50 வருட ரகசியம் உடைந்தது.. அருவியில் செங்குத்தாக ஏறும் அதிசய மீன்கள்!

Shellear Fish
Shellear Fish
Published on

மீன்கள், தண்ணீரில் அழகாக நீந்திச் செல்லும் உயிரினம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு சின்னஞ்சிறிய மீன், செங்குத்தான அருவியில் பாறைகளைப் பிடித்துக்கொண்டு மலை ஏறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படி ஒரு விசித்திரமான சம்பவம் தான் தற்போது காங்கோ குடியரசில் நடந்துள்ளது. கடந்த 50 வருடங்களாகவே இப்படி ஒரு மீன் இருப்பதாகவும் அது அருவிகளில் ஏறுவதாகவும் அங்குள்ள மக்களிடையே பல கதைகள் உலவி வந்தன. 

அந்த செய்திகளை எல்லாம் இப்போது உண்மையாக்கும் விதமாக, பெல்ஜியம் மற்றும் லுபும்பாஷி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, அந்த அதிசய மீன்களை முதல் முறையாக வீடியோ எடுத்து ஒட்டுமொத்த உலகையும் பிரம்மிக்க வைத்துள்ளனர். ஷெல்லியர் (Shellear) என அழைக்கப்படும் இந்த குட்டி மீன்கள் பற்றிய சுவாரசிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மலையேறும் ரகசியம்!

காங்கோவில் உள்ள உபெம்பா தேசிய பூங்காவின் நீர்வீழ்ச்சியில் தான் இந்த பிரம்மாண்டமான நிகழ்வு பதிவாகியுள்ளது. இந்த ஷெல்லியர் மீன்கள் அளவில் மிகவும் சிறியவை, அதாவது வெறும் ஐந்து சென்டிமீட்டர் நீளம் மட்டுமே இருக்கும் ஒரு குட்டி உயிரினம். இவ்வளவு சிறிய உடம்பை வைத்துக்கொண்டு சுமார் பதினைந்து மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய நீர்வீழ்ச்சியை இவை அசால்ட்டாக ஏறுகின்றன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழைக்காலம் முடியும் தருவாயில் தான் இவை இந்த சாகசத்தை நிகழ்த்துகின்றன. 

தங்களது துடுப்புகளுக்கு அடியில் உள்ள மிகச் சிறிய கொக்கி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்திப் பாறைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன. மனிதர்கள் எப்படி மலையேறும் போது கயிறுகளைப் பயன்படுத்துவார்களோ, அதேபோல இவை தங்களது உடலின் பின்பகுதியை வளைத்து நெளித்து செங்குத்தான பாறைகளில் மெல்ல மெல்ல மேலே ஊர்ந்து செல்கின்றன.

இதையும் படியுங்கள்:
தமிழகக் கோயில்களின் அறியப்படாத அதிசயங்கள்: ஒரு ஆன்மீகப் பயணம்!
Shellear Fish

ஆபத்து நிறைந்த பயணம்!

இந்த மலையேறும் பயணம் ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் கிடையாது. இந்த பதினைந்து மீட்டர் தூரத்தைக் கடக்க அவற்றுக்குக் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகிறது. தொடர்ந்து ஏறினால் உடம்பு டயர்ட் ஆகிவிடும் என்பதால், பாறைகளில் உள்ள சின்னச் சின்ன இடுக்குகளில் கூட்டமாகப் படுத்து அவ்வப்போது நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால், இவை வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே மலையேறும் வேலையைச் செய்கின்றன. 

மீதமுள்ள ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வு மட்டுமே எடுக்கின்றன. இவ்வளவு உஷாராக மெதுவாக ஏறினாலும் சில நேரங்களில் அருவியின் அதீத வேகத்தால் பல மீன்கள் தவறி கீழே விழுந்துவிடும் அபாயமும் அங்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பாறைகளின் இடுக்குகளில் தலைகீழாகத் தொங்கியபடி செல்லும் போது கீழே விழும் ஆபத்து இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

என்ன காரணம்?

இவ்வளவு கஷ்டப்பட்டு இவை ஏன் உயிரைப் பணயம் வைத்து மேலே ஏற வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். மழைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இந்த மீன்கள், தங்களது பழைய இருப்பிடத்திற்கே மீண்டும் பாதுகாப்பாகச் செல்ல இப்படி ஒரு கடினமான பயணத்தை மேற்கொள்கின்றன. அதுமட்டுமில்லாமல் மற்ற மீன்களுடனான உணவுப் போட்டி மற்றும் பெரிய எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் இந்த மலையேற்றம் அவற்றுக்கு உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
இயற்கை தந்த 'ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்'! உங்கள் காலடியிலேயே கிடக்கும் அதிசய மூலிகை!
Shellear Fish

இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஏதோ ஒரு ஆச்சரியம் ஒளிந்து கொண்டே தான் இருக்கிறது. வெறும் 5 சென்டிமீட்டர் மட்டுமே உள்ள ஒரு சாதாரண மீன், இவ்வளவு பெரிய அருவியின் சீற்றத்தை எதிர்த்து ஏறுவது என்பது உண்மையிலேயே மனிதர்களுக்கு ஒரு மாபெரும் தன்னம்பிக்கை பாடம் தான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com