
செம்பருத்திச் செடியில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, செடியிலிருந்து உதிர்வது இயற்கையாக நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனாலும் அதை கவனத்தில் வைத்துக்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டு பிடித்து தீர்வு காண்பதும் அவசியம்.
செடிக்கு தண்ணீர் ஊற்றுவதில் கோளாறு அல்லது பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களாலும் இலைகள் பழுத்து உதிரலாம். தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றுதல் அல்லது குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றுவது இரண்டுமே பிரச்னையை உண்டுபண்ணும்.
தீர்வு: செடி வைத்திருக்கும் தொட்டியில் மேற்பரப்பு மண் காய்ந்து போகும்போது மட்டும் தண்ணீர் ஊற்றவும். ஊற்றிய நீர் அதிகமாகி, தொட்டியின் அடி பாகத்தில் தேங்கி நின்றால் செடியின் வேர் காற்றோட்டமின்றி, மூச்சுத் திணறி அழுகிவிட வாய்ப்பாகும்.
எனவே, தொட்டியின் அடியில், பக்கவாட்டில் ஒன்றிரண்டு துளைகள் இருக்குமாறு செய்தால் அதிகப்படியான நீர் தானாகவே வெளியேறி விடும்.
நைட்ரஜன், இரும்புச்சத்து அல்லது மக்னீசியம் போன்ற ஊட்டச் சத்துக்களில் குறைபாடு ஏற்படுவதும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்வதற்கு காரணமாகலாம்.
NPK 10-10-10 அல்லது 20-20-20 போன்ற உரங்களை சரி விகிதத்தில் மண்ணுடன் கலந்துவிட்டு முன்னேற்றம் காணலாம்.
வெப்ப நிலை அழுத்தம்: அதிகமான உஷ்ணம் அல்லது அதிக குளிர் போன்ற வெப்ப நிலை மாற்றம் செடிக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும். எனவே செம்பருத்திச் செடியை 15-35°C ல் வைத்திருப்பது நல்லது.
பூச்சி தாக்குதல்: வெள்ளை ஈக்கள், ஸ்பைடர், அஃபிட் (Aphid) போன்ற பூச்சிகள் செம்பருத்திச் செடியின் இலை, தண்டு போன்ற பாகங்களை ஆக்ரமித்து, தாவரச் சாற்றை உறிஞ்சி எடுத்துவிடும். அதனால் செடிகளை அடிக்கடி உற்று நோக்கி, பூச்சித் தாக்குதல் இருப்பின்
வேப்பெண்ணெய் அல்லது ஆர்கானிக் பூச்சி மருந்து தெளித்து பூச்சி பரவலை கட்டுப்படுத்துதல் அவசியம்.
சூரிய வெளிச்சம்: செம்பருத்திச் செடியை அதிக வெயில் அல்லது குறைந்தளவு வெயில் படுமாறு வைப்பது ஆரோக்கியம் ஆகாது. ஒரு நாளைக்கு 4-6 மணி நேர வெயில் படுமாறு வைத்துப் பராமரிப்பது நன்மை தரும்.
மேற்கூறிய முறையில் செம்பருத்திச் செடியை கவனமுடன் பார்த்துப் பராமரித்து வந்தால் அது அழகழகா பூத்துக் குலுங்கும் என்பதில் ஐயமில்லை. செம்பருத்திப் பூ அம்பாளுக்கு பிரியமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.