கோடைக்காலம் வந்துவிட்டாலே கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் வருவது இயல்பு. குளிக்க, வீட்டுத் தேவைக்கு போக மரம், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதென்றால் சற்று யோசிப்போம். ஆனால், மரஞ்செடி கொடிகளுக்கும் கட்டாயம் கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். கோடைக்காலங்களில் மரம், செடி, கொடிகளை வாடாமல் காக்க சில யோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.
வேஸ்ட் ஸ்பான்ஜ் துண்டுகளை பூச்செடிகளை சுற்றி போட்டு விட்டால் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். அதேபோல் தேங்காய் மட்டை நார்களையும் போட்டு நீர் ஊற்றினால் எப்பொழுதும் ஈரப்பதமாகவே இருக்கும்.
ரோஜா செடி வளர்க்கும் தொட்டியில் சிறிது உப்பு கலந்த தண்ணீர் ஊற்றினாலும் பூக்கள் வாசனையுடன் வளரும்.
முட்டை வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் சூடு ஆறியவுடன் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாக வளரும். உபயோகித்த டீ ,காபி தூளை ரோஜா செடிக்கு போட்டு விட்டால் அது நல்ல உரமாகிவிடும். அதேபோல் வடிகட்டிய தேயிலைத் தூளுடன் முட்டை ஓடுகளை கலந்து வெயிலில் உலர்த்தி செடிகளுக்கு நல்ல உரமாக போடலாம். முருங்கை மரம் அதிக காய்களை காய்க்க ஒரு சிறிய பாக்கெட் பெருங்காயத்தை மரத்தின் அடியில் புதைத்து விட வேண்டும்.
தினசரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்பொழுது பழுத்த, காய்ந்த காம்பு, இலைகளை அப்புறப்படுத்தி விட்டால் செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், புது தளிர் விடவும் ஏதுவாக இருக்கும்.
ரோஜா பூக்கள் உதிர ஆரம்பிக்கும்போது அவற்றை காம்புடன் கட் செய்து எடுத்து விட்டால் மொட்டுக்கள் அதிகம் விடும். பூத்துக் குலுங்கும்போது பார்த்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
முட்டை ஓடு,எரு மற்றும் சாம்பல் அனைத்தையும் நன்றாக உதிர்த்து குத்தி சலித்துப் போட்டால் தொட்டியில் இருப்பதை பார்க்கும்போது அழகாக ஒரே சீராக இருக்கும். தண்ணீர் குறைந்த அளவு விட்டாலும் போதும்.
துளசி செடி அதிகம் உயரமாக வளரும்பொழுது சாய்ந்து போகும். அதனால் அதற்கு நல்ல உயரமான குச்சியை முட்டுக் கொடுத்து கட்டி வைத்து விட்டால் விழாமல் காக்கலாம். தேங்காய் நாருடன் சாம்பல் மற்றும் மற்ற செடிகளுக்கு போடும் உரங்களை கலந்து தூவினால் துளசிச் செடி நன்கு செழித்து வளரும்.
சிறுகீரை ஒரு ஜான் அளவு வரும்போதுபறித்து விட வேண்டும். அப்பொழுதுதான் சமைப்பதற்கு ருசியாக இருக்கும். வீட்டில் வளர்க்கும் செடியை கொஞ்சம் அதிகமாக வளர விட்டு விட்டால் தண்டுகளை சமைக்க முடியாது. மிகவும் கடினமாகிவிடும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை பயிரிடும் பொழுது அவை நன்றாக வளரும் வண்ணம் தரை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நன்றாக காய்க்கும் .நெகிழ்வான மண் இல்லை என்றால் கிழங்குகள் சரிவர வேர் விடாது.
சேனைக்கிழங்கை ஒருமுறை பயிரிட்டு விட்டால் ஒவ்வொரு வருடமும் மழை வரும் பொழுது அதில் இலை வரும். பிறகு செடி பெரிதாக வந்ததும் எடுத்துப் பார்த்தால் பெரிய கிழங்கு உள்ளே இருக்கும். பிறகு அடுத்த வருடம் மழை வரும் பொழுதும் அதில் கிழங்கு இருப்பதை காணலாம்.
ஓமவல்லி, பிரண்டை, வெற்றிலையை தென்னை மரத்தின் மேல் ஏற்றி விட்டால் போதும் .அதற்காக பிரத்தியேகமாக எந்த கவனிப்பும் செலுத்த வேண்டியது இல்லை. தென்னைக்கு விடும் தண்ணீரிலேயே நன்றாக வளர்ந்துவிடும்.
கொய்யா, எலுமிச்சை, சாத்துக்குடி, சப்போட்டா, மா போன்ற மரங்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் போட்டால் போதும். அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக செழித்து வளரும். அதிகமான காய்கனிகளை கொடுக்கும். அந்தந்த மரங்களில் கிடைக்கும் இலை தழைகளை நன்றாக மக்க வைத்துப் போட்டாலே நல்ல விளைச்சல் கொடுப்பதை கண்கூடாகக் காணலாம்.