உலகில் வாழும் பலவகையான பறவைகள் மற்றும் விலங்கினங்களின் உடல் உறுப்புகள் அவற்றின் உணவுத்தேடல், உணவு உண்ணும் முறை, இருப்பிடம், பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பலவகையான தேவைகளின் அடிப்படையில் ஒரு சில வேறுபட்ட அமைப்புகளில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு விலங்கின் கால்கள் போல மற்றொரு விலங்கின் கால்கள் அமைந்திருக்க வாய்ப்பில்லை. விலங்கினங்களில் முற்றிலும் வித்யாசமான வால் அமைப்பு கொண்ட 5 விலங்குகள் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த வகை நரி போன்ற முக வடிவம் கொண்ட லெமூரின் வால், அதன் உடலின் நீளத்தை விட அதிக நீளம் கொண்டது. வாலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான சிறு சிறு வளையங்களை ஒன்று விட்டு ஒன்றாக அடுக்கி வைத்தது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பது காண்போரை ரசிக்கத் தூண்டும். மேலும் இதன் வாலில் சுரக்கும் பெரோமோன்கள் (Pheromones) அலை அலையாக வெளியேறி அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தின் மூலம் எதிரிகளை விரட்டவும் செய்யும்.
இந்த வகை நரியின் வால் மிகவும் முக்கியத்துவம் மற்றும் தனித்துவம் கொண்டது. ஏனெனில் இது இரண்டு வகையான செயல்கள் புரிவதற்கு நரிக்கு உதவி வருகிறது. ஒன்று, நரி சம நிலையில் உட்கார உதவி புரிகிறது அதன் வால். மற்றொன்று, நரியின் உடல் சீரான வெப்பநிலையில் இயங்க (Thermoregulation) வும் வால் உதவுகிறது.
இவ்வகை அணிலின் வால் அதன் உடலின் நீளத்தை விட அதிக நீளமுடையது. மரங்களைச் சுற்றியே தன் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள (Arboreal) இந்த ஜயண்ட் அணில், மரங்களில் எளிதாக ஊசலாடவும், குதிக்கவும், உடலை சம நிலைப்படுத்தவும் இதன் வால் பயன்படுகிறது. மேலும் தன் குட்டிகளை மறைக்கவும், இரைச்சலான சூழலில் இருக்க நேரும்போது தான் ஒளிந்து கொள்ளவும் இது தன் வாலைப் பயன்படுத்திக் கொள்கிறது.
கங்காருவின் வால் அதற்கு ஐந்தாவது கால் போல பயன்படுகிறது. கங்காரு குதித்துக் குதித்து முன்னோக்கி செல்லும்போது, அதன் வால் அதற்கு உந்து சக்தி அளித்து முன்னேற உதவி புரிகிறது. கங்காரு நேராக நிமிர்ந்த நிலையில் அமரும் போதும், மற்ற கங்காருகளுடன் மோதல் ஏற்படும் போதும் அதன் உடல் சம நிலை பெற்று இயங்கவும் அதன் வால் சிறந்த முறையில் உதவி புரியும்.
பனிச் சிறுத்தையின் வால் பன்முகத்தன்மை கொண்டு பலவகையான செயல்கள் புரிவதற்கு சிறுத்தைக்கு உதவி புரிகிறது. உயரமான மலைப்பாங்கான பகுதிகளில் சிறுத்தை நடமாடும்போது அதன் உடலை சமநிலையில் வைத்துப் பராமரிக்க வால் உதவுகிறது. குளிர் காலத்தில் பனிச் சிறுத்தை தன் வாலால் உடலை மூடிக்கொண்டு கதகதப்புப் பெறும். பனிச் சிறுத்தை தன் இனத்தை சேர்ந்த மற்ற விலங்குகளுக்கு தன் நிலையை உணர்த்தவும், அவற்றுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் அதன் வால் உதவி புரிகிறது. மேலும் கொழுப்புகளை வாலில் சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளவும் வால் பயன்படுகிறது.