
வேட்டைக்குச் செல்லும்போது உடன் அழைத்துச் செல்ல, வீட்டைப் பாதுகாக்க, வளர்ப்புப் பிராணியாக என பல்வேறு காரணங்களுக்காக பலர் வீட்டில் நாயை வளர்த்து வருகின்றனர். பொம்மை போல் க்யூட்டான தோற்றம், எதிரிகளைக் கண்டவுடன் வெறித்தனம் கொண்டு எகிறிக் குதிக்கும் குணம், எஜமானன் கால்களையே எப்பவும் சுற்றிவரும் குணம் என தோற்றத்திலும் குணத்திலும் பல வகைகளைக் கொண்டிருக்கின்றன நாய்கள். இவற்றில் உலகிலேயே அதிவேகமாக ஓடக் கூடிய 10 வகை நாய் இனங்கள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. கிரேஹவுண்ட் (Greyhound): உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடியது என்ற பெயரைப் பெற்றிருக்கும் கிரேஹவுண்ட் மணிக்கு 45 மைல் தூரம் ஓடக்கூடியது. பந்தயங்களிலும் ஓடக்கூடிய அளவுக்கு மேம்படுத்தப்பட்ட சுறுசுறுப்பும் சக்தியும் கொண்டது.
2. சலுக்கி (Saluki): எகிப்தின் 'ராஜ வம்ச நாய்' எனவும் கூறப்படும் சலுக்கி மணிக்கு 42 மைல் தூரம் ஓடக்கூடியது. நேர்த்தியான மெல்லிய உடல் வாகு கொண்ட சலுக்கி நீண்ட தூரத்தையும் மின்னல் வேகத்தில் கடக்கக் கூடியது.
3. ஆஃப்கான் ஹவுண்ட் (Afghan Hound): தளதளவென்று தளர்வுற்ற முடியுடன் நேர்த்தியான தோற்றம் கொண்ட இந்த ஆஃப்கான் ஹவுண்ட் மணிக்கு 40 மைல் தூரம் ஓடக்கூடியது. இதன் வேகமும், தற்சார்பு கொண்ட இயல்பும் வலிமையும் மிகப் பிரசித்தம்.
4. விஸ்லா (Vizsla): விளையாட்டு வீரர்களுக்குரிய வேகமும் சுறுசுறுப்பும் கொண்ட விஸ்லா மணிக்கு 40 மைல் தூரம் ஓடக்கூடியது. வெளியுலக செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சிறந்த தோழனாக இருந்து உதவக்கூடியது விஸ்லா.
5. ஜாக் ரஸ்ஸல் டெரியர் (Jack Russell Terrier): தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் வேகத்தில் குறைந்ததல்ல. மணிக்கு 38 மைல் தூரம் ஓடக்கூடியது. ஆக்ரோஷமும் எச்சரிக்கை உணர்வும் கொண்ட ஜாக் ரஸ்ஸலுக்கு எந்த விலங்கையாவது பின்தொடர்ந்து விரட்டிச் சென்று பிடித்து வருவது மிகப் பிடித்தமான செயல்.
6. டால்மேஷியன் (Dalmatian): பாரம் ஏற்றிச் செல்லும் வண்டிகளை ஒட்டி, கூடவே ஓடுவது டால்மேஷியன்களுக்குப் பிடித்தமான விஷயம். மணிக்கு 37 மைல்கள் ஓடக்கூடியவை. நீண்ட தூரத்தையும், சக்தி குறையாமல் மின்னல் வேகத்தில் ஓடிக் கடக்கக்கூடிய திறமை கொண்டது.
7. விப்பெட் (Whippet): இதை கிரே ஹவுண்டின் ஒன்றுவிட்ட கஸின் எனக் கூறலாம். மணிக்கு 36 மைல் தூரம் ஓடக்கூடியது. அமைதியாகவும் நட்புடனும் விளங்கும் விப்பெட், ஓட ஆரம்பித்தால் மின்னல் வேகம்தான்!
8. போர்ஸ்யோய் (Borzoi): ரஷ்யன் உல்ஃப் ஹவுண்ட் எனவும் அழைக்கப்படுகிறது இது. மணிக்கு 35 மைல் தூரம் ஓடக்கூடியது. ஓடும்போது கூட மென்மையையும் நேர்த்தியையும் கடைப்பிடிக்கும்.
9. டாபர்மேன் பின்ஸ்ச்செர் (Doberman Pinscher): உடல் வலிமையும் வேகமும் கொண்ட டாபர்மேன் மணிக்கு 32 மைல் தூரம் ஓடக்கூடியது. வலிமையான தசைக் கட்டமைப்பு உடைய டாபர்மேன் புத்திசாலித்தனமும் விசுவாசமும் கொண்டது.
10. பார்டர் கூலி (Border Collie): மற்ற விலங்குகளை மந்தையாக ஓட்டிச் செல்வதற்கு பிரசித்தமானது இது. மணிக்கு 30 மைல் தூரம் ஓடக்கூடியது. அதி புத்திசாலித்தனத்துடன், விரைவாக, தளர்ந்துவிடாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடியது.