

பயோ டாய்லெட் என்பது சுற்றுச்சூழலை சுகாதாரமாக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இவை காற்றழுத்த முறையில் செயல்படுபவை. நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் மனிதக் கழிவுகளை 99 சதவிகிதம் மக்கச் செய்து பயோ வாயுவாக வெளியேற்றுவதால் இதில் நாற்றம் இருக்காது. இதனை எரிசக்தியாகவும் பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது: பயோ டாய்லெட் என்பது மனிதக் கழிவுகளை சிதைக்க பாக்டீரியாவை பயன்படுத்தும் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறை அமைப்பாகும். இது தண்ணீரை பயன்படுத்தும் பாரம்பரிய கழிப்பறைகளைப் போல் அல்லாமல் கழிவுகளை உரமாகவும், வாயுக்களாகவும் மாற்றுகிறது. இந்த முறையில் கழிவுகள் காற்றில்லா (anaerobic) செரிமானம் மூலம் சிதைக்கப்பட்டு, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் மற்றும் உரமாகப் பயன்படுத்தக்கூடிய நீர் உருவாகிறது.
வழக்கமாக கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் வீட்டில் சேகரிக்கப்பட்டு பின்பு அப்புறப்படுத்தப்படும். நகரப் பகுதியாக இருப்பின் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும். இவை முழுவதும் மக்கிப் போகாது. இதனால் சில சமயங்களில் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், இந்த பயோ டாய்லெட்டுகள் மனிதக் கழிவுகளை முற்றிலும் மக்கச் செய்து பயோ வாயுவாக வெளியேற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.
ரயில்களில் பயோ டாய்லெட்கள்: ரயில்வேக்களில் பாரம்பரிய கழிப்பறைகளால் மனித மலம் நேரடியாக ரயில் பாதைகளில் கொட்டப்பட்டது. இதனால் ரயில் பாதைகளில் உலோகம் சேதம் அடைவதுடன், சுற்றுச்சூழலில் அழுக்கு மற்றும் அசுத்தம் பரவியது. ஆனால், இந்த பயோ டாய்லெட்டுகள் இந்தியாவின் ரயில் நிலையங்களை சுத்தமாகவும், நாற்றமில்லாமலும், பல நோய்களை தடுப்பதற்கு நல்லபடியாகவும் அமைந்துள்ளது. இந்திய ரயில்வேயின் 100 சதவிகித ரயில்களில் பயோ டாய்லெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
செயல்படும் விதம்:
கழிவுகளை சிதைக்கிறது: கழிப்பறை அலகு வழியாக வரும் மனிதக் கழிவுகள், செரிமானத் தொட்டியில் உள்ள சிறப்பு பாக்டீரியாக்களால் சிதைக்கப்படுகின்றன. இப்படிக் கழிவுகள் பாக்டீரியாக்கள் மூலம் மக்கச் செய்வதால் கழிவுநீர் பிரச்னை குறைகிறது.
வாயுக்கள் உற்பத்தி: இந்த செயல்முறை கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடுகிறது. மீத்தேன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
நீர் மற்றும் உரம் உருவாக்கம்: கழிவுகள் சிதைக்கப்படும்போது, மறு பயன்பாட்டிற்கு உகந்த நீரும் (சுத்திகரிக்கப்பட்ட நீரை பாசனத்திற்கு பயன்படுத்தலாம்), விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய உரமும் உருவாகின்றது.
தண்ணீர் சேமிப்பு: பாரம்பரிய கழிப்பறைகளுடன் ஒப்பிடும்போது பயோ டாய்லெட்டுகள் மிகக் குறைவான தண்ணீரைப் பயன்படுத்துகின்றன அல்லது தண்ணீரே தேவைப்படுவதில்லை. இது தண்ணீரை மிகக் குறைவாக பயன்படுத்துவதால் நீர் சேமிப்புக்கு உதவுகிறது.
பயோ டாய்லெட்டின் நன்மைகள்:
சுற்றுச்சூழல் நட்பு: கழிவுநீர் சுத்திகரிப்புக்கு பதிலாக, இது கழிவுகளை மறுசுழற்சி செய்கிறது. கழிவு நீர் மற்றும் மலத்தை நீர்நிலைகளில் நேரடியாகக் கொட்டுவதை தடுக்கிறது. மேலும், இது பாக்டீரியாக்களின் மூலம் கழிவுகளை சிதைத்து, நீர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நோய்க்கிருமிகள் மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறைக்கப்படுகின்றன.
நீர் சேமிப்பு: பயோ டாய்லெட்களால் தண்ணீர் பயன்பாடு வெகுவாகக் குறைகிறது. தண்ணீர் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால் நீர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக அமைகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த நீர் மற்றும் ஆற்றல் செலவு காரணமாக இது பொருளாதார ரீதியாக லாபகரமானது. இவை மொபைல் கழிப்பறை பயன்பாடுகளுக்கும் ஏற்றது.
பயனுள்ள வளங்கள்: மனிதக் கழிவுகளை நீர், மீத்தேன் வாயு மற்றும் கரியமில வாயுவாக மாற்றுவதால் இந்த வாயுக்களை ஆற்றலாகப் பயன்படுத்தலாம் அல்லது உரமாகவும் பயன்படுத்தலாம். நிலையான சுகாதார தீர்வாக இந்த பயோ டாய்லெட் செயல்படுகிறது. இவை ரயில்வே, கிராமப்புற பகுதிகள், அவசரக்கால முகாம்கள், சுற்றுலா தலங்கள், பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய சிறிய கழிப்பறைகள் போன்றவற்றிற்கு ஏற்றதாக உள்ளது.