
கம்போடியா நாட்டைச் சேர்ந்த அனா ரமி என்ற சிறுவன், தனது 14 வயதில் அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியையும், சர்வ வல்லமை படைத்த நிஹிம் வண்டாவையும் எதிர்க்கத் துணிந்தான். இந்தச் சிறுவன் அவ்விருவர்களையும் ஏன் எதிர்க்கத் துணிந்தான்? அதன் பின்னணியில் உள்ள போராட்ட குணம் என்ன? இயற்கைக்கு விரோதமாக விலங்கினங்களை துன்புறுத்துபவர்களை, சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள சிறுவர்கள் எப்படிக் கையாண்டனர் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நிஹிம் வண்டா கூறுவதே அந்த நாட்டில் சுலபமாக சட்டமாகி விடும். காட்டில் மிருகங்களைப் பிடிப்பதற்கு அவர்கள் ஒரு ரகசிய பட்டாளம் வைத்திருந்து பல்வேறு அத்துமீறல்களையும் சட்ட துஷ்பிரயோகங்களையும் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் அரசு விலங்குகள் சரணாலயத்திற்குச் செல்லும் மிருகங்களை தடுத்து நிறுத்தி, தங்களின் பிரத்யேக சரணாலயத்திற்கு வரவழைத்து விடுவார்கள்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்நாட்டின் Phnompenh நகரில் வசித்த 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் சிலர் அனா ரமியின் தலைமையில், ‘Kaapia’ (காப்பியா) என்று ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். அந்த நகரில்தான் விலங்குகள் சரணாலயம் (Wildlife sanctuary) உள்ளது. அச்சிறுவர்கள் அந்த விலங்குகள் சரணாலயத்தை துப்புரவு செய்யும் பணியை இதய சுத்தியுடன் செய்து வந்தார்கள்.
இது போன்று அத்துமீறல்கள் செய்யும் ராணுவத் தளபதியின் கையாட்களான அந்தக் கும்பல், யானைக் குட்டி ஒன்றை குறிவைத்து பிடிக்க முயலும்போது எதிர்கொண்ட தாய் யானையை சுட்டுக் கொலை செய்து விட்டனர். இச்செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற காப்பியா அமைப்பு சிறுவர்கள் யானைக் குட்டியைக் காப்பாற்றி அரசு விலங்குகள் சரணாலயத்தில் ஒப்படைத்து விட்டனர்.
இதனால் கோபம் கொண்ட நிஹிம் வண்டா, அனா ரமியையும், அனா தமிமையும் காப்பியா அமைப்பையும் மிரட்டினான். யானைக் குட்டியை தன்னிடம் ஒப்படைக்கும்படி அறிவித்தான். இந்தப் பிரச்னையை காப்பியா அமைப்பு சிறுவர்கள் பொதுமக்கள் முன்பு கொண்டு வந்து அவர்களிடம் விழிப்புணர்வைத் தூண்டி விட்டனர். பொது மக்களிடம் இருந்து கையெழுத்தும், கடிதங்களும் பெற்று அப்போதைய விவசாய மந்திரியான Chhea Song இடம் கையளித்தனர்.
தற்போது அந்த யானைக் குட்டி அரசு விலங்குகள் சரணாலயத்தில் பாதுகாப்பாக வசிக்கிறது. சிறுவர்கள் முயற்சிக்கும் வெற்றி கிடைத்தது. அந்த யானைக் குட்டிக்கு அச்சிறுவர்கள் ‘லக்கி’ என்று பெயர் சூட்டினர். இப்படிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சுறுத்துபவர்களிடம் இருந்து விலங்கினங்களை மீட்டு பாதுகாத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்தனர்.