கப்பலையும் உடைத்து உருக்குலையச் செய்யும் பலம் கொண்ட அதிசய 'அரபைமா' மீன்கள்!
‘அரபைமா’ (Arapaima) என்ற மீன் அமேசான் வனப் பகுதியின் ஆற்றுப் படுகைகள், வெள்ள நீர் ஓடும் சமவெளிகள், குறிப்பிட்ட சீசன்களில் வெள்ள நீர் நிறையும் காடுகள் போன்ற இடங்களின் தெளிந்த நீரில் வாழும், உலகிலேயே மிகப்பெரிய அளவிலான ஃபிரஷ் வாட்டர் ஃபிஷ் ஆகும். இதன் உடல், சதைப் பற்றுடன், சுமார் பதின்மூன்று அடி நீளம் மற்றும் 225 கிலோ எடையும் கொண்டுள்ளது. இதன் வாழ்நாள் 15 முதல் 20 வருடங்கள் ஆகும்.
வழக்கத்திற்கு மாறாக, இதன் உடல் மீதுள்ள மிகப்பெரிய அளவுடைய செதில்கள், உலோகத்திற்கு இணையான மிகுந்த வலிமை கொண்டதாகவும், ஒன்றன் மீது ஒன்றாக மிக நெருக்கமாக அடுக்கி வைத்தாற்போலவும் அமைந்துள்ளன. இதன் காரணமாகவே இதன் சக்தியை, கப்பலை சிதைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 'டார்பிடோ' (Torpedo)' எனப்படும் நீர் மூழ்கிக் குண்டின் சக்திக்கு இணையானது என விஞ்ஞானிகள் ஒப்பிட்டுக் கூறுகின்றனர்.
வலிமையான தாடையும், கூரிய பற்களும் கொண்ட பிரன்ஹா (piranha) என்ற மீன்களால் கூட அரபைமாவின் உடல் மீது துளையிட முடியாது. தான் பெற்றுள்ள சக்தியின் உதவியால், அரபைமா நீரில் வாழும் முதுகெலும்பு இல்லாத ஜந்துக்களைப் பிடித்து தனக்கு உணவாக்கிக் கொள்கின்றன. இயற்கையாக, இதன் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெறாத காரணத்தினால் இது அடிக்கடி நீரின் மேற்பரப்பிற்கு வந்து ஏழு அல்லது எட்டு நிமிடங்கள் காற்றில் கலந்திருக்கும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் கொண்டுள்ளது. இந்தக் குறைபாடு ஒன்றே, பலசாலியான இந்த மீனை எதிரிகள் சுலபமாக கண்டுபிடிக்கவும் வழிகாட்டி விடுகிறது.
செவுள் (gills)களின் வழியே சுவாசிக்கும் இதன் உருவத்தை ஒத்த மற்ற மீன்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு அரபைமா மீன்களுக்குக் கிடைப்பதில்லை. பிற விலங்குகள் எதுவும் எதிர்த்து நிற்க அஞ்சக்கூடிய, பாதுகாப்புக் கவசம் அணிந்தது போன்ற உடலமைப்புப் பெற்றிருந்தபோதும், மனிதர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாமல் போனதுதான் இதன் துரதிர்ஷ்டம்.
ஐந்து வயதாகும்போதுதான் இது இனப்பெருக்க செயல்பாடுகளில் ஈடுபட தயாராகிறது. இது மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது தாமதித்த செயல்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலநிலை அமைவதும், அதிக கவனிப்பு தர வேண்டியதும் அவசியமாகிறது.
ஆண், பெண் இரண்டும் இணைந்து, ஆழமற்ற மேலோட்டமான நீர் பரப்பு இடத்தில் குழி அமைத்து முட்டைகளை இடுகின்றன. குஞ்சுகள் வெளி வந்ததும் பெற்றோர் இருவரும் சேர்ந்தே குஞ்சுகளுக்கு வாரக்கணக்கில் பாதுகாப்பு அளிக்கின்றன. இருந்தபோதும், இவை அதிகளவில் வேட்டையாடப்படுவதால், இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
வியக்கத்தக்க உடலமைப்புக் கொண்ட உயிரினமாகப் படைக்கப்பட்டபோதிலும், சுற்றுச்சூழல் அமைப்பு, இனப்பெருக்கத்தில் தாமதம் போன்ற காரணங்கள் இவற்றை அழிவின் விளிம்பிற்கு எடுத்துச் செல்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
மேலும், இம்மீன்களிலிருந்து பெறப்படும் அதிகளவு இறைச்சி, குறைந்த அளவு கொழுப்புடையதாகவும், மீன் முள் (tiny, sharp, thorn like bone) குறைந்த அளவு உள்ளதாகவும், மிருதுத் தன்மை கொண்டதாக இருப்பதாலும் மக்களிடையே இந்த வகை மீன்களுக்கு தேவை அதிகம் உள்ளது. எது எப்படியாகினும், இம்மீன்களைப் பிடிப்பதற்கு கடுமையான விதிமுறைகளை வகுத்து உரிய தரப்பிலிருந்து பாதுகாப்பு அளித்தால் மட்டுமே இவற்றின் எண்ணிக்கை பெருகி இவை செழித்து வாழ வழி உண்டாகும்.

