தமிழக அரசு 38 மாவட்டங்களிலும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களை அமைத்துள்ளது. இதன் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியர் இயக்குனராக தலைமை வகிக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் வன அலுவலர்கள் காலநிலை அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
இதற்காக கடந்த 2022லேயே, 920 கோடி ரூபாய் செலவில், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை மயமாக்கும் திட்டம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இது அடுத்த எட்டு ஆண்டுகளில் முழுமையடையும் என்றும் சொல்லப்பட்டது. சமூகப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான யுக்திகளை உருவாக்குவதற்கும். சூரிய மற்றும் காற்றாலை தொழில்நுட்பங்கள் மற்றும் மின் வாகனங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குழு செயல்படும். இந்தத் திட்டத்தில் 100 கிராமங்களுக்கு பசுமை பூங்கா அமைக்கும் திட்டமும் உள்ளது.
மாவட்ட அளவிலான காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் காலநிலைக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பாகும். இவர்கள் காலநிலை ஸ்மார்ட் கிராமங்களை வலுப்படுத்தி கடலோரப் பகுதிகளில் உயிர்க் கவசங்களையும் நிறுவுவார்கள். இதற்காக தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் 38 மாவட்டங்களுக்கும் 3.80 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இதில் குறிப்பாக ராம்சார் ஒப்பந்தம் எனப்படும், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது மற்றும் நிலையான பயன்பாட்டுக்கான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 14 ராம்சார் தளங்களுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம், வேலூர் பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்றவையும் அடங்கும்.
இத்தகைய நடவடிக்கைகளால் பருவநிலை மாற்றத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்துக்காக காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தும் நோக்கில், இந்தியாவின் மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டின் முன்முயற்சிகளைப் பின்பற்றலாம்.