

பாம்பு என்றால் பலருக்கும் பயம்தான். அனைத்து பாம்புகளும் நச்சுத்தன்மை கொண்டவை இல்லை என்றாலும், சில பாம்புகள் அதிக ஆபத்தானவைதான். அந்த வகையில், உலக அளவில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. மெக்சிகோ: மெக்சிகோவில் பாம்புகளுக்கு சாதகமான காலநிலையும் உணவுகளும் பரவலாகக் கிடைப்பதால் 438 வகையான பாம்பினங்களுடன் பாம்புகள் அதிகம் இருக்கும் நாட்டில் மெக்சிகோ முதலிடம் பெற்றுள்ளது. இங்குள்ள 32 மாநிலங்களிலும் 10 அடிக்கு ஒரு பாம்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மெக்சிகோவில் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாம்புகளைப் பாதுகாக்க சிறப்புச் சட்டங்கள் உள்ளன.
2. பிரேசில்: உலகிலேயே பாம்புகள் மிகப்பெரிய அளவில் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகள் கருதப்படுவதால், அதிக பாம்புகள் உள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பிரேசிலில் 420 வகையான பாம்புகள் உள்ள நிலையில் அதில் 15 சதவிகிதம் நச்சுத்தன்மை கொண்டவை. பிரேசிலில் நகரங்களில் கூட பாம்புகளைக் காண முடியும். உலகின் இரண்டாவது நீளமான பாம்பாக அங்கீகரிக்கப்பட்ட அனகோண்டாவும் பிரேசிலில் காணப்படுகிறது.
3. இந்தோனேஷியா: 376 வகையான பாம்பு வகைகளுடன் இந்தோனேஷியா உலக அளவில் பாம்பினங்கள் வாழும் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்குள்ள பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. மலையேற்றம் செய்வது மற்ற நாடுகளில் சற்று எளிதான காரியமாக இருந்தாலும், இந்தோனேஷியாவில் ஜாவா அல்லது சுமத்ரா பகுதிகளில் வாழும் ஆபத்தான பாம்புகளின் காரணமாக இப்படிப்பட்ட சாகச பயணத்தைத் தொடங்கி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.
4. இந்தியா: இந்தியா மித வெப்ப மண்டலத்தில் உள்ளதால் 300க்கும் மேற்பட்ட பாம்பினங்களின் வகைகளால் நான்காம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பாம்புகள் உள்ளன. மிகவும் ஆபத்தான நச்சுப் பாம்புகளில் ஒன்றான சுருட்டை விரியன் (saw-scaled viper) 1801ல் கண்டுபிடிக்கப்பட்டது. மணிக்கணக்கில் அசையாமல் நிற்கும் அதிக நச்சு உள்ள நாகப் பாம்பு விவசாய நிலங்களில் காணப்படுவது விவசாயிகளுக்கு ஆபத்தாக உள்ளது.
5. கொலம்பியா: மேகங்கள், மூடுபனி மற்றும் ஈரமான காடுகள் கொண்ட நாடாக இருக்கும் கொலம்பியாவில் உள்ள காடுகளில் எங்கு திரும்பினாலும் பாம்புகள் எழுப்பும் சத்தத்தைக் கேட்க முடியும். கொலம்பியாவில் பாம்புகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல், அங்குள்ள போதைப் பொருள் கும்பல்கள் மீதான அச்சத்திற்கு இணையானவையாக இருப்பதால் பாம்புகள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. கிழக்கு கொலம்பியாவில் அனகோண்டா பாம்புகள் பெருமளவில் காணப்படுகின்றன.
மேற்கூறிய நாடுகளுக்கு அடுத்ததாக சீனா, ஈக்வடார், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகள் பாம்பினங்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.