
‘அது என்ன இயேசு கிறிஸ்து (Jesus Christ) பல்லி? ஒருவேளை இயேசுவின் காலத்தில் அவருக்கு இந்த பல்லி உதவி செய்ததா?’ என்றெல்லாம் பலருக்கும் கற்பனைகள் விரியலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த பல்லிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. பைபிளில் வரும் கதைப்படி இயேசு நீரில் நடந்துள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளதால், இந்த பல்லி நீரில் நடக்கும் திறமையைப் பார்த்து இதற்கு, ‘இயேசு கிறிஸ்து பல்லி’ என்று பெயர் வைத்துவிட்டனர்.
இந்த இயேசு கிறிஸ்து பல்லியை, ‘பசிலிஸ்க் பல்லி’ என்றும் அழைக்கின்றனர். மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் ஈரமான நிலப்பகுதிகள் மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்த பல்லிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு ஓணான் போன்றும் பச்சோந்தியைப் போன்றும் இவை வடிவத்தைப் பெற்றுள்ளன. பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் இவை காணப்படுகின்றன.
சராசரியாக ஒரு இயேசு கிறிஸ்து பல்லி 3 அடி வரை நீளம் கொண்டதாக இருக்கும். இதன் தலைக்குப் பின்னால் யானையின் காதைப் போல ஒரு மடல் இருக்கிறது. முதுகில் தோலினால் ஆன ஒரு முகடும் இருக்கிறது. இவற்றின் கால்கள் சற்று நீளமானவை. வினாடிக்கு 1.5 மீட்டர் வேகத்தில் நீரில் ஓடும் தன்மை கொண்டவை.
பசிலிஸ்க் பல்லியில் மொத்தமாக 4 தனித்துவம் கொண்ட வகைகள் உள்ளன. பசிலிஸ்க் பல்லிகள் பொதுவாக தனிமையை விரும்பும் உயிரினங்கள். ஆனால், அவை ஆறுகள், ஏரிகள் அருகில் குழுக்களாக வசிக்கக்கூடியவை. பொதுவாக, ஆண் இயேசு கிறிஸ்து பல்லி, சிங்கங்களைப் போன்று தங்கள் வாழிடங்களை அமைத்துக் கொள்கின்றன. இவை எல்லையைத் தாண்டாது, தங்கள் இடத்தைப் பாதுகாக்க தலையை ஆட்டுவது மற்ற உயிரினங்களை பயமுறுத்துவது, துரத்துவது போன்ற ஆக்ரோஷமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.
பொதுவாக, பெண் இயேசு கிறிஸ்து பல்லிகள் ஆக்ரோஷம் குறைவானவை. மேலும், அவை ஒரு எல்லைக்குள் தங்காமல் வேறு வேறு எல்லைகளுக்கும் செல்லக் கூடியவை. ஆண் பல்லிகள் தங்கள் முதுகின் மேலுள்ள வண்ண முகடுகளை அசைத்து இனப்பெருக்கம் செய்வதற்காக பெண் பல்லிகளை கவர்கின்றன.
கருவுற்ற பெண் பல்லிகள் நீர்நிலைக்கு அருகில் ஆழமில்லாத இடங்களில் மணல்களில் முட்டை இடுகின்றன. இவை ஒவ்வொரு முறையும் 20 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டையின் வளர்ச்சிக் காலம் அதிகபட்சமாக 3 மாதங்கள் ஆகும். அதன் பின்னர் முட்டையில் இருந்து இயேசு கிறிஸ்து பல்லிகள் வெளிவருகின்றன. இளம் பல்லிகள் சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை வேகமாக வளர்ந்து ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சி அடைகின்றன. அப்போது அவற்றுக்கு முகடுகள் மற்றும் நிறங்கள் வெளிப்படுகின்றன. இந்த பல்லியின் சராசரி ஆயுட்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
பசிலிஸ்க் பல்லிகள் இளம் வயதில் பூச்சிகளை மட்டுமே விரும்பி உண்கின்றன. வயது முதிர்ந்த பல்லிகள் பூக்கள், பழங்கள், சிறிய மீன் மற்றும் தவளைகளை உணவாகக் கொள்கின்றன.
இந்த இனம் தற்போது அழிவுப் பட்டியலில் இல்லை என்றாலும் கூட, அவற்றின் வாழிடங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத் தேவைகளுக்காக காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதால் இதன் எதிர்காலம் சிக்கலில் உள்ளது.