழிலாளர்கள் விசில் அடிச்சாங்க.  நெறைய பேருக்கு விசில் அடிக்கறது பிடிக்கல. அப்புறம் மணி அடிச்சும் பாத்தாங்க.  அதுவும் சரி வரல.  அப்புறம் வித்யாசமான முயற்சியா இந்தப் பாட்டை ஒலிபெருக்கில போடத் தொடங்கினாங்க.

காயத்ரி: பாட்டை யாருப்பா எழுதினாங்க?  ஜோரா இருக்கே!

அப்பா: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார்தான் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துப் பாடி உள்ளார்

கணேஷ்: மூணு குப்பைக் கூடை பத்தி சொல்லவே இல்லியேப்பா?

அப்பா: இதோ அதுக்குத்தான் வரேன். குப்பையைத் தரம் பிரிச்சு பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு நிறக் கூடைகளில் போடணும். பச்சை நிறக் கூடையில் மக்கும் குப்பையையும், வெள்ளை நிறக் கூடையில் மறு சுழற்சிக்கான குப்பையையும், கறுப்பு நிறக் கூடையில் மற்ற குப்பையையும் சேகரிக்கணும். நீ பாடப் புத்தகத்துல படிச்சிருப்பியே.  பிளாஸ்டிக் மக்காத குப்பைன்னு. எனவே அதைத் தனியாகவும், சமையலுக்குப் பயன்படுத்தி மிஞ்சின காய்கனிகளைத் தனியாகவும், தினசரி வீட்டில கூட்டிப் பெருக்கி சேரும் குப்பையைத் தனியகவும் பிரிக்கணும். அதுக்குத்தான் மூணு குப்பைக் கூடை.  நம்ம வீட்ல சேர்ர குப்பையைத் தரம் பிரிக்கவே இவ்வளவு சோம்பேறித்தனப் படறியே, ஒரு நாளைக்கு 5000 டன் குப்பை சேருதாம். அவங்க மூணா தரம் பிரிக்க எவ்வளவு நேரமாகும். எவ்வளவு கஷ்டம்? அதுனாலதான் வீட்லேயே நம்மால முடிஞ்ச சின்ன உதவி.

கணேஷ் & காயத்ரி:  (ஒரே குரலில்) ஆமாம்பா. ஆமாம்பா. குப்பை வண்டின்னு சாதாரணமாக நினைச்சோம் அதுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய கதையா?  வீடு சுத்தமானால் நாடே சுத்தமாகும்.  நம்ம பிரதமரோட ‘ஸ்வச் பாரத்’ திட்டமும் இதைத்தானே வலியுறுத்துது!

(காலை மாலை நடு இரவும் சுத்தம் காப்போமே...  சாலை வீடு பொது இடமும் அழகாய் வைப்போமே...  நாளை தலைமுறையை நாம் இன்றே காப்போமே...  எனது குப்பை எனது பொறுப்பு என உறுதி எடுப்போமே’ என்று  பாட்டைப் பாடிக் கொண்டே சாப்பிட்டு முடிக்கிறார்கள்.) 

அருமைக் குழந்தைகளே வீட்டையும், தெருவையும், பொது இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் என ‘குழந்தைகள் தினம்’ அன்று நீங்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். என்ன சரிதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com