
உலகில் எல்லா வகையான இடங்களிலும், அதாவது நிலம், நீர், வனம் போன்ற வித்தியாசமான சூழல் உள்ள பகுதிகளில் வாழும் உயிரினங்கள், 'சாதாரண' மற்றும் 'விசித்திரமான' என இரு பிரிவுகளாகப் பிரிந்திருப்பதைக் காணலாம். அனைத்தும் இயற்கையின் படைப்பு என்று எடுத்துக்கொண்டாலும், சில உயிரினங்கள் விசித்திரமான தோற்றம் அல்லது குணங்களைக் கொண்டிருப்பதற்கு குறிப்பிட்ட சில காரணங்கள் கூறப்படலாம். அவ்வாறு விசித்திரமான தோற்றம் அல்லது குணமுடைய, ஆழ்கடலில் வாழும் 8 வகை விலங்குகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
1. வாம்ப்பையர் ஸ்குய்ட் (Vampire Squid): இதன் பெயருக்கு ஏற்றாற்போல் இது ஸ்குய்ட் வகையை சேர்ந்தது அல்ல. ஆக்டோபஸ் போன்ற தோற்றம் கொண்டது. வலை போன்ற மெல்லியதோர் அமைப்பு இதன் கைகளை இணைத்திருக்கும். இது தன் எதிரிகளை எதிர்கொள்ள, உயிரொளிர்வை (Bioluminescence) உற்பத்தி செய்து உடலின் உட்புறத்தை வெளிப்புறமாக மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை கொண்டது.
2. காப்ளின் ஷார்க் (Goblin Shark): இதை ஒரு ‘வாழும் புதை படிமம்’ (Living Fossil) என்கின்றனர். இதன் முகத்தில் தாடைகள் பன்றிகளுக்கு இருப்பதுபோல், தட்டையாக நீண்ட தோற்றத்துடன் அமைந்திருக்கும். வாய்க்குள் கூர்மையான பற்கள் உண்டு. தனக்கு உணவாகப் பயன்படும் பூச்சிகளையும் சின்ன மீன்களையும் சுலபமாகப் பிடிப்பதற்கு இந்த வாயமைப்பு உதவுகிறது.
3. ஜயண்ட் ஐசோபாட் (Giant Isopod): நீர்வாழ், ஓடுடைய மீனான இது, அதன் இனம் சார்ந்த கடல்வாழ் உயிரினங்களில் அசுரத்தனமான மிகப்பெரிய உருவம் கொண்டது. இதன் தோற்றம் கிட்டத்தட்ட ஒரு மிகப்பெரிய கடல்வாழ் கரப்பான் பூச்சி போலிருக்கும்.
4. ஃபேங்க் டூத் (Fangtooth): இந்த வகை மீனின் பற்கள், அளவில் அதன் உடலை விட மிகப்பெரிதாக இருக்கும். அப்பற்கள் அதன் வாய்க்குள் அடங்குவது கூட சிரமம்.
5. எட்டி கிராப் (Yeti Crab): இந்த வகை நண்டுகள், கடல் மட்டத்திற்குக் கீழே, எரிமலைப் பாறைகள் உள்ள பகுதியில் உருவாகும் நீர் வெப்பத் துவாரங்கள் (Hydro Thermal vents) அருகே வாழ்பவை. இதன் உடல் முழுவதும் நுண் முட்கள் போன்ற கடினமானதோர் அமைப்பு காணப்படும். இந்த முட்கள், இந்த நண்டு வாழும் இருப்பிடத்திலேயே அது உண்பதற்குத் தேவையான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தர உதவிபுரியும்.
6. பாரேலேயே ஃபிஷ்(Barreleye Fish): இந்த மீனின் தலை ஊடுருவக்கூடிய கண்ணாடி (Transparent) போன்ற அமைப்பு கொண்டது. அதன் மேலே மேல் நோக்கிய குழல் போன்று, தலையின் மீதே சுழன்று கொண்டிருக்கக் கூடிய இரண்டு கண்கள் உண்டு.
7. ஸ்நைப் ஈல் (Snipe Eel): இதன் உடல் மெலிந்த ஒல்லியான அமைப்பு கொண்டிருக்கும். பறவைகளின் தாடை போன்றும் மற்றும் கொஞ்சம் வளைந்த அமைப்பும் கொண்ட நீண்ட மூக்கு உண்டு. நீந்தும்போதே அருகில் வரும் பூச்சிகளைப் பிடித்து உண்ண இது பெரிதும் உதவி புரியும். சுமார் இரண்டு மீட்டர் நீளம் வளரக்கூடியது இந்த மீன்.
8. கடல் பன்றி (Sea Pigs): பிங்க் நிறம் கொண்டு கடலின் சகதியான தரைப் பரப்பில் வாழ்வது. இதன் வாயை சுற்றிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுக்கு அடியிலும் குழல் போன்ற கால்களைக் கொண்டது. இறந்த கடற்பாசிகள், சிறு சிறு பூச்சிகளை உணவாக உண்ணும். பெரிய அளவு மீன் செத்து விழும்போது, இதன் இனத்தைச் சேர்ந்த பல பன்றிகள் ஒன்று சேர்ந்து விருந்துண்ணும்.