

எலிகள் பொதுவாக மெல்லிய, கூர்மையான தலை, பெரிய கண்கள் மற்றும் வெளிர் நிறமான, மெல்லிய ரோமங்கள் கொண்ட காதுகளுடன் காணப்படும். அவை மிதமான நீளமான கால்கள் மற்றும் நீண்ட, கூர்மையான நகங்களைக் கொண்டு காணப்படும். உலகின் மிகப் பெரிய ஏழு எலி இனங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. இந்திய பெருச்சாளி (Indian giant rat): இந்திய பெருச்சாளி என்பது எலி குடும்பத்தைச் சேர்ந்த பெரிய மற்றும் மிகவும் ஆக்ரோஷமான கொறித்துண்ணி0 வகையாகும். இது அடர் சாம்பல்-பழுப்பு நிற உடலுடன், நீண்ட கருப்பு முடிகளைக் கொண்டிருக்கும். 27 முதல் 29 சென்டி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இவை விவசாயம் மற்றும் கோழி பண்ணைகளுக்கு சேதம் விளைவிக்கும். பெரிய அளவிலான வலைகளை உருவாக்கும். நீந்துவதில் திறமை மிக்கவை. இவை வங்காள தேசம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
2. பை எலி (African giant Pouch rat): ஆப்பிரிக்க ராட்சத பை எலி என்பது ஒரு பெரிய வகை எலியாகும். இது காம்பியன் பை எலி என்றும் அழைக்கப்படுகிறது. இவை மூன்றடி நீளம் வரை வளரும். காச நோய், கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடி மருந்துகளைக் கண்டறியவும், கடத்தப்பட்ட வனவிலங்கு பொருட்களைக் கண்டறியும் திறனுக்காகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த எலிகள் பொதுவாக அமைதியானவை. பயிற்றுவிக்கக்கூடியவை மற்றும் சிறைபிடிக்கப்பட்டால் எளிதாக பழக்கப்படுத்தப்படலாம். 8 முதல் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.
3. பிலிப்பைன்ஸ் பெருச்சாளி (Philippine giant rat): பிலிப்பைன்ஸ் ராட்சத எலி என்பது பிலிப்பைன்ஸின் லூசோன் தீவில் மட்டுமே காணப்படும் ஒரு பெரிய கொறித்துண்ணிகளைக் குறிக்கிறது. குறிப்பாக, வடக்கு லுசோன் ராட்சத மேக எலி (Northern Luzon giant cloud rat) அல்லது பிலிப்பைன்ஸ் ராட்சத புதர் - வால் மேக எலி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உடல் நீளம் சுமார் 38 சென்டி மீட்டர் வரையிலும், வால் உட்பட மொத்தம் 75 சென்டி மீட்டர் வரையிலும் இருக்கிறது. இதன் எடை 1.9 முதல் 2.6 கிலோ வரை இருக்கும். இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும். இவை மரங்களில் வாழும். கரடு முரடான ரோமங்களைக் கொண்டு, பெரும்பாலும் வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் நிறத்தில் காணப்படும் இவை பழங்கள், இளம் இலைகளை உண்ணும்.
4. ஆப்பிரிக்க சதுப்பு நில எலி (African swamp rat): முரிடே குடும்ப கொறித்துண்ணி இனமான இவை, உயரமான புற்கள் மற்றும் நாணல் படுக்கைகளில் ஓடுபாதைகள் மற்றும் கூடுகளை உருவாக்குகின்றன. சில நேரங்களில் சதுப்பு நில எலிகள் என்று அழைக்கப்படும் பிற கொறித்துண்ணிகளில் ஈரமான காடுகளில் வாழும் பெரிய காதுகள் கொண்ட சதுப்பு நில எலி மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, நைஜீரியா, உகாண்டா மற்றும் சாம்பியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் இயற்கை வாழ்விடம் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான தாழ்நில காடுகளாகும்.
5. வட அமெரிக்க நீர் எலி (North American water rat): அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளிலும் தெற்கு கனடாவிலும் காணப்படும் இவை, நீரோடைகள், குளங்கள் மற்றும் ஆல்பைன் புல்வெளிகளுக்கு அருகில் வாழ்கின்றன. இவற்றின் பெரிய பின்னங்கால்களின் காரணமாக சிறந்த நீச்சல் வீரர்கள் போல் செயல்படுகின்றன. நீர்மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே நுழைவாயில்களுடன் துளைகளைத் தோண்டி வாழ்கின்றன. இவை தாவர வகைகள், புல், இலைகள், வேர்கள், விதைகள் மற்றும் சில நேரங்களில் சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்கின்றன.
6. எத்தியோப்பியன் பெருச்சாளி (Ethiopian giant rat): வாழ்விட சீரழிவு காரணமாக எத்தியோப்பிய ராட்சத எலி அழிந்து வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இவை ராட்சத வேர்-எலி அல்லது ராட்சத மோல்-எலி என்றும் அழைக்கப்படுகிறது. எத்தியோப்பியாவில் உள்ள பேல் மலைகளுக்கு சொந்தமான ஒரு பெரிய துளையிடும் கொறித்துண்ணியாகும். இவை அழிந்து வரும் எத்தியோப்பிய ஓநாய்களுக்கு ஒரு முக்கிய உணவு மூலமாக உள்ளது. இவை உயரமான புல்வெளிகளில் வாழ்கின்றன. பெரும்பாலும் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் இவை, தாவரங்களையும், வேர்கள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
7. சீன ராட்சத எலி (Chinese giant rat): இவை பொதுவாக சீன மூங்கில் எலி என்று அழைக்கப்படும். தென் சீனாவில் காணப்படும் ஒரு பெரிய எலி இனமாகும். இவை 4.5 முதல் 8.75 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும். சுமத்ரா, மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோ சீனாவின் மலைக் காடுகளில் வாழ்கின்றன. இவை மூங்கில் வேர்கள், கரும்பு மற்றும் மரவள்ளி கிழங்கு வேர்கள், விதைகள் மற்றும் பழங்களையும் சாப்பிடுகின்றன.