
கோடை காலம் வந்துவிட்டால் யாராக இருந்தாலும், வெப்பமான சூழலைக் கடந்து தான் செல்ல வேண்டும். இருப்பினும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறுசிறு முயற்சிகளை நாம் செய்வோம். மனிதர்கள் மட்டுமல்ல விவசாயப் பயிர்களும் கோடை வெப்பத்தில் இருந்து தப்புவதில்லை. அதீத வெப்பத்தில் இருந்து பயிர்களைக் காக்க சில வழிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். இருப்பினும் குறைந்த செலவில் மிக எளிமையான வழிமுறை ஏதாவது இருக்கிறதா எனத் தேடும் விவசாயிகளுக்கு இந்தப் பதிவு உதவும்.
தோட்டக்கலைப் பயிர்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஏனெனில் இவை பெரும்பாலும் குறைந்த பரப்பளவிற்கே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் நெல் மற்றும் கோதுமை போன்ற தானியப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பயிர்களைக் காக்க ஒரு புதிய யுக்தி சமீபத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் நெற்பயிர் வரப்போரங்களில் வேலிகள் இருக்காது. அடுத்தடுத்து விளைநிலங்கள் இருப்பதால் விவசாயிகள் பலரும் வேலியை அமைப்பதில்லை. ஆனால் கோடை காலத்தில் வேலிகள் அமைத்தால் பயிர்களைப் பாதுகாக்க முடியும். வேலிகள் எப்படி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் என சிலர் கேட்கலாம். ஆனால் வேலிகளை சேலைகளைக் கொண்டு அமைத்தால் நிச்சயமாக பயிர்களின் மீதான வெப்பத்தின் தாக்கம் குறையும் என்கின்றனர் சில விவசாயிகள்.
கோடையில் பயிர்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதால், சில யுக்திகளை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. அப்படி முயற்சி செய்யப்பட்டது தான் சேலைகளைக் கொண்டு வேலி அமைத்தல். இது நல்ல பலனைக் கொடுக்கும் என வேளாண் அலுவலர்களும் தெரிவிக்கின்றனர்.
நெல், வாழை, மக்காச்சோளம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பல பயிர்களை வெயிலில் இருந்து காக்க இந்த புது டெக்னிக் உதவுகிறது. விவசாயிகள் அனைவரும் அவர்களின் வயல் வரப்போரங்களைச் சுற்றி சேலைகளை விரித்து வேலி போல் கட்டி வைக்க வேண்டும். இதன்மூலம் நேரடி வெப்பத்தின் தாக்கம் பயிர்களின் மீது குறைவாக இருக்கும். இந்த செயல்முறையால் பயிர்கள் கருகவது தவிர்க்கப்படும். அதோடு மகசூலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இந்த புது டெக்னிக் சில உள்ளூர் விவசாயிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
வீட்டில் இருக்கும் சேலைகளைக் கூட சில விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் வயலில் சேலைகளைக் கட்டுவதற்கென தனியாகவும் விற்கப்படுகின்றன. இதன் விலை வெறும் ரூ.20 முதல் ரூ.30 தான். ஒரு வயலைச் சுற்றி முழுமையாக சேலைகளைக் கட்டினால் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை மட்டுமே ஆகும். மேலும் இந்த சேலைகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்பதால், கோடை காலம் முடிந்த பிறகு, பத்திரமாக எடுத்து வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பயன்படுத்தலாம்.
சவாலான வானிலையை விவசாயிகள் திறம்பட கையாள இந்த மலிவான யுக்தியே போதும். அதோடு சேலைகளைக் கொண்டு வேலி அமைப்பதன் மூலம் காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்தும் பயிர்களைப் பாதுகாக்க முடியும் என வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர்.
சேலைகளைக் காணும் விலங்குகள், இங்கு மனிதர்கள் வசிக்கிறார்கள் என புரிந்து கொண்டு வயலுக்குள் நுழையாதாம்.ஆக மொத்தம் சேலைகளை வேலியாக்கினால் வெயில் தொல்லையும் இல்லை; வனவிலங்குகளின் தொல்லையும் இல்லை.