
லேக் விக்டோரியாவில் ஆரம்பித்து, மெடிடரெனியன் கடலில் கலக்கும் நைல் நதியே உலகின் நீளமான நதி என்ற புகழைப் பெற்றதாகும். 4,160 மைல்கள் ஓடும் இந்த நதியானது, ஆப்பிரிக்காவை வளப்படுத்தும் அற்புதமான இயற்கையின் கொடையாகும். பதினொரு லட்சம் சதுர மைல் பரப்பை வளப்படுத்தும் இது, ஆப்பிரிக்க கண்டத்தின் பத்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது. தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினொரு நாடுகளின் வழியே ஓடி மெடிடரேனியன் கடலில் கலக்கிறது.
நைல் நதியால் அதிகம் பயன் அடையும் நாடுகள் எகிப்து மற்றும் சூடான் ஆகும். கிரேக்க வரலாற்று ஆசிரியரான ஹெரொடோடஸ், ‘நைல் நதியின் நன்கொடையே எகிப்து’ என்று கூறி இந்த நதியைப் புகழ்கிறார். ‘எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதை யாருமே அறிய முடியாதபடி இருக்கும் இந்த நதி, சந்திரனின் மலைகளிலிருந்து தோன்றி இறங்குகிறது’ என்றார் தாலமி என்ற கிரேக்க வானியல் நிபுணர்.
7,000 வருடங்களுக்கு முன்னர் இங்கு வாழ்ந்த விவசாயிகள் இந்த நதியின் தோற்றம் மர்மமாக இருந்ததால் இதை ‘ஹபி’ என்று பெயரிட்டு கடவுளாக வழிபட்டு வந்தனர். வாடிகனில் இன்றும் இருக்கும் ஒரு பழைய கால ஹபியின் சிலை இருபது அங்குல உயரமே உள்ள 16 குழந்தைகள் சுற்றி இருக்க சாய்ந்தவாறே சோளத்தைப் பிடித்திருக்கும் காட்சியைச் சித்தரிக்கிறது.
நைல் நதி, ‘வெள்ளை நைல்’ என்றும், ‘நீல நைல்’ என்றும் இரு நதிகளாகப் பாய்ந்து வருகிறது. வெள்ளை நதியில் பாய்ந்து வரும் நீரில் பெரும்பகுதி தெற்கு சூடானில் சதுப்பு நிலத்தில் தேங்கி விடுவதால் எகிப்தின் நீர் வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியையே தருகிறது. ஆனால், நீல நைல் நதியோ 1000 மைல்கள் ஓடி ஐந்தில் நான்கு பகுதி நீரை எகிப்துக்குத் தருகிறது.
வெள்ள நீர் வீணாவதைத் தடுக்க பிரம்மாண்டமான அஸ்வான் அணை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 364 அடி. இதன் நீளம் 12,565 அடி. சூடானிலும் எகிப்திலும் வருடம் முழுவதும் நைல் நதியில் படகுகளைச் செலுத்த முடியும். எதியோப்பியாவில் அழகான டிஸ்ஸிஸாட் நீர் வீழ்ச்சியை நீல நைல் நதி உருவாக்குகிறது!
பெட்ரோ பேயஸ் (Petro Paez) என்ற ஒரு போர்த்துக்கீசியர் நீல நைல் நதியின் தோற்றத்தை ஆராயக் கிளம்பினார். எதியோப்பியாவில் 6000 அடி உயரத்தில் அமைந்திருந்த லேக் தாராவிலிருந்து இது ஆரம்பமாகிறது என்று கண்டுபிடித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வெள்ளை நைல் பற்றிய தோற்றத்தை யாரும் ஆராயவில்லை. 1857ம் ஆண்டு லண்டனில் வாழ்ந்து வந்த ரிச்சர்ட் பர்டன் (Richard Burton) என்பவர் இதை ஆராய முயன்றார். அவருடன் ஜான் ஸ்பெக் என்பவரும் இணைந்து நீல நைல் நதியானது லேக் தங்கனீகாவில் தோன்றுகிறது என்று கண்டுபிடித்தனர்.
ஆனால், ஸ்பெக் மேலும் முன்னேறிச் சென்று இது லேக் விக்டோரியாவில் ஆரம்பமாகிறது என்று கூறினார். ஆனால், பின்னால் வந்தவர்கள், ‘லேக் விக்டோரியாவிலும் பல ஆறுகள் வந்து கலப்பதால் இதுதான் நைல் நதியின் தோற்றம் என்று சொல்ல முடியாது’ என்று வாதாடினர்.
வெள்ளை நைல் நதியானது, மர்ச்சிஸன் நீர் வீழ்ச்சியாக 120 அடி உயரத்திலிருந்து ‘சுட்’ என்ற இடத்தில் விழுந்து அழகான காட்சியைத் தருகிறது. அங்குள்ள சூடானின் தலைநகரமான ‘கர்த்தூம்’ என்ற இடத்தில் நீல நைலுடன் கலக்கிறது. நீல நைல் நதி நிஜமாகவே நீல நிறத்தில் காட்சி அளிக்க இங்கு வெள்ளை நைல் நதி லேசான பச்சை நிறத்துடன் காட்சி அளிக்கிறது. இரு நதிகளும் இணைந்து பாய்ந்து எகிப்தில் மெடிடரேனியன் கடலில் கலக்கிறது.
எகிப்தின் ஜீவனுக்கான இரத்த ஓட்டமாக நைல் நதி ஓடியது; ஓடிக்கொண்டிருக்கிறது; ஓடும் என்பதுதான் நைல் நதியின் சிறப்பாகும். ‘நடந்தாய் வாழி நைல் நதியே’ என்று வாழ்த்துவோம்.