விவசாயத்தில் மகசூலை அதிகப்படுத்த நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் முக்கியமானது. அதில் ஒன்று தான் மண் பரிசோதனை. பொதுவாக பயிர்களுக்கு ஏற்றவாறு தான் விவசாயிகள் உரமிடுவார்கள். ஆனால், மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிர்களுக்கு உரமிட்டால், மகசூலும் அதிகரிக்கும்; மண் வளமும் பாதுகாக்கப்படும். மண் பரிசோதனைக்கும் உரமிடுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
விவசாயிகள் நிலத்தில் பயிர் செய்வதற்கு முன்பாக, மண்ணைப் பரிசோதனை செய்வது நல்லது. மண் பரிசோதனையின் மூலம் மண்ணின் தரம், எந்தப் பயிர் நன்றாக வளரும் மற்றும் மண்ணிற்கேற்ற உரங்கள் போன்ற பலவற்றை நம்மால் அறிந்து கொள்ள முடியும். பரிசோதனையின் முடிவில் மண் வள அட்டை வழங்கப்படும். இதில் அனைத்துத் தகவல்களும், மண்ணிற்கேற்ற பரிந்துரைகளும் இருக்கும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உரங்களை அளவாகப் பயன்படுத்தும் போது, தேவையற்ற உரச்செலவைத் தடுக்க முடியும்.
மண் பரிசோதனை செய்யாமல் அதிகளவில் உரங்களை இடுவதனால், மண்ணில் காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை ஆகிய இரண்டும் அதிகமாகிறது. இதனால் பயிர்கள் மிக எளிதில் சாய்ந்து விடும். அதோடு, மண்ணில் இருக்கும் சத்துகளை பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாமல் போகிறது. மேலும் பயிர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் மண்ணில் அழிந்து விடும்.
பயிர் அறுவடை முடிந்த பிறகு, மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துகள் வெகுவாக குறைந்து விடும். இந்நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை அறிந்து கொள்ள முடியும். மண் வளத்தினை நிலைநிறுத்தினால், விளைபொருள்களின் உற்பத்தி அதிகரித்து, நல்ல இலாபம் பெறலாம். மண்ணில் உள்ள சத்துகள் சரிவிகித அளவில் இருப்பதை உறுதி செய்வதற்கும் சரியான நேரத்தில் மண் பரிசோதனை செய்வது அவசியம்.
மண்ணிற்கேற்றப் பயிர்களை விளைவிப்பதும் முக்கியமானது. ஒவ்வொரு மண் வகையிலும், அதற்கேற்றப் பயிர்களை விளைவிக்கும் போது மகசூல் அதிகமாக கிடைக்கும். மண்ணின் தரம், பயிரின் தேவை மற்றும் உர உபயோகத் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் உர மேலாண்மை இருக்க வேண்டும்.
மட்கிய தொழு உரம் மற்றும் உயிரி உரங்களை விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். உயிரி உரமான அசோஸ்பைரில்லம், காற்றில் இருக்கும் தழைச்சத்துகளை பயிர்களுக்கு கொடுக்கின்றது. திரவ பொட்டாஷ் மண்ணில் இருக்கும் சாம்பல் சத்தையும், பாஸ்போபாக்டீரியா மண்ணில் இருக்கும் மணிச்சத்தையும் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கின்றன. மண் பரிசோதனையின் முடிவில் பெரும்பாலும் உயிரி உரங்கள் தான் பரிந்துரை செய்யப்படுகின்றன.
பயிர்களின் நிறமானது அதிகளவு பச்சை நிறத்தில் இருந்தால், தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆகவே தேவையற்ற உரங்களையும், அளவுக்கு மீறிய உரங்களையும் தவிர்ப்பது நல்லது. காலநிலைக்கு ஏற்ப பூச்சித் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி தீர்வு காணலாம்.
'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்பது போல பயிர்களுக்கான உரத்தையும் அளவோடு இட்டால் மட்டுமே நன்மை பயக்கும். இல்லையெனில் மண் வளம் குறைவது உறுதி.