

பருவ மழை காலங்களில் பயிர்களைப் பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் புயல் தாக்கமும், வெள்ள அபாயமும் அதிகரிப்பதால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
விளைச்சல் அதிகமாகும் போது விலை குறைவதும், விளைச்சல் குறைவாக இருக்கும் போது கனமழையால் பயிர்கள் சேதமடைவதும் விவசாயிகளுக்கு பெருந்துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பருவமழை காலங்களில் பயிர்களைப் பாதுகாக்க வடிகால் வசதி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்த அளவிலான பயிர்கள் உள்ள நிலத்தில் சாதாரண வடிகால் வசதியை எளிதாக மேற்கொள்ள முடியும். ஆனால் பரந்த அளவிலான பயிர்கள் விளையும் போது, வடிகால் வசதியை ஏற்படுத்துவதில் விவசாயிகளுக்கு சற்று சிரமம் ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வளிக்கும் விதமாக தற்போது தோண்டுகால் எனப்படும் வடிகால் வசதி முறையை தென்மாவட்ட விவசாயிகள் சிலர் பின்பற்றி வருகின்றனர்.
அறுவடையின் போது கனமழை பெய்தால், நிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்து விடும். இதனால் அறுவடை செய்வது முற்றிலுமாக தடைபடும். ஆகையால் மழைக்காலங்களில் வயலைச் சுற்றிலும் தோண்டுகால் வசதியை ஏற்படுத்தினால், அதிகளவிலான பயிர் சேதத்தை நிச்சயமாக தடுக்க முடியும். இதற்காக வரப்புக்கும், நெற்பயிருக்கும் இடையில் சிறிய அகழி போன்ற பள்ளத்தை நீள்வாக்கில் தோண்டினாலே போதுமானது. கனமழையின் போது வயலில் அதிகப்படியான நீர் தேங்குவதைத் தடுக்க தோண்டுகால் வசதி உதவுகிறது.
பள்ளம் தோண்டும் போது ஒரு வரிசை பயிர்கள் வீணாகும் என்றாலும், ஒட்டுமொத்த பயிர்களையும் பாதுகாக்க ஒரு வரிசையை தியாகம் செய்வதில் தவறில்லை. கனமழை பெய்து வெள்ளம் வந்தால், தோண்டுகால் வழியே மழை நீரானது ஓடையில் கலந்து விடும். இதனால் வயலில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
எவ்வித பிரச்னையும் இன்றி அறுவடை செய்தால், ஒரு ஏக்கருக்கு சுமார் 35 முதல் 40 நெல் மூட்டைகள் கிடைக்கும். கனமழை பெய்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5 நெல் மூட்டைகளாவது குறைந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு 20,000-க்கும் மேல் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக ஒரு வரிசை நெற்பயிர்களை தியாகம் செய்து, பள்ளம் தோண்டினால், விவசாயிகளுக்கு அது பலனாகவே இருக்கும். கூலி ஆட்களை கொண்டு பள்ளம் தோண்ட ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.1,000 வரை மட்டுமே செலவாகும்.
விளைநிலத்தில் உள்ள நெற்பயிர்கள் காப்பாற்றப்படும் என்பதால் இந்த செலவு விவசாயிகளுக்கு பெரிதாக நஷ்டத்தை ஏற்படுத்தாது. மதுரையில் உள்ள கோட்டைமேடு மற்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் தோண்டுகால் வசதியை பயன்படுத்தி நெற்பயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
ஆகையால் மற்ற விவசாயிகளும் இந்த முறையை சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம். இதன்மூலம் பலன் கிடைத்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தோண்டுகால் வசதியை முழுமையாக செயல்படுத்தலாம்.