அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடும் நபர்களுக்கு மீன்கள் பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும். அனைவரையும் கவர மீனின் சுவை ஒன்றே போதும். அவ்வகையில் பனையேறிக் கெண்டை மீனைப் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் ஆடு மற்றும் கோழிக் கறிகளைத் தேடிச் செல்லும் அசைவப் பிரியர்களுக்கு, மாற்று இறைச்சியாக மீன்கள் இருக்கிறது. மீன்களில் உள்நாட்டு மீன்கள் மற்றும் கடல் மீன்கள் என இரு வகைகள் உள்ளன. உள்ளூரில் இருக்கும் ஏரி, குளம் குட்டைகளில் வாழும் மீன்கள் உள்நாட்டு மீன்கள் எனவும், கடலில் வாழும் மீன்கள் கடல் மீன்கள் எனவும் அழைக்கப்படுகிறது. உள்நாட்டு நன்னீர் மீன்களில் உள்ள பல வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த மீன் என்றால் அது பனையேறிக் கெண்டை மீன் தான்.
சங்க காலத்து நூல்களில் கூட பனையேறிக் கெண்டை மீனைப் பற்றியத் தகவல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இவை தற்போது அழிந்து வரும் மீன் இனங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பனங்கொட்டை மீன் மற்றும் சன்னல் மீன் போன்ற வேறு பெயர்களும் இந்த மீனிற்கு உள்ளது. இந்தப் பெயர்கள் அனைத்தும் ஒவ்வொரு ஊரின் வழக்கத்திற்கு ஏற்ப மாறுபடும். உலகம் முழுக்க 34 வகைகளாக இருக்கும் இந்த மீன், இந்தியாவில் மட்டும் 4 வகைகள் தான் உள்ளன.
பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பனையேறிக் கெண்டை மீனைக் குழம்பு வைத்தால் நெய்யாக மணக்கும் என்று சொல்வார்கள். இம்மீனின் இரு புறத்திலும் முள்கள் இருப்பதால், உயிருடன் இருக்கும் போது நம்மால் வெறும் கைகளால் பிடிக்க முடியாது. அதையும் மீறி நாம் பிடிக்க முற்பட்டால், கைகளில் காயம் ஏற்படுவது நிச்சயம். மழைக்காலங்களில் இம்மீன் தனது கீழ் தட்டுகளைப் பயன்படுத்தி பனைமரம் ஏறும் என்றும், நீரின்றி நிலத்திலேயே 6 முதல் 10 மணி நேரம் உயிர் வாழும் என்றும் கூறப்படுகிறது. பனைமரம் ஏறுவதால் தான் இம்மீனிற்கு பனையேறிக் கெண்டை மீன் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் உவர் நீரிலும் வாழ்வதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை இந்த மீனுக்கு உண்டு.
25 செ.மீ. வரை வளரக்கூடிய பனையேறிக் கெண்டை மீன், தன்னிடம் இருக்கும் முன் துடுப்புகளைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்லும். ஈரப்பதம் நிறைந்த நிலத்தில் அதிக நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், சந்தையில் இம்மீனை எளிதாக விற்க முடியும். மற்ற உயிரினங்கள் இம்மீனை இரைக்காகப் பிடித்தால், இருபக்கமும் உள்ள முள்களின் உதவியால் மிக எளிதாகத் தப்பித்து விடும் திறனைப் பெற்றிருக்கிறது.
பலவகையான மீன்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடன் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. அந்த வரிசையில் பனையேறிக் கெண்டை மீன், நமக்கு பல ஆச்சரியங்களை அளிக்கிறது.