தரிசு நிலத்துக்கான காரணமும் அதை சரிப்படுத்தும் வழிமுறைகளும்!

barren land
barren land
Published on

ரிசு நிலம் என்பது பயிரிடப்படாமலும், உரிய நீர் மற்றும் நில மேலாண்மை இன்றி வளர்ச்சியற்றுக் கிடக்கும் இடங்களை தரிசு நிலம் என்பர். அது ஏன் உருவாகிறது .அதை எப்படி சீர்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

காரணங்கள்: இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 18.72 சதவிகிதம் தரிசு நிலங்களாக உள்ளன. அது ஏன் தரிசு நிலமாக உருவாகி இருக்கிறது என்று பார்த்தால் கால்நடைகளை அதிகமாக மேய விடல், நச்சுத்தன்மை கொண்ட கழிவு நீரையும், தொழிற்சாலை கழிவுகளையும், தொழிற்சாலையை சுற்றியுள்ள நல்ல விளைநிலங்களில் விடுவதால் அவை விளைச்சலுக்கு தகுதியற்றவையாகின்றன.

சுரங்கங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன. சுரங்கக் கழிவுகளை அவற்றின் அருகில் குவிப்பதால் நல்ல நிலங்கள் பாழாகின்றன. அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதால் நிலத்தின் இயற்கை வளம் குறைந்து, வேளாண்மைக்கு தகுதியற்றதாகிறது.

நீர்ப்பாசனத்தை முன்னிட்டு பெரிய அணைகள் கட்டுவதால் காலப்போக்கில் விளைநிலம் உப்பும், சுண்ணாம்பும் கலந்த நிலமாக மாறிவிடுகிறது. நில அரிப்பு, மழை இன்றி பாலைவனமாதல், தண்ணீர் தேங்குதல், ஒரே வகை பயிரை மீண்டும் மீண்டும் அதே நிலத்தில் பயிரிடுதல் ஆகியவற்றால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாகின்றன. பாறைப் பகுதிகள், மலைச்சரிவுகள், பனி படர்ந்த மலைகள் ஆகியவையும் பயன்படுத்த முடியாதவை ஆகையால் தரிசு நிலங்களாகக் கிடக்கின்றன.

நடவடிக்கைகள்: மக்கள் தொகை பெருக்கத்தால் உணவில் இருந்து மற்ற அனைத்து தேவைகளும் பெருகிவரும் இந்நாட்களில் தரிசு நிலங்களை மேம்படுத்தி, அவற்றை விளைநிலங்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எல்லா இடங்களிலும் உள்ள தரிசு நிலங்களை ஒரு சர்வே எடுத்து, அதை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்தலாம் என்பதை அரசு நிர்வாகிகள், சூழல் இயல் வல்லுநர்கள், உள்ளூர் அரசுசாரா நிறுவனர்கள் ஆகிய அனைவரும் பங்கு பெற்று அதற்குத் தீர்வு காண வேண்டும்.

அவற்றை நல்ல நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள், நலிவுற்ற மக்கள், பெண்கள் ஆகியோருக்கு அவற்றை வழங்க வேண்டும். மேலும், அதில் வேளாண் பெருமக்களோடு தொடர்பு கொண்டு பயிர்கள் பயிரிடும் முறை பற்றியும் இதர தொழில்நுட்பங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கால்நடைகளுக்கு என்று தனி மேய்ச்சல் நிலங்கள் உருவாக்கப்படுதல், மண்ணரிப்பைத் தடுக்கும் வழிமுறைகளை கையாளுதல், உவர் நிலமாக மாறாமல் இருக்கத் தேவைக்கு  அதிகமாக நீர் பாய்ச்சுவதை தடுத்தல், மண் வள பரிசோதனை அடிக்கடி செய்யக் கற்றுக்கொடுத்தல், சுரங்கங்களின் கழிவுகளை அகற்றுவதில் இருந்து அவற்றை சுற்றியுள்ள நிலங்களை விளைநிலங்களாக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தல் போன்றவற்றை சூழலியல் வல்லுநர்கள் கையாள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆஹா, முட்டையில் இத்தனை சத்துக்களா?
barren land

நன்மைகள்: இதனால் விளையும் நன்மைகள் என்று பார்த்தால் ஏழ்மை நிலையில் உள்ள கிராம மக்களுக்கு வருவாயீட்ட வாய்ப்பு கிடைக்கிறது. அடுப்பு எரிக்க விறகும், கால்நடைகளுக்கு தீவனமும், வீடு கட்ட மரமும் ஒவ்வொரு விவசாயிக்கும் உறுதியாகக் கிடைக்க வழி பிறக்கும். மண்ணரிப்பைத் தடுத்தும், ஈரப்பதத்தை பாதுகாத்தும், மண்ணை வளப்படுத்தலாம். மரங்களை நிறைய நடுவதால் காடுகள் அதிகம் உருவாகி பருவ காலங்களில் மழை பெய்ய உதவுவதோடு சூழலியலை சமன் செய்யவும் உதவுகிறது. ஒரு கிராம விவசாயினுடைய வருவாயை அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது. மரங்கள் அதிகம் வளர்ப்பதால் வயல்வெளிகளில் பூச்சிகள் குறைகின்றன. மரங்களால் நிலத்தடி நீர் மீண்டும் செறிவூட்டப்படுகிறது.

இப்படி தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் கிராமத்து ஏழை விவசாயிகளின் வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், பச்சை பசேல் என்று தரிசு நிலம் காட்சியளிப்பதால் அதை காணும்பொழுது கண்ணுக்கும் இன்பமயமாக இருக்கிறது. மனதிற்கும் உற்சாகம் கிடைக்கிறது. இதனால் மேலும் பல தரிசு நிலங்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மக்கள் மனதில் இடம் பெற வழி வகுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com