
செரிமானம் சிறக்க, பார்வைத்திறன் மேம்பட, நச்சு நீங்க, கூந்தல் வளர, இதய ஆரோக்கியம் காக்க என பல வகையான நன்மைகளை நம் உடலுக்குத் தரக்கூடியது கறிவேப்பிலை. நம் தோட்டத்திலுள்ள கறிவேப்பிலை செடி ஆரோக்கியமாக செழித்து வளர உதவும் 8 வகை ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை செடிக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேர நேரடி சூரிய ஒளி கிடைப்பது மற்றும் காற்றோட்டம் நிறைந்த இடம் அமைவதும் அவசியம்.
கறிவேப்பிலை செடியின் நுனிப்பகுதியை குறிப்பிட்ட இடைவெளிகளில் கத்தரித்துவிடுவது அவசியம். ஏனெனில், கத்தரித்த இடத்திலிருந்து இரண்டு மூன்று புதிய தளிர்கள் துளிர்விட்டு வளரத்தொடங்கும். பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் அடிக்கடி நுனியை கத்தரித்துவிடுவதால் புதிய கிளைகளும் இலைகளும் தோன்றி செடி செழித்துவளரும்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கறிவேப்பிலை செடியை சுற்றியுள்ள மண்ணின் தன்மையை சோதித்துப் பார்த்து, குறையிருப்பின் மண் கலவையை மாற்றியமைப்பது முக்கியம்.
அடிக்கடி செடியை சுற்றியுள்ள மண்ணை நன்கு கிளறிவிட்டு, உரம் போடவேண்டும். காற்று, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இலகுவாக செடியின் வேர்ப் பகுதியை சென்றடையும் வகையில் மண் கெட்டித் தன்மையற்று லூசாக இருப்பது அவசியம்.
நைட்ரஜன் சத்து அதிகம் உள்ள உரக்கலவையை கறிவேப்பிலை செடிக்குப் போடுவது அதிக நன்மை தரும்.
பசுஞ்சாண உரத்தில் நைட்ரஜன் அதிகம் உள்ளது. இதைக் கரைத்து கறிவேப்பிலை செடிக்கு ஊற்றும்போது இலைகள் நல்ல பச்சை நிறம் கொண்டு அடர்த்தியாக வளரும் வாய்ப்பு உருவாகும்.
கறிவேப்பிலை செடி அடர்த்தியாக புதர்போல் வளர உதவும் சிறந்ததொரு டானிக் மோர். அதிகம் புளிக்காத மோரை அவ்வப்போது செடிக்கு ஊற்றி வளர்த்தால் இலைகள் அடர் பச்சை நிறத்தில் நன்கு செழித்து வளரும். கால் டம்ளர் மோரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றுவது சிறப்பு.
இத்தனை கவனமுடன் வளர்த்து வரும் இச்செடியின் இலைகளைத் தின்று தீர்க்க பச்சை நிறத்தில் ஒரு புழு எனிமியாக உருவாகி வரும். எந்த காரணமுமின்றி கிளையில் உள்ள ஒரு இணுக்கில் எல்லா இலைகளும் காணாமல் போய் குச்சி மட்டும் நீட்டிக்கொண்டிருந்தால் இதன் வருகையை தெரிந்துகொள்ளலாம். உன்னிப்பாக தேடிக் கண்டு பிடித்து அவைகளை தூர அப்புறப் படுத்துவது மிக மிக முக்கியம்.
கறிவேப்பிலை செடியை அடிக்கடி கத்தரித்துவிட்டு, நல்ல உரமளித்து, மண்ணின் தன்மையைப் பரிசோதித்து மாற்றியமைத்து, அவ்வப்போது எழும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து கவனமுடன் வளர்த்து வந்தால் நற்பலன் பெறலாம்.