Spider Conch - வேகமாக அழிந்து கொண்டிருக்கும் சிலந்தி சங்குகள்!

Spider Conch
Spider Conch
Published on

தமிழ்நாட்டில் ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில், வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்ட சிலந்தி சங்கு (Spider Conch) அதிக அளவில் இருக்கின்றன. இது பார்ப்பதற்கு சிலந்தியைப் போல் இருப்பதாலும், ஐந்து விரல்களைக் கொண்டு இருப்பதாலும், இதனை சிலந்தி சங்கு என்றும், ஐவிரல் சங்கு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். ஸ்ட்ரோம்பிடே எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்திச் சங்குகளின் விலங்கியல் பெயர் லேம்பிஸ் (Lambis) என்பதாகும்.

இவ்வகைச் சங்குகளில், ஆண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் கீழ் நோக்கி வளைந்தும், பெண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் மேல் நோக்கி வளைந்தும் காணப்படும். ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தில் இவை காணப்படுகின்றன. சிலந்திச் சங்குகள் அவை நகரும் இடத்தின் நிறத்திற்கேற்ப, அதன் மேற்புற ஓட்டின் நிறத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கக் கூடியவை. எனவே, இவை எளிதில் கண்களுக்குத் தெரிவதில்லை. இந்த வசதியைத் தங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுத்திக் கொள்கின்றன.

மாங்குரோவ்ஸ் எனப்படும் சதுப்பு நில காடுகளிலும், பவளப்பாறைகள் அதிகமாகவுள்ள பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டலக் கடல்களில் அதிகமாக வாழ்ந்தாலும், தீவுப்பகுதிகளின் கரையோரங்களில் சுமார் 5 மீட்டர் ஆழத்திலும் கூட இவை வசிக்கின்றன. கடலில் உள்ள பாசி வகைகளில் ஒரு வகையான சிவப்பு நிறப் பாசிகளைத் தின்று உயிர் வாழும் இவ்வினங்கள், ஆழம் குறைவான இடங்களில் வசிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சுவையான தக்காளி கடலைப்பருப்பு கூட்டு… வேற லெவல் டேஸ்ட்! 
Spider Conch

குறைந்தபட்சம் 18 செ.மீ. முதல் 29 செ.மீ. நீளம் வரை இது வளரும். அதிகக் கனமுடையதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் இந்தச் சங்கின் பின்புறம், இயற்கையாகவே மிகவும் பளபளப்பாக இருக்கும். இச்சங்கின் மேற்புற ஓடு வெள்ளை நிறத்திலும் பழுப்பு நிறப் புள்ளிகளை உடையதாகவும் இருக்கும். இச்சங்கிலுள்ள திடமான கால் பாதத்தின் உதவியால் கனமான அந்த ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிறப்பாய், களிப்பாய் வாழ… நல்ல விஷயங்களை சிந்தியுங்கள்!
Spider Conch

இதனுள்ளே இருக்கும் பூச்சி போன்ற உயிரினம் சுவை மிகுந்த இறைச்சியாக மீனவ மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சியை எடுத்த பிறகு, சுத்தப்படுத்தப்பட்டு மேலும் பளபளப்பாக்கி அலங்காரப் பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வினம் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால் வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com