
வெயிலும் மழையும்
இயற்கையின் கொடைகள்!
இரவும் பகலும்
மாறுவது போல...
இவையும் மாறி
இனிமையே சேர்க்கும்!
நாம்தான் கொஞ்சம்
நடவடிக்கை தன்னை...
இவற்றிற்கு ஏற்ப
மாற்றிட வேணும்!
கோடை வந்தால்
கோயில் விழாக்கள்
களைகட்டி நம்மைப்
பயணிக்க வைக்கும்!
நீர் ஆகாரங்கள்
நிறைய எடுத்தால்...
அச்சத்து குறைபாட்டை
அறவே போக்கலாம்!
வெயிலின் தாக்கம்
தொப்பியால் குறையும்!
சூரியக் கதிர்கள்
நேராய் விழுகையில்
வெளியில் செல்வதை
விரும்பியே தவிர்க்கலாம்!
ஒத்துக் கொள்ளும்
உணவுகள் தனையே
அளவாய் உண்டு
வயிற்றை நிறைக்கலாம்!
அளவை மீறினால்
அமிர்தமும் நஞ்சே!
பருத்தி ஆடைகள்
பாங்காய் உடுத்த
வியர்வை தானும்
வியந்து குறையும்!
மரத்து நிழல்கள்...
மாலைக் காற்று...
நிலவின் கீற்று...
நிம்மதி நல்கும்!
மாலைக் குளியல்
மகிழ்வைக் கூட்டும்!
இப்பொழுது எல்லாம்
ஏகமான மக்கள்
விடமின் டியின்
பற்றாக் குறையால்
மருந்து சாப்பிடும்
நிலையில் உள்ளனர்!
வெயில் தனில்தான்
அந்தச் சத்து
அதிகமாய் இருப்பதை
அறிந்திடல் நன்று!
கொஞ்ச நாள்தான்
கொளுத்தும் சூரியன்!
அப்புறம் அவரும்
வெப்பம் குறைப்பார்!
சூரியக் கிரகமே
சுகம் தருமென்று
அறிவோம் நாமும்!
அதனை ஏற்றே
வெப்ப நாட்களை
விரும்பிக் கடப்போம்!