மரவள்ளிக்கிழங்கு பல காலமாகவே மக்களின் பிரதான உணவாக இருந்து வருகிறது. குறிப்பாக போர்க்காலங்களில் மக்களுக்கு உணவு கிடைக்காதபோது உலகின் பல்வேறு நாடுகளிலும் இதைச் சாப்பிட்டே மக்கள் உயிர் பிழைத்திருந்தனர். அதேபோல, உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோதும் மக்களுக்கு மரவள்ளிக்கிழங்கே பிரதான உணவாக இருந்துள்ளது.
பலவிதங்களில் சமைக்கப்படும் மரவள்ளிக்கிழங்கை மக்கள் உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி, இதில் மருத்துவ ரீதியான நன்மைகளும் உள்ளன. மரவள்ளிக்கிழங்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த வேர் வகையைச் சேர்ந்த ஒரு கிழங்காகும். இது பொதுவாகவே மித வெப்பமண்டலம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வளர்கின்றது. குறிப்பாக, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு கார்போஹைட்ரேட் வழங்கும் முக்கிய ஆதார உணவாக உள்ளது.
தமிழகத்திலும் மரவள்ளிக்கிழங்கை மக்கள் பல வகையிலும் பயன்படுத்துகிறார்கள். இது பொதுவாக வேக வைக்கப்பட்டு உண்ணப்படுகிறது. மேலும் இதை பொறியல், சிப்ஸ் போன்ற தின்பண்டமாகவும் தயாரித்து விற்கின்றனர். அதேபோல, இந்த மரவள்ளிக்கிழங்கை அரைத்து அடை செய்தும் உண்கின்றனர். குறிப்பாக, சேமியா, ஜவ்வரிசி போன்றவை மரவள்ளிக்கிழங்கில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.
மரவள்ளிக்கிழங்கில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்:
மரவள்ளிக்கிழங்கில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து நமது ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைவதால் ஏற்படும் அனிமியா போன்ற நோய்கள் குணமாகின்றன.
ரத்த சிவப்பணுக்களை இது உற்பத்தி செய்வதால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் உடல் உறுப்புகளுக்கு எளிதாகக் கிடைக்கிறது.
மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உணவு செரிமானத்துக்கு உதவுகிறது. மேலும், இதன் மூலமாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன.
வயதாகும்போது உடலில் உள்ள எலும்புகளின் உறுதி குறைந்துவிடுகிறது. மரவள்ளிக்கிழங்கில் கால்சியம், வைட்டமின் கே, இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் அது எலும்புகளுக்கு வலுவூட்டுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மரவள்ளிக்கிழங்கில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இக்கிழங்கை தாராளமாக உண்ணலாம்.
இவற்றைத் தாண்டி மரவள்ளிக்கிழங்கு உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உலகம் முழுவதும் எடுத்துக் கொள்கிறார்கள். பல வளரும் நாடுகள் மரவள்ளிக்கிழங்கை முக்கிய உணவாகவும், தங்களின் வாழ்வாதாரப் பயிராகவும், வணிகப் பயிராகவும் இதைப் பார்க்கின்றனர்.