
விலங்குகள் பற்றிய நமது புரிதலுக்கு சவால்விடும் வகையில் பல அதிசய விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. அத்தகைய விலங்குகளில் சில விலங்குகளின் செயல்கள் விஞ்ஞானிகளையே மிரளச் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசய உயிரினம்தான் ஸ்கூபா டைவிங் பல்லி. இந்த பல்லிக்கு ஏன் இப்படி ஒரு விசித்திரமான பெயர் வந்ததென்றால், இதனால் நீருக்கு அடியில் சுமார் 18 நிமிடங்கள் வரை மூச்சு விட முடியும். இதை ‘Water Anole’ என்றும் அழைப்பார்கள்.
பல விலங்குகள் நீருக்கு அடியில் தம் மூச்சைப் பிடித்துக்கொண்டு வாழும் தன்மை படைத்தவை. ஆனால், இந்த பல்லியால் நாம் மேற்புறத்தில் சுவாசிப்பது போலவே நீருக்கு அடியிலும் சுவாசிக்க முடியும். இதுதான் மற்ற பல்லி இனங்களிலிருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
புதிரான ஸ்கூபா டைவிங் பல்லி: இந்த பல்லியின் விசித்திரமான செயலுக்கு அதன் தோல் பெருமளவு உதவுகிறது. உதாரணத்திற்கு எண்ணெயை கொஞ்சம் தூரத்தில் இருந்து தண்ணீருக்குள் ஊற்றினால் அதைச் சுற்றி நீர்க்குமிழிகள் உண்டாவதுபோல, ஸ்கூபா டிரைவிங் பல்லி மேலிருந்து நீருக்குள் குதிக்கும்போது அதைச்சுற்றி தண்ணீர் படாத ஒரு லேயர் உருவாகிறது. அச்சமயத்தில் இந்த பல்லி பார்ப்பதற்கு ஒரு சில்வர் நிறத்தில் இருக்கும். அதேபோல, மூச்சு விடும்போது, அதைச் சுற்றியுள்ள லேயர் நீர்க்குமிழியாக மாறி, மீண்டும் அதே காற்றை உள்ளிழுத்து சுவாசிக்க உதவுகிறது. இப்படியே அதன் உடலைச் சுற்றியுள்ள ஆக்ஸிஜன் தீரும்வரை இந்த பல்லியால் நீருக்கு அடியில் சுவாசிக்க முடியும்.
ஒரு பல்லி ஏன் நீருக்கு அடியில் செல்ல வேண்டும்?
ஸ்கூபா டைவிங் பல்லி நீருக்கு அடியில் செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கடுமையான சுற்றுச்சூழல் நிலைகளைத் தவிர்க்கவும் இந்த பல்லிகள் இப்படி செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் சில சமயங்களில் தம் உணவுத் தேவைக்காகவும் இந்த பல்லிகள் நீருக்குள் செல்வதாகக் கூறப்படுகிறது.