

ரக்கூன் (Raccoon) என்பது வட அமெரிக்காவில் முதன் முதலில் காணப்பட்டு தற்போது உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள ஒரு நடுத்தர அளவிலான பிராணி. இதன் அறிவியல் பெயர் Procyon lotor ஆகும். இதன் தோற்றம் மற்றும் உடற்கூறு வித்தியாசமான வடிவமைப்புக் கொண்டது. 40 முதல் 70 செ.மீ. வரையிலான உடல் நீளம் மற்றும் 5 முதல் 15 கிலோ (சில நேரங்களில் அதிகமாகவும் இருக்கும்) எடையுடனும் இருக்கும். வாலில் கருப்பு வெள்ளை வளையங்கள் போல இருக்கும். முகத்தில் மாஸ்க் போல கருப்பு பட்டை இருப்பதால் இதை முகமூடி விலங்கு (mask animal) என்றும் அழைப்பதுண்டு.
இதன் முன் கைகள் மனிதக் கை போல செயலாற்றும்; சிறிய பொருட்களையும் திறந்து எடுக்க முடியும் என்பதுதான் இதன் முக்கியமான தனித்திறன். இரவில் அதிகம் செயல்படும் இயல்புடன், மிகுந்த அறிவு மற்றும் தந்திரம் கொண்டது. ரக்கூன் சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் உண்ணும் ஒரு ஓம்னிவோர் (Omnivore) விலங்கு. பழங்கள், பருப்பு வகைகள், மீன், முட்டைகள், பூச்சிகளுடன் மனிதர்களின் உணவுக் கழிவுகளைக் கூட உணவாக எடுக்கும். பூச்சிகள், பழங்கள், சிறு விலங்குகள் போன்றவற்றை உண்டு சூழலியல் சமத்துவத்தில், காட்டு சூழலில் பங்கு வகிக்கிறது.
காடுகள், நதிக்கரைகள், ஈர நிலங்கள், நகரப் பகுதிகளையும் தனது வாழிடமாக்கிக் கொண்டு அப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளைத் திறந்து உணவு தேடிச் செல்லும். மேலும், மரத்துளைகள், கட்டட ஓட்டைகள் போன்ற இடங்களிலும் குடியிருக்கும். ரக்கூன்களின் இனப்பெருக்க காலம் பொதுவாக ஜனவரி முதல் மார்ச் மாதங்கள். குளிரான பகுதிகளில் இது ஏப்ரல் வரை நீளலாம். இந்தக் காலத்தில் ஆண் ரக்கூன்கள் பல பெண் ரக்கூன்களைத் தேடி சுற்றித் திரிகின்றன.
கருவுற்ற ரக்கூன் 63 நாட்கள் கர்ப்பம் சுமக்கிறது. பின்னர் குகை, மரவெளி, பழைய கட்டடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் குட்டிகளைப் பெறுகின்றன. பொதுவாக 2 முதல் 5 குட்டிகள், சில நேரங்களில் 7 குட்டிகள் வரை கூட இவை ஈனுகின்றன. பிறக்கும்போது சுமார் 60 முதல் 75 கிராம் எடையுடன் கண்கள் மூடியே இருக்கும். சுமார் 7 முதல் 10 வாரங்கள் தாயிடம் பால் குடித்து சில மாதங்கள் தாயின் அரவணைப்பில் இருந்து பிறகு நடமாடத் தொடங்கி உணவு தேட கற்றுக்கொள்கின்றன.
ரக்கூனின் மூளை அமைப்பு மற்றும் விரல்களின் நுண் உணர்வு திறன் மிக உயர்ந்த புத்திசாலித்தனத்தின் அடையாளமாக உள்ளது. பொதுவாக, மனிதரை தவிர்க்கும். இருப்பினும், சில நேரங்களில் மனிதர்கள் வாழும் பகுதியை அணுகுவதால் தொல்லை விலங்காகவும் கருதப்படுகிறது. சாதாரணமாக எதுவும் தொல்லை செய்யாது எனினும், அது பயப்படும்போதுதான் தாக்கும்.
ரக்கூன்களை வைத்து இனப்பெருக்கம் செய்வது பல நாடுகளில் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. ஏனெனில் மனிதரைப் பாதிக்கக்கூடிய நோய்கள் (எ.கா. rabies, roundworms) பரப்பும் வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கை ஆகிறது. சில நாடுகளில் ரக்கூனை செல்லப் பிராணியாக வைத்துக்கொள்ள அனுமதி இருக்கலாம். ஆனால், கைகளில் கூரிய நகம் உள்ள விலங்கு என்பதால் பயிற்சிப்படுத்துவதில் சிரமம் தரும். மேலும், சட்ட அனுமதியும் தேவை என்பதால் பொதுவாக வீட்டில் வளர்க்க பரிந்துரைக்கப்படுவதில்லை.