இயற்கையின் படைப்புகள் அனைத்துக்கும் பல விசேஷமான பண்புகள் உண்டு. இன்னும் கூட நாம் அறிந்து கொள்ளாத பல அதிசயங்கள் இயற்கையின் படைப்பில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. குரங்கிலிருந்து மனிதனாக தோன்றி, ஆதிவாசியாக வாழ்ந்து, கலாச்சாரத்தின் வளர்ச்சியால் இன்று நாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களாகிய நமக்குத்தான் திருமணம் செய்து கொள்ள பல படிநிலைகளை தாண்ட வேண்டி உள்ளது என்று நினைப்போம். ஆனால் அப்படி ஒரு நிலை இந்தப் பறவைக்கும் உள்ளது தெரியுமா?
உண்மைதான், தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தான் கட்டடக்கலையில் சிறந்தவன் என்பதை தன் காதலிக்கு உணர்த்தியாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பறவை தான் Power bird என அழைக்கப்படும் இந்தப் பறவை.
பொதுவாகவே Power bird பறவைகள் ஆஸ்திரேலியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன.
ஆண் பறவைகள் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் தனியாகவே இருக்கும். இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பெண் பறவையுடன் துணை சேரும். அவ்வாறு பெண் பறவையுடன் சேர்வதற்கு சிறந்ததொரு வீட்டை கட்ட வேண்டும். அந்த வீட்டின் அமைப்பும், அலங்காரமும் பிடித்து போய் பெண் பறவை அந்த ஆண் பறவையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இப்பறவைகள் அதன் காதலில் ஜெயிக்கும். ஆண் பறவை கட்டிய கூடுகள் பெண் பறவையை கவரவில்லை எனில் பெண் பறவை மற்ற ஆண் பறவைகளைத் தேடிச் சென்று விடும்.
பவர் பேர்ட் பறவைகளில் கிட்டத்தட்ட 20 க்கும் மேலான வகைகள் உள்ளன. சேடின் பவர் பேர்ட் பெண் பறவை வகைகள் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நம் நாட்டில் இருக்கும் குயில்களைப் போன்றே இருக்கும். இதில் ஆண் பறவைகள் பச்சை கலந்த கரு நீல நிறத்தில் இருக்கும். இந்த பவர் பேர்ட் வகைகள் எந்த நிறத்தில் உள்ளனவோ அந்த நிறத்தில் ஆன பொருட்களையே அதிகமாக சேகரிக்கும். சேடின் பவர் பேர்ட் வகைகள் பெரும்பாலும் நீல நிறத்திலான பொருட்களையே அதிகமாக சேகரிக்கும்.
ரீஜெண்ட் பவர் பேர்ட் வகைகள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலான பொருட்களை அதிகம் சேகரிக்கும்.
கிரேட் பவர் பேர்ட் வகைகள் வெள்ளை நிறத்தில் ஆன பொருட்களையும், கோல்டன் பவர் பேட் வகைகள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஆன பொருட்களையும் சேகரிக்கும்.
இத்தகைய பவர் பேர்ட் அமைக்கும் வீடானது கிட்டத்தட்ட ஒரு குடிசை வீடு போன்ற அமைப்பில் இருக்கும். நீளமான நாணல் குச்சிகளை இருபுறமும் வளைத்து அலங்கார வளைவுகளை போன்ற அமைப்பில் வீடுகளை உருவாக்கும்.
இந்தப் பறவைகள் தங்கள் கூடுகளை அழகுபடுத்திக் கொள்ள பல்வேறு பறவைகளின் இறக்கைகள், பல்வேறு விதமான பூக்கள், இலைகள், நீளமான புல், மனிதர்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த வாட்டர் பாட்டில் மூடி, ஸ்ட்ரா, கூழாங்கற்கள் இப்படி பல பொருள்களை சேகரித்து தங்களது கூடுகளை அலங்கரித்துக் கொள்கின்றன.
பெரும்பாலும் பொருட்களை சேகரித்து வீடுகளை கட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த வீடுகளுக்கு வண்ணம் பூசவும் செய்கின்றன! வீடு கட்டும் பறவை எந்த இனத்தைச் சேர்ந்ததோ அதற்குரிய நிறத்தையே வீடுகளுக்கு வண்ணம் பூசவும் பயன்படுத்துகின்றன. அத்தகைய வண்ணங்களில் கிடைக்கும் பழங்கள் அல்லது பூக்களை எடுத்து வந்து தனது எச்சிலையும் சேர்த்து வண்ணங்களை பூசுகிறது.
வீட்டின் வெளி கட்டுமானத்தையும் தாண்டி நாம் நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை அலங்காரப் படுத்துவது போலவே இப்பறவைகளும் தான் சேகரித்த பொருள்களைக் கொண்டு கூடுகளின் உள்ளேயும் அலங்காரம் செய்கின்றன.
ஆண் பறவையானது பெண் பறவைக்கு பிடித்த மாதிரி கூடுகளை கட்டுவதற்காக ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை கூட கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. ஒரு ஆண் பறவை கட்டிய வீடானது பெண் பறவைக்கு பிடித்து விட்டால் அந்தப் பறவை ஆண் பறவையுடன் இணைந்து விடும். பெண் பறவை முட்டைகளை இட்டதும் ஆண் பறவையானது குஞ்சுகள் வெளியேறும் வரை அதனைப் பாதுகாக்கிறது.
மேலும் இப்பறவைகள் பலவிதமான ஒலிகளை எழுப்பும் தன்மை உடையவை. ஆபத்து காலங்களில் தனது துணையினை அழைப்பதற்காக தனிப்பட்ட குரல் வளத்தை பயன்படுத்துகின்றன இத்தகைய பவர் பேர்ட் பறவைகள்.
மனிதர்களைப் போன்றே பறவைகளுக்கும் ஒரு குடும்பம் உள்ளது, நமக்கு இருப்பதைப் போலவே இந்த பறவைகளுக்கும் மிக அதிகமான பொறுப்புகளும் உள்ளது! உண்மையிலேயே இயற்கையின் படைப்பு மிகப்பெரிய ஆச்சரியம்தான்!!