சுவாச மண்டலத்தை பெரிதும் பாதிக்கும் பட்டாசு புகை!

Firecracker smoke
Firecracker smoke

தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா. இருளை நீக்கி ஒளியை ஏற்படுத்தும் விழா. தீமைகளை அழித்து நன்மைகளை வரவேற்கும் விழா. நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை நமக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் புகை ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

பட்டாசுகள் வானத்தை ஒளிரச் செய்யும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றாலும், அவற்றிலிருந்து வெளிப்படும் நச்சு இரசாயனங்கள் நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது. காற்று மாசுபடுதலில் பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின்போது சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் சுவாசக் கோளாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை நச்சு காற்று வெளிப்பாடுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டவை.

பட்டாசுகள் இரண்டு அடிப்படை இரசாயனக்கூறுகளால் தயாரிக்கப்படுகின்றன. உப்பு, கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட், குளேரைட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும், உலோக உப்புகளான ஸ்ட்ரோன்டியம் கார்பொனேட், லிதியம் கார்பொனேட், கால்சியம் குளோரைடு, சோடியம் குளோரைடு, பேரியம் கலவைகளினால் தயாரிக்கப்படுகின்றன. இவைதான் பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் தீக்கு வண்ணம் சேர்க்கின்றன.

பட்டாசுகளை வெடிக்கும்போது அல்லது பட்டாசுகளை எரிக்கும்போது அதிலிருந்து நுண்ணிய துகள்கள் வெளிப்பட்டு அவை காற்றில் கலந்து நிலைநிறுத்தப்படுகின்றன. சல்ஃபர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை காற்றில் கலந்து வளிமண்டலத்தில் இருந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. இவை சுவாசத்தை பாதிக்கின்றன.

தீபாவளி நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் மூச்சுத் திணறல், சுவாச நோய் தொற்றுகள், ஆஸ்துமா போன்றவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட 40 சதவீதம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நுண்ணிய துகள்களின் வெளிப்பாடு கண், மூக்கு,தொண்டை மற்றும் நுரையீரல்களில் எரிச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற குறுகியகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. சிலருக்கு நுரையீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

தீபாவளியின்போது எரிக்கப்படும் பட்டாசுகளின் பல்வேறு இரசாயனக்கூறுகள் தாமிரம், காட்மியம், துத்தநாகம், ஈயம், மக்னீசியம், சோடியம் போன்றவை இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறனை குறைக்கும் தன்மை படைத்தவை.

தீபாவளியை விளக்குகளின் திருவிழா என்று அழைப்பர். ஆனால், பட்டாசுகள் எரிப்பதாலும், மரக்கட்டைகளை எரிப்பதாலும் காற்றின் தரம் மோசமடைந்து மூச்சுத் திணறல், திருவிழாவாக இது மாறியுள்ளது. குளிர்கால மாசு, புகை, நுரையீரலை மட்டும் பாதிக்காது. கண்கள், மூக்கு மற்றும் தொண்டையை எரிச்சலடையச் செய்யும். ஒருவர் கண்களில் எரியும் உணர்வைக் கூட அனுபவிக்கலாம். மேலும், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற சுவாச நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம். எனவே, நுரையீரலை பாதிக்கும் தீபாவளி மாசுபாட்டிலிருந்து விடுபட, நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிப்பு; கண்கள் பாதுகாப்பு… என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
Firecracker smoke

1. காற்று மாசுபாட்டின் தரம் அறிந்து வெளியே செல்லுங்கள். மாசு அதிகமாக இருந்தால் வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்கள்.

2. தீபாவளி நாட்களில் பட்டாசு குப்பைகளை திறந்த வெளியில் எரிப்பதை தவிர்த்திடுங்கள்.

3. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து காற்றில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதனால் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை ஏற்படும். எனவே, மெழுகுவர்த்திகள், தீபங்களை வரிசையாக ஏற்றுவதை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக எல்இடி விளக்குகளை ஏற்றினால் புகை மற்றும் காற்று மாசுபாட்டை தவிர்க்கலாம்.

4. நீங்கள் வெளியில் செல்லும்போது முகமூடி அணிந்து செல்லுங்கள். மற்றவர்களையும் முகமூடி அணிய வலியுறுத்துங்கள். இது சுவாசக் கோளாறுகளைத் தடுக்க உதவும்.

5. நீங்கள் குடியிருக்கும் பகுதியில் செடிகளை நட்டு வளர்த்து வாருங்கள். இவை இயற்கை காற்று சுத்திகரிப்பான்களாகச் செயல்படும். இவை காற்று மாசுகளை வடிகட்டிவிடும். இப்போது காற்று சுத்திகரிப்பான் கருவிகளும் வந்துவிட்டன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com