மைனஸ் வெப்பத்திலும் சுறுசுறுப்பாகும் ‘ஸ்னோ ஈ’: பனிக்கட்டியை வெல்லும் அதிசய பூச்சி!

சிறகில்லா சிறு பூச்சி, பனிமலைகளில் தன்னிறைவு உஷ்ண உற்பத்தி; தனித்துவ DNA, RNA ஆய்வுகள் மூலம் மருத்துவம்–உயிரியல் துறைக்கு புதிய வாய்ப்புகள்.
snow-flea
snow-flea
Updated on

மீபத்தில் விஞ்ஞானிகள், உறை பனியிலும் தன் உடலுக்குள்ளே உஷ்ணத்தை உற்பத்தி செய்து, குளிர் எந்தவித தாக்கத்தையும் தன் உடம்பில் ஏற்படுத்தி விடாமல் பாதுகாத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அபூர்வ பூச்சி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் உடலுக்குள் உற்பத்தியாகும் ஆன்டி-ஃபிரீஸிங்  (anti-freezing) ப்ரோட்டீனானது இதன் உடல் மீது பனி விழுந்து ஐஸ் கட்டிகள் உருவாவதைத் தடுத்து நிறுத்துகிறது.

மேலும் உடலுக்குள் உஷ்ணத்தையும்  உற்பத்தி செய்துகொள்கிறது. இந்த பூச்சிகளின்  மரபணுக்களும் வழக்கத்திற்கு மாறாக தனித்துவம் கொண்டுள்ளதாகவும், மற்ற பூச்சிகள் அனுபவிக்கும் குளிர்கால வலிகள் இவற்றிக்கு ஏற்படுவதில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

ஜீரோ டிகிரிக்கும் கீழான வெப்ப நிலையிலும் இந்த ஸ்னோ ஈ (Chionea alexandriana) குளிரை எதிர்த்து நிற்கக்கூடிய திறன் பெற்றுள்ளது. தோற்றத்தில் இது மற்ற சாதாரண பூச்சிகளைப்போல் இருந்தாலும், உயிர் வாழ்வதற்கு இதன் உடற் கூறுகள் பின்பற்றும் வழி முறைகள் அசாத்தியமானவை.

வடமேற்கு நாடுகளின் பல்கலைக் கழகங்களின்  விஞ்ஞானிகள், அதிசயிக்கத்தக்க உயிரியல் உபகரணங்களின் கலவையே, இந்த சிறகில்லாத சின்னஞ் சிறு பூச்சிகளை, ஐஸ் கட்டிகள் படர்ந்து விரிந்த  மலைப்பகுதிகளில், தம் மெல்லிய உடல் மற்றும் நீண்ட கால்களின் உதவியால் அங்கும் இங்கும் நடந்து சென்று, துணையைத்தேடி, முட்டையிட்டு இன விருத்தி செய்யவும், தொடர்ந்து உயிர் வாழவும் உதவுகின்றன என்கின்றனர்.

உறைய வைக்கும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல், பிற பாலூட்டி இன உயிரினங்களைப் போல் இவையும் தமக்குத் தாமே  உஷ்ணத்தை உற்பத்தி செய்துகொள்கின்றன. ஆர்ட்டிக் பகுதிகளில் வாழும் ஃபிஷ்களைப்போல் இவை ஆன்டி-ஃப்ரீஸிங் ப்ரோட்டீனை தாமே உற்பத்தி செய்துகொண்டு -6 டிகிரி செல்ஷியசிலும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எந்தவித சூழ்நிலையிலும் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகின்ற இவற்றின் தனித்துவம் மிக்க உடலமைப்பு மற்றும் செல்கள், திசுக்கள் போன்றவற்றை கடுங்குளிரினால் சேதமடையாமல் பாதுகாக்க உதவும் வழிமுறைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பெரிய அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வெக்கேஷனுக்கு போகிறீங்களா? வீட்டிலுள்ள தொட்டிச் செடிகளை வாடாமல் காக்க இந்த எளிய டிப்ஸ்!
snow-flea

பொதுவாக பூச்சியினம் குளிர் இரத்தம் கொண்ட உயிரினமாகும். சுற்றுப்புற சூழலில் உஷ்ணம் உறை நிலைக்குக் கீழே போகும்போது மற்ற பூச்சி இனங்கள் தகுந்த இடம் ஒன்றைக் கண்டு பிடித்து அங்கே செயலற்று முடங்கி உறக்க நிலைக்குச் சென்றுவிடும். நிலைமை சீரான பின் இயல்பு நிலைக்கு அவை திரும்பும். ஆனால் ஸ்னோ ஈ தன் இயல்புகளை முடக்கி, செயலற்றதாகிவிடாமல் சுறு சுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும்.

உஷ்ண நிலை அதிகரித்து பனிக்கட்டி உருகி ஓடும்போது அது  மறைவிடம் தேடி ஒளிந்து கொள்ளும். பல்வேறு வழிகளைப் பின்பற்றி அது குளிரை எதிர்த்துப் போராடும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளது. அரிய மற்றும் விசித்திரமான குணாதிசயம் கொண்ட இப் பூச்சியின் DNA மற்றும் RNA க்களை பகுப்பாய்வு செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் உயிரியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவக்கூடும்.

logo
Kalki Online
kalkionline.com