நிலக்கடலையில் மகசூலை அதிகரிக்கும் யுக்திகள்!

Groundnut
Groundnut
Published on

விவசாயத்தில் ஒவ்வொரு பயிரிலும் மகசூலை அதிகரிக்க தனித்தனி யுக்திகள் கையாளப்படுகின்றன. சரியான நேரத்தில் விவசாயிகள் இந்த நுட்பங்களை பயன்படுத்தும் போது மகசூல் அதிகமாக கிடைக்கும். இதன்படி, நிலக்கடலையில் மகசூலை அதிகரிக்கும் யுக்திகள் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.

ஆடிப்பட்டத்தின் மானாவாரியில் விவசாயிகள் நிலக்கடலையை சாகுபடி செய்வார்கள். சில நேரங்களில் தாமதமான மழை காரணமாக நிலக்கடலை சாகுபடியைத் தள்ளிப் போடுவார்கள்.

நிலக்கடலை சாகுபடியில் பொக்கு விழுந்த நிலக்கடலைகள் வருவது தான், பொதுவாக விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. நிலக்கடலையில் பருப்பு இல்லாமல் இருப்பதையும், குறைவாக இருப்பதையும் பொக்கு விழுதல் என்று கூறுவார்கள். இதன் காரணமாக மகசூல் வெகுவாக பாதிக்கும்.

நிலக்கடலை சாகுபடி:

இறவை நிலக்கடலையில் 7:14:21 என்ற விகித அளவில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை உரமாக இட வேண்டும்‌. அதாவது 50 கிலோ பொட்டாஷ், 46 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ யூரியாவை அடியுரமாக இட வேண்டும். அதன்பின், 100 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ எம்என் மிக்ஸரை இட வேண்டும்.

பொதுவாக நிலக்கடலை சாகுபடி செய்யும் நிலத்தை மண் பரிசோதனை செய்த பிறகு, அதற்கேற்றப் பரிந்துரைப்படி உரமிடுவது நல்ல பலனைத் தரும்.

மானாவாரி நிலக்கடலையில் 4:4:18 என்ற விகித அளவில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை உரமாக இட வேண்டும்‌. அதாவது 100 கிலோ ஜிப்சம், 25 கிலோ பொட்டாஷ், 22 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 10 கிலோ யூரியாவை உரமாகத் தெளித்த பின், கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரத்தை இட வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு ஏறக்குறைய 33 செடிகள் வளரும் அளவிற்கு பயிர் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

களை மேலாண்மை:

நிலக்கடலை சாகுபடியில் இரண்டு முறை களையெடுப்பது அவசியம். விதைப்புக்குப் பிறகு முதல் களையை 20 - 25 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். இரண்டாவது களையை 40 - 45 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். நிலக்கடலையின் இடையிடையே பொதுவாக சாரணை முக்கீரட்டை காட்டு கீரை மற்றும் அருகு கோரை போன்ற களைகள் வளரும்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளே! DAP உரத்திற்கு மாற்று உரம் எது தெரியுமா!
Groundnut

களைகளைப் கட்டுப்படுத்த விதைப்புக்குப் பின் 3வது நாளில் ஒரு ஏக்கருக்கு ஆச்சிபுளுபனை 350 மிலி அல்லது 200 லிட்டர் தண்ணீரில், 1250 மிலி பென்டி மெத்திலினைக் கலந்து கைத் தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும். 21வது நாளில் பர்சூட் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மிலி தெளிக்க வேண்டும். புல் வகைக் களைகள் அதிகமாக இருப்பின், 200 லிட்டர் தண்ணீரில் 400மிலி டர்கா சூப்பரைக் கலந்து, 20 முதல் 30 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும்.

களைகளை கண்டுகொள்ளாமல் விட்டால், பயிர்களுக்கு சேர வேண்டிய சத்துகளை களைகள் எடுத்துக் கொள்ளும். இதனால், நிலக்கடலையில் பொக்கு விழுந்து மகசூல் குறையும்.

தேவையான அளவு ஜிப்சத்தை மண்ணில் இடும் போது, நிலக்கடலையில் பொக்கு விழுவது தவிர்க்கப்பட்டு, மகசூல் அதிகரிக்கும். ஆகவே, நிலக்கடலை விவசாயிகள் முறையான உரத்தை தேவையான நேரத்தில் இட்டு, களை மேலாண்மையைக் கையாண்டால் நிச்சயமாக மகசூல் உயரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com