அதிக மகசூல் பெற இந்த 4 வகையான மண்களின் தன்மையை தெரிந்து கொள்வோமா?

Soil Problems
Soil Problems

விவசாய நிலங்களில் தற்போது என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன மற்றும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தெளிவாக விளக்குகிறது இந்தப் பதிவு.

விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருப்பினும் இதற்கு மண்ணின் தரம் தான் அடிப்படை. விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிரிடுவது மகசூலை அதிகரிக்க உதவும். மண்ணில் பொதுவாக இருக்கும் பிரச்சினைகளான அமில, உவர், களர் மற்றும் சுண்ணாம்பு நிலையை அறிந்து, அதனை எப்படி சரிசெய்வது என்பதை விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அமில மண்:

அமில மண்ணில் PH மதிப்பு 6-க்கும் குறைவாக இருக்கும். இவ்வகையான மண்ணில் சுண்ணாம்பு சத்து குறைவாக இருப்பதால், நுண்ணுயிர் வளர்ச்சி தடைபடும். ஆகையால் இம்மண்ணில் சூப்பர் பாஸ்பேட் உரத்தை இடக்கூடாது. அமில மண்ணில் விளையும் பயிர்களின் வேர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காத காரணத்தால், வேர் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும்.

சீர்திருத்தம்: அமில மண்ணில் மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விதைப்பு அல்லது நடவிற்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாகவே சுண்ணாம்பினை இட வேண்டும். மேலும், அமிலத் தன்மையற்ற உரங்களை இட வேண்டும்‌. ஆமணக்கு, நெல், எலுமிச்சை, சிறுதானியங்கள், மக்காச்சோளம் மற்றும் பப்பாளியை இம்மண்ணில் பயிரிடலாம்.

உவர் மண்:

உவர் நிலத்தில் உப்பின் தன்மை அதிகமாகவோ அல்லது மத்திய நிலையிலோ இருக்கும். உப்புத் தன்மை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் பயிர்கள் சரிவர வளராமல், நட்டது நட்டபடி அப்படியே வளர்ச்சி ஏதுமின்றி இருக்கும். மண்ணில் இருக்கும் சத்துகளை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் பயிர்களின் வேர் இருக்கும் என்பதால், வேர் வளர்ச்சி முற்றிலும் தடைபடும்.

சீர்திருத்தம்: நிலத்தைப் பண்படுத்தும் பண்டைய முறைகளில் ஒன்றான ஆட்டுக்கிடை போடுதல் உப்பு நிலத்தை சரிசெய்யப் பயன்படும் மிகச் சிறந்த வழியாகும். மேலும் இயற்கை உரமான தொழு உரத்தையும் பயன்படுத்தலாம். வடிகாலை சீராக மாற்றி, மழைநீர் அல்லது கிணற்று நீரை நிலத்தில் தேக்கி வைத்தால், உப்பானது நீரில் கரைந்து இதன் அளவு குறையும். உவர் நிலத்தில் தாக்குப் பிடிக்கும் தக்காளி, பருத்தி, சோளம் மற்றும் மிளகாயை இந்நிலத்தில் பயிரிடலாம்.

இதையும் படியுங்கள்:
மண் வளத்தை அறிந்துகொள்ள உதவும் 'தமிழ் மண் வளம்' இணையதளம்!
Soil Problems

களர் மண்:

களர் நிலத்தில் PH மதிப்பு 8.5-க்கும் மேல் இருப்பதால், சோடியம் கார்பனேட் அதிகளவில் இருக்கும். இம்மாதிரியான நிலங்கள் கரிசல் மண் இருக்கும் பகுதிகளில் அதிகமாக உள்ளன. சேராக இருக்கும் நிலம் காய்ந்த பிறகு, கெட்டியாக மாறிவிடும். இதில் காற்றோ தண்ணீரோ ஊடுருவிச் செல்ல முடியாததால், நிலத்தை உழுவதற்கு கடினமாக இருக்கும். நிலத்தில் இருக்கும் சோடியம் உப்பு பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பதால், பயிர்கள் எரிந்தது போன்று இருக்கும்.

சீர்திருத்தம்: களர் நிலத்தை மண் பரிசோதனை செய்து, ஆய்வு முடிவுகளைப் பொறுத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு ஜிப்சத்தை இட்டு உழ வேண்டும். மேலும் மழைநீரைத் தேக்கி வைத்து தக்கைப் பூண்டு, கொளஞ்சி போன்ற பசுந்தாள் உரங்களைப் பயிரிட்டு நிலத்தைப் பண்படுத்தலாம். ராகி, திருச்சி நெல்.1.கோ.48, பருத்தி, சூரியகாந்தி மற்றும் மிளகாய் போன்ற பயர்கள் களர் நிலத்தில் நன்றாக வளரும்.

சுண்ணாம்பு மண்:

சுண்ணாம்பு மண்ணில் கால்சியம் கார்பனேட் 5%-க்கும் அதிகமாக இருப்பதால் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக் குறைபாடு இருக்கும். இந்நிலத்தில் பயிர்களின் வளர்ச்சி குன்றியிருக்கும்.

சீர்திருத்தம்: பரிந்துரைக்கப்பட்ட அளவு நுண்ணூட்டச் சத்துகள், பசுந்தாள் உரம், தழை உரம் மற்றும் தொழு உரத்தை இட்டு நிலத்தைப் பண்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com