

இந்த கொளுத்தும் வெயிலை தாங்கிக்கிட்டு நம்மளால இங்க இருக்க முடியாதுப்பா. குலு மணாலி இல்லேன்னாலும், கொடைக்கானலுக்காவது பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போய்ட்டு அப்படியே மதுரையையும் பார்த்துட்டு வரலாம்" ன்னு புறப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறீங்களா? அப்படியானால், தொட்டிகளில் இருக்கும் உங்க வீட்டு செடிகளை எப்படி பாதுகாக்கப் போறீங்க? இதோ..உங்களுக்கான ஆலோசனைகள்...
நீங்கள் ஊருக்குப் புறப்படும் நாளில், இன்-டோர் மற்றும் அவுட்-டோர் செடிகளுக்கு தேவையான தண்ணீரை ஊற்றிவிட்டு, அவைகளை நிழற்பாங்கான இடங்களுக்கு நகர்த்தி வைத்துவிட்டுச் செல்லுங்கள். அதனால் நீங்கள் ஊற்றிச் சென்ற தண்ணீர் கூடுதலாக இரண்டு நாட்கள் செடிகளுக்கு ஈரப் பதம் அளித்து செடிகள் வாடிவிடாமல் பாதுகாக்க உதவிபுரியும்.
வீட்டில் செடிகளை வைத்து நல்ல முறையில் பராமரித்து வளர்ப்பதென்பது சுலபமான காரியமல்ல. சில வகை செடிகளை சிறந்த முறையில் ஆரோக்கியமானதாக 'தள தள' வென்று வளர்த்துவிட்டு, நீங்கள் வெகேஷனில் செல்லும் காரணத்திற்காக, அவற்றை வாடி வதங்கி இறந்துபோகும் நிலைக்கு கொண்டு செல்வது நியாயமான செயலாகாது. அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் நீங்கள் திரும்பிவிட்டால் அவற்றை மீட்டெடுத்து உயிர்ப்பித்து விடலாம்.
தொட்டியில் உள்ள மண்ணின் தன்மை, செடிக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தின் அளவு, செடியின் உயிரியல் கட்டமைப்பு மற்றும் அது வளர ஆரம்பித்த பின் கடந்துள்ள கால அளவு, அதாவது அது புதிதாக முளைத்து சில நாட்களே ஆகியிருப்பது, போன்ற காரணிகளும் அச் செடிக்கு நாம் கொடுக்க வேண்டிய கவனிப்பின் அளவை நிர்ணயம் செய்கின்றன.
செடிகளை ஒன்றோடொன்று அருகருகே கூட்டமாக இருக்குமாறு வைத்து, அவற்றின் மீது படும் சூரிய ஒளியின் அளவும் மிகக் குறைந்திருக்குமாறு வைத்துவிட்டால் தேவைப்படும் நீரின் அளவு குறையும். செடிகளின் ஆயுளும் நீடிக்கும்.
தொட்டிச் செடியை அப்படியே தூக்கி சிங்க்கில் வைத்து தண்ணீரை திறந்து விட்டு, செடியை சுற்றி இரண்டு அங்குல உயரத்திற்கு நீர் வந்ததும் குழாயை மூடிவிடலாம். அரைமணி நேரம் அப்படியே வைத்து செடி முழுமையாக நீரை உறிஞ்ச அனுமதிக்கலாம். அதன் பின் எஞ்சி நிற்கும் நீரை நன்கு வடித்து விட்டு வைப்பது பலன் தரும். செடியின் வேரும் அழுகிவிடாமல் பாதுகாக்கப்படும். அதிக பட்ச உஷ்ணம் அல்லது மிகக்குறைந்த அளவு சூரிய ஒளி படும்படி வைப்பது செடிக்கு ஆரோக்கியம் தராது.
செடிகளை சுற்றி தாம்பாளங்களில் கூளாங் கற்களை போட்டு அதன் மீது நீரை ஊற்றி வைப்பதும் செடிகள் வாடிவிடாமல் ஈரப் பதத்துடன் இருக்க உதவும். பாத்ரூமில் வைப்பதும் செடிகள் குளிர்ச்சியுடனிருக்க உதவி புரியும்.
செடிகளின் அருகே Grow Light எனப்படும், செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒளியின் அளவையும் உயரத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடிய சிறப்பு மின்சார விளக்கு ஒன்றை நிறுவி வைத்துவிட்டு செல்லலாம்.
கயிறு போல் திரித்த ஒரு காட்டன் துணியின் ஒரு நுனியை நீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டுவிட்டு மறு நுனியை செடி உள்ள தொட்டியின் மண்ணிற்குள் இரண்டு அங்குல ஆழத்திற்கு புதைத்து விட்டால், நீருக்குள் இருக்கும் நுனி வழியே உறிஞ்சப்படும் தண்ணீர் பஞ்சுக் கயிற்றின் வழியே கசிந்து செடியின் வேர் பகுதியை அடைந்து விடும். தொட்டியில் ஈரப்பதம் நிலைக்க இது ஒரு சிறந்த வழி.
மல்ச்சிங் (Mulching) எனப்படும் மற்றொரு வழி, செடியின் ஈரப்பதம் இரண்டு வாரங்கள் கூட குறையாமல் பாதுகாக்க உதவும். இதில் மரத்தூள், காய்ந்த இலை சருகுகள் மற்றும் தேங்காய் நார் வைக்கோல் போன்றவற்றை செடியை சுற்றியுள்ள மண் மேல் முழுக்க நிரப்பி பிறகு நிறைய தண்ணீரை ஊற்றி நன்கு ஈரப்படுத்திவிடுவர். இதனால் மண்ணுக்குள் இறங்கிய தண்ணீர் உஷ்ணத்தினால் நீராவியாகி வெளியேறுவது தடுக்கப்படும். மல்ச்சிங்கிற்காக போடப்பட்ட பொருட்கள் மீது கலந்திருக்கும் நீரும் பல நாள் அதிலேயே தங்கியிருந்து செடிக்கு குளிர்ச்சி தந்துகொண்டிருக்கும்.
வெளியூர் கிளம்பும் முன் செடிகளுக்கு பாதுகாப்பு தர மேற்கூறிய வழிகளைப் பின் பற்றி பயனடையுங்க.