
பூக்கும் சில வகை மரங்களை அழகுக்காக மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான உபயோகத்திற்கும் தகுந்தவாறு பலரும் வளர்க்கிறார்கள். அதுபோல், வளர்க்கப்படும் மரங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
மரமல்லி: இந்த மரம் நேராகவும் மிகவும் உயரமாகவும் வளரக்கூடிய பசுமை மாறா மரமாகும். இதன் இலைகள் தொங்கும் கிளைகளில் அடர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்திலும் அதிக நறுமணத்துடனும் பூக்கும் திறன் கொண்டவை. ஆகையால், இவ்வகை மரங்கள் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள இடங்களிலும், கழிவு நீர் குட்டைகள் நிறைந்துள்ள இடம், மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் நறுமணத்துக்காக நடப்படுகின்றன.
நாகமல்லி: இந்த மரம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இயற்கையாகவே காணப்படுகின்றன. இது அடர்ந்த மிகப்பெரிய பசுமை மாறா மரம் ஆகும். மரத்தின் இலைகள் மிகப் பெரியதாகவும் மிகவும் அடர்த்தியானதாகவும் வளரும் தன்மை கொண்டவை. இம்மரத்தின் பூக்கள் பெரியதாகவும் கோப்பை வடிவத்திலும் அமைந்து மரத்திலிருந்து ஒரு பூங்கொத்து தொங்குவதை போல் காட்சி அளிப்பதால் இம்மரம் வீடுகளிலும், சாலை ஓரங்களிலும், கல்வி நிலையங்களிலும் அதிக அளவில் வளர்க்கப்படுவதுடன், இந்த மரத்தின் காய்கள் மிக நீளமாகவும், பாட்டில் வடிவத்திலும் மரத்திலிருந்து தொங்கி அழகைக் கொடுக்கும்.
காட்டு இலவு: இம்மரத்தின் இலைகள் மேற்பகுதியில் பச்சையாகவும் அடிப்பகுதியில் வெளிர் வெள்ளை நிறத்திலும் காட்சியளிக்கும். இலையுதிர் காலங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்து மிக அழகாகக் காட்சியளிக்கும். இம்மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பிசின் பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு உகந்தது. இம்மர பஞ்சுகள் இலவம்பஞ்சுக்கு மாற்றாகவும், விதைகள் உணவுப் பொருளாகவும் பயன்படுகிறது. இந்த மரம் வறண்ட நிலங்களிலும், பூங்காக்களிலும், கோயில்களிலும் வளர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
நெட்டிலிங்கம்: மிக உயர்ந்த பசுமையான மரம் இது. இதன் தண்டு நேராகவும் கிளைகள் நேர்எதிராகவும் வளர்ந்து பிரமிடு போன்ற தோற்றத்தை உருவாக்கும். இம்மர இலைகள் பச்சையாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்தில் நட்சத்திர வடிவத்திலும் அமைந்து அழகைக் கொடுக்கும். இம்மரத்தில் இருந்து கிடைக்கும் பட்டை நார் உற்பத்திக்கும், மரங்கள் தடிமரம், பென்சில் மற்றும் பெட்டிகள் செய்வதற்கும் பயன்படுகின்றன. இம்மரம் நல்ல காற்று தடுப்பானாகவும் வீடு மற்றும் சாலைகளில் நிழல் தரும், அழகு தரும் மரமாகவும் நடப்பட்டு வருகின்றன.
கதளி: இம்மரத்தின் இலைகள் அடர் பச்சை நிறத்திலும், பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், காய்கள் மிக அடர்த்தியாகவும் இருக்கும். இம்மரக்கட்டைகள் தேக்கு மரத்துக்கு இணையாக வீடு மற்றும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இலை மற்றும் காய்களில் இருந்து டானின் என்ற வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
நீர் மருது: இம்மரம் நீர்நிலை ஓரங்களிலும் ஆற்று ஓரங்களிலும் வளரும் தன்மை உடையது. வெள்ளை மருது மிக உயரமாகவும், தண்டு பகுதி பெரியதாகவும், சாம்பல் நிறத்திலும் மென்மையான பட்டைகளைக் கொண்டு இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், கோப்பை வடிவத்திலும் காட்சியளிக்கும். வெள்ளை மருது மரம் சாலையோரங்களில் நடுவதற்கு மிக உகந்தது. இதன் அடிமரம் மரச்சாமான்கள் செய்வதற்கும், பட்டை மருத்துவ குணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.