
செம்மர கடத்தல் என்று நிறைய டிவி செய்திகளில் பார்த்திருக்கிறோம். அப்படி கடத்தப்பட்டதன் காரணம் செம்மரம் நிறைய பயன்களை தரும் மரம் என்பதால்தான். அவற்றைப் பற்றி விரிவாக இப்பகுதியில் காண்போம்.
சிறப்பு இயல்புகள்:
செம்மரத்தை தோப்புகளாக வளர்க்கும் பொழுது 15-18 மீட்டர் வளரக்கூடியது. இம்மரத்தின் பட்டை கருப்பு கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும் பட்டைகள் செவ்வக வடிவத்திலும் சிறு சிறு வடிவங்களாக தோற்றமளிக்கும். இதன் பொதுப்பெயர் ரெட் சாண்டல் (Red sanders) தமிழ் பெயர் செஞ்சந்தனம் என்பதாகும்
பரவல்:
செம்மரம் இந்தியாவில் மிகவும் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே இயற்கையாக வளரும் தன்மை உடையது. குறிப்பாக ஆந்திராவின் கடப்பா மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான கர்னூல், நெல்லூர், சித்தூர் மற்றும் தமிழகத்தின் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டத்தில் இயற்கையாக காணப்படுகிறது. இவை மற்ற வகை மரங்களுடன் இணைந்து வளரும் பண்பை கொண்டவை.
தட்பவெப்பம்:
இம்மரத்திற்கு அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 46.1 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 11.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கவேண்டும். செம்மரம் 350- 1150 மில்லி மீட்டர் மழை அளவு உள்ள இடங்களில் நன்கு வளரும் தன்மையுடையது. அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் தன்மை கொண்டது.
மரப்பண்பு:
தென்மேற்கு பருவக்காற்று வீசும் வரை விதை பட்டைகள் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும். பூத்த பருவத்தில் இருந்து விதைகள் முதிர்ச்சி அடைய 11 மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.
இயற்கை இனப்பெருக்கம்: வறட்சியை தாங்குவதற்கு ஏற்றவாறு அவை நீண்ட ஆணிவேரை கொண்டிருப்பதால் நீண்ட காலத்திற்கு நீர் இல்லாவிட்டாலும் உயிர் வாழும் தன்மை உடையது.
செயற்கை இனப்பெருக்கம்:
செம்மரத்தை மூன்று வகையாக வளர்க்கலாம் .முதலில் நேரடி விதைப்பு மூலமும் ,இரண்டாவதாக வளர்க்கப்பட்ட நாற்றுகள் மூலமும், மூன்றாவதாக வேர் தண்டுக்குச்சிகள் மூலமும் தோப்புகளாக வளர்க்கலாம்.
மேலாண்மை:
கடப்பா, நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் வறண்ட இலையுதிர் காடுகளில் குறைந்த மலைப்பகுதிகளில் காணப்படும் இம்மரம் 40 வருடங்களில் 32 சென்டிமீட்டர் சுற்றளவு வரை வளர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு விவசாய நிலங்களில் பத்தாண்டுகளில் சுமார் 30 முதல் 45 சென்டிமீட்டர் சுற்றளவு நல்ல மர மேலாண்மையின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தடி மரப் பண்புகள்:
நல்ல சிவப்பு நிறம் மற்றும் அழகான கோடுகளை கொண்டிருக்கும் மரங்கள் 12 சதவீத ஈர பதத்தில் 900- 1265 கிலோ மீட்டருக்கு அடர்த்தியில் இருக்கும். இதன் தடிமரம் தேக்கு மரத்தை விட உறுதியானது. காய்ந்த மரங்கள் அறுப்பதற்கு மிகவும் கடினமானவை. எனினும் இயந்திரங்கள் கொண்டு அறுப்பதும் மிகவும் எளிது.
செம்மர வகைகள்:
செம்மரங்களில் இயற்கையாகவே இரண்டு வகையான தனிமரப் பண்புகள் உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒன்று நேரான கோடுகள்( Straight grain) மற்றொன்று அலையமைப்பு கோடுகள்(Wavy grain) கொண்ட மரங்கள் ஆகும்.
பயன்கள்:
இம்மரத்தின் தடிமரம் கடினமானது மற்றும் கனமானது. எனவே இவை எல்லா வகையான அலங்கார பொருட்கள் தயாரிப்புக்கும், கதவு, நாற்காலி போன்ற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் தனித்தன்மை வாய்ந்த 'சாமிசென்' எனப்படும் இசைக்கருவி தயாரிப்பில் இம்மரம் பயன்படுகிறது.
திருப்பதி தரிசனம் செய்யும் பக்தர்கள் செம்மரத்தினால் செய்யப்பட்ட சிலைகளை அதிக அளவில் வாங்குவதால் இதன் மதிப்பு மற்றும் தேவை அதிகரித்து வருகிறது.
சாண்டலின் எனப்படும் சாயம் எடுப்பதற்கும் இந்த மரம் முதன்மையாக கருதப்படுகிறது.
மேலும் செம்மரக்கட்டைகள் அணுக்கதிரின் வீச்சை தடுக்கும் பண்பை கொண்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களை தடுக்கும் அரணாக பயன்படுத்தப்படுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் போன்ற நாடுகளில் எக்ஸ்ரே மற்றும் லேசர் போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் சிகிச்சையின் போது கதிர்வீச்சை தடுப்பதற்காக சிறிய செம்மர துண்டுகளை தங்கள் சட்டை பைகளில் வைத்துக் கொள்வதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சட்டத்தின் படி செம்மரக்கட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 2010ஆம் வருடம் செம்மரக்கட்டையில் ஒரு டன் சுமார் ₹6,55,000 விற்கப்பட்டதாக தெரியவருகிறது.
இவ்வளவு பண்புகளையும் பயன்களையும் உடைய மரம் என்பதால்தான் அடிக்கடி பேசுபொருளாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.