

மனிதர்கள் முதல் விலங்குகள் வரை உயிர் வாழ ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அவசியம் தேவை. ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் மாசு பெருகி வருகிறது. இதில் சில தவறுகளை நாமும் அறியாமலேயே செய்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு தருகிறோம். முதலில் எந்தெந்த காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.
காலநிலை மாற்றம் (Climate Change): புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற தீமை தரும் வாயுக்களால் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து, வெள்ளம், வறட்சி மற்றும் அதிக வெப்பம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
பல்லுயிர் இழப்பு (Biodiversity Loss): மனிதர்களின் சுயநலத்துக்காக காடுகள் அழிக்கப்படுதல், விலங்குகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அதீத மாசுபாடு காரணமாக தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வேகமாக அழிந்து வருவது உலகின் இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கிறது.
காற்று மாசுபாடு (Air Pollution): பெருகி வரும் தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் புகைகள், சுவாச நோய்களை ஏற்படுத்துவதுடன், அமில மழையை உருவாக்குகிறது. இந்த நிலையே தற்போது டெல்லியில் மக்களின் பெரும் பிரச்னையாக உள்ளது.
நீர் மாசுபாடு (Water Pollution): சாயப் பட்டறை உள்ளிட்ட தொழிற்சாலைக் கழிவுகள், விவசாய ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் கலப்பதனால் நீர்வாழ் உயிரினங்களுக்கும் அந்நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் ஆரோக்கியம் பாதித்து தீங்கு விளைவிக்கின்றன.
நில மாசுபாடு (Soil Pollution): அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் முறையற்ற கழிவுகளை கொட்டுதல் போன்றவற்றால் மண் வளம் குன்றி, உணவுப் பொருட்களின் தரத்தை பாதிக்கிறது. இதை உண்ணும் நமக்கும் அதன் பாதிப்பு தொடர்கிறது.
காடழிப்பு (Deforestation): வேளாண்மை, மரத் தேவை மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவற்றுக்காக காடுகளில் உள்ள மரங்களை வெட்டி, காடுகளை உருக்குலைப்பதால் காடுகளில் வாழும் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, மண் அரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை அதிகரிக்கிறது.
நீர் பற்றாக்குறை (Water Scarcity): அதிகப்படியான நீர்ப்பாசனம், தொழிற்சாலைப் பயன்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக தூய நீரின் இருப்பு குறைவது, பல பகுதிகளில் குடிநீர் நெருக்கடிக்கு வழிவகுக்கிறது.
ஓசோன் படலச் சிதைவு (Ozone Layer Depletion): குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் குளோரோஃப்ளோரோகார்பன்கள் (CFCs) போன்ற ரசாயனங்கள் ஓசோன் படலத்தை மெலிதாக்குவதால், தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்கள் பூமிக்கு வருவதாகவும் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் (Plastic Waste and Microplastics): மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் கழிவுகள் நிலம் மற்றும் கடல்களில் குவிந்து, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், மைக்ரோபிளாஸ்டிக்குகள் உணவுச் சங்கிலிக்குள் நுழைந்து கேடு விளைவிக்கிறது.
கடல் அமிலமயமாதல் (Ocean Acidification): வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை கடல்கள் உறிஞ்சுவதால், கடலின் pH அளவு குறைந்து, பவளப்பாறைகள் மற்றும் ஓடுடைய கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
இவற்றுடன் கனிமங்கள், நிலத்தடி நீர் போன்ற இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதும் காரணமாக அமைகிறது. இவற்றை தடுப்பது நமது கடமையும் கூட.