உலகிலேயே நதியே இல்லாத நாடு அந்த நாட்டில் மழையும் அதிகமாக இருக்காது. ஆனால் மிகவும் பணக்கார நாடுகளில் இதுவும் ஒன்று. எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
அந்த நாட்டின் பெயர் சவுதி அரேபியா. இது ஆசியாவின் ஐந்தாவது பெரிய நாடாகவும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய நாடாகவும் உள்ளது. இதன் நிலப்பரப்பின் பெரும் பகுதி வறண்ட பாலைவனம், மலைகள் மற்றும் தாழ் நிலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் தலைநகரம் ரியாத். இஸ்லாமியர்களின் யாத்திரை தலங்களான இரண்டு புனித நகரங்கள் மக்கா மற்றும் மதீனாவும் இங்குள்ளது.
சவுதி அரேபியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. இது உலகின் 12வது பெரிய மாநிலமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் முக்கிய சவால்களில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. கடல் நீரை உப்பு நீக்கம் செய்த குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் பெரும்பாலான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நிலத்தடி நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு இங்கு விவசாயம் என்பதே இல்லாமல் போனது. அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ஆப்பிரிக்காவில் விவசாய நிலங்களை வாங்கும் முக்கிய நாடாக சவுதி அரேபியா உள்ளது.
சவுதி அரேபியா பெரும்பாலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. இங்கு உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதி தண்ணீருக்காக செலவிடப்படுகிறது. இங்கு ஆறுகளோ நதிகளோ இல்லை என்றாலும் இரண்டு கடல்களால் சூழப்பட்டுள்ளது. கிழக்கே பாரசீக வளைகுடாவும், மேற்கே செங்கடலும் உள்ளது. இவை இரண்டும் சவுதி அரேபியாவிற்கு வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு ஆறுகள் இல்லாததால் கிணறுகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இங்கு கடல் நீர் தான் குடிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
சவுதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்ட பகுதிகளுமே உள்ளது. இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெடோயின் ஆதிவாசிகள் மட்டும் சிறிய எண்ணிக்கையில் இங்கு வாழ்கின்றனர். நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான அளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாக காணப்படுகிறது.