Interesting information
zebra...

வரிக்குதிரையின் கோடுகளால் ஏற்படும் குழப்பங்கள்... சுவாரசியமான தகவல்கள்!

Published on

ரிக்குதிரைகள் மந்தையாக நிற்கும்பொழுது அதனைத் தொடர்ந்து பார்த்தால் நம் கண்கள் கூசும். ஸ்கேல் வைத்து கோடு போட்டதுபோல் அப்படி ஒரு அழகு. எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும் என்றாலும், நம் ஒவ்வொருவரின் கைரேகைகளும் வித்தியாசப்படுவது போல், அதற்குள்ளும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. அந்த கோடுகளால் வரிக்குதிரைகளுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை இப்பதிவில் காண்போம். 

வரிக்குதிரைகளின் உடலில் இருக்கும் பட்டை கோடுகள் மிருகத்துக்கு மிருகம் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக சிறு கூட்டமாக அல்லது பெரும் மந்தையாக சேர்ந்து வாழும் இயல்பு அமைந்த இவைகளுக்கு விரைப்பான பிடரி மயிர் காணப்படுகிறது. சில வரிக்குதிரைகளின் வயிற்றின் அடிப்பகுதி வெள்ளையாக இருப்பதால் இவை உடலில் கருப்பு கோடுகள் அமையப்பெற்ற வெள்ளை மிருகம் என்று கருதப்பட்டன. ஆனால் ஆய்வுகள் சான்று அளித்துள்ளபடி அவற்றின் பின்புல நிறம் கருப்பு ஆகும். அதன் மீது வெள்ளை கோடுகளும் வெண்ணிற வயிறும் அமையப் பெற்றன என்பதே உண்மையான கருத்து 

இந்தக் கோடுகள் இவற்றின் தலை, கழுத்து, உடலின் முன் பகுதி, விலாப் பகுதி ஆகிய இடங்களில் செங்குத்தாக அமைந்துள்ளன. பின்பகுதியிலும், கால்களிலும் கிடை வசத்தில் அமையப்பட்டுள்ளன .இந்த கோடுகள் ஒரு தனி மிருகத்தை மற்றவை நினைவில் வைத்துக் கொள்ளும் அடையாளமாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனி மிருகத்திற்கும் அமைந்திருக்கும் கோடுகள் பிறவற்றிலிருந்து மாறுபட்டு இருப்பதால் அதை வைத்து அவை ஒன்றை ஒன்று அடையாளம் காண்கின்றன.

சிலர் இந்தக் கோடுகளை ஒரு நிறம் மாயைக் கவசமாகவும் (CAMOUFLAGE) செயல்படுவதாக கருதுகிறார்கள். இது பல வழிகளிலும் இரைக் கொல்லிகளாகிய எதிரிகளிடமிருந்து காக்கின்றன. உதாரணமாக இவை அடர்ந்த புல் புதருக்குள் மறைந்திருக்கும்போது இவற்றின் செங்குத்து வரிகள் புல் வளர்ந்திருக்கும் வகையில் புல்லோடு புல்லாக தோற்றமளிக்கிறது. இந்த தோற்றமானது வரிக்குதிரைகளின் பிரதான எதிரியாகிய சிங்கங்கள் நிறக் குருடாக இருப்பதால் அவற்றின் பார்வையில் எல்லாமே கருப்பு வெள்ளையாக காட்சியளிக்கிறதாம் .எனவே புல்லையும் உள்ளே மறைந்திருக்கும் மிருகத்தையும் வேறுபடுத்தி காண இவைகளால் இயலாதுபோக,  புல் புதரினுள் இவை சென்று மறைந்து கொண்டால் இனம் பிரித்து அறிய முடியாமல் சிங்கங்கள் குழம்பும்போது  வரிக்குதிரைகள் தப்பிக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விட விலை அதிகம்: உலகில் மதிப்பு மிக்க சில பூச்சி இனங்கள்!
Interesting information

வரிக்குதிரைகள் ஒரு கூட்டமாக நின்று ஒன்று சேர்ந்து நகரும் போது ஏதோ ஒரு பிரம்மாண்டமான ஒரே மிருகம்போல் தோற்றமளிக்கும். இது சிங்கங்களுக்கு ஒரு தனி மிருகத்தை குறி வைத்து தாக்குவது கடினமாக்கி விடுவதாக சொல்லப்படுகிறது. எதிரியை தவிர்ப்பதற்காக ஒரு பெரிய மந்தை நாலாபுறமும் சிதறி பிரிந்தாலும் அவை கூட்டம்  கூட்டமாகவே பிரியும். அது கூட ஒரு பெரிய மிருகம் பல திசைகளில் பிரிந்து செல்வதாகவே எதிரிகளை மயங்க வைக்கும். உயிரியல் வல்லுநர்கள் சிங்கங்கள் இந்த மிருகங்களின் வரிகளால் குழப்பம் அடைவதை ஒருபோதும் கண்டிராத போதிலும், இந்தப் பார்வை மயக்கம் தனி மிருகத்தை துரத்துவதை கடினமானதாகவே ஆக்குகிறது என்கின்றனர். 

குதிரைகளை விட வரிக்குதிரைகள் ஆப்பிரிக்காவின் கொடிய நோய்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதால் அவற்றை சவாரிக்கு பயன்படுத்தும்படி பயிற்சி அளிக்க பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனாலும் தோல்வியிலேயே முடிந்தது. காரணம் அவற்றின் முன்கூட்டியே கணிக்க இயலாத தன்மையும், அவசர சூழலில் அதிகமாக மிரளும் குணமுமாகும். இந்த காரணத்தினாலே வரிக்குதிரையின் கலப்பினங்கள் சவாரிக்கு பயன்படுத்தப் படுகின்றன. இவற்றின் அழகிய தோலுக்காக வேட்டையாடி அழிப்பது அவற்றின் எண்ணிக்கையை பெரிதும் பாதிக்கிறது.

கிர்வி வகை வரிக்குதிரைகளும் கூட ஆபத்தில்தான் உள்ளன. பொதுவாகவே குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் சூழ்நிலை மாறுபாட்டாலும், வறட்சியாலும், எளிதாக பாதிக்கப்படும் இயல்பு உள்ளது. இவையும் மனித வேட்டைக்கு உள்ளாவதால் வேகமாக அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
Ai தொழில்நுட்பத்தால் 27% வேலைகள் அதிக ஆபத்தில் இருக்கிறது.
Interesting information

சமவெளிகளில் வாழும் வரிக்குதிரைகளே அதிக எண்ணிக்கையிலும் ஆரோக்கியமாகவும் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் அவையும் கூட வேட்டை மற்றும் காடுகளை அழிப்பதால் நேரிடும் குடிமாற்றம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. க்வாக் என்ற கிளை வகை இன்று முற்றிலுமாக அழிந்தே போய்விட்டது என்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com