இன்றைய காலத்தில், உலகம் பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படிவ எரிபொருள்களால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக, மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், அதன் நன்மைகள் மட்டுமின்றி, தீமைகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். மின்சார வாகனங்களால் குறைந்த கார்பன் வெளியேற்றம், மேம்படுத்தப்பட்ட காற்றின் தரம் போன்ற பல சுற்றுச்சூழல் நன்மைகள் இருந்தாலும், இதனால் சில மோசமான விளைவுகளும் ஏற்படும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம். இப்பதிவில் மின்சார வாகனங்களின் இருண்ட பக்கத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பேட்டரி: மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் EV பேட்டரிகளின் உற்பத்தியானது லித்தியம், கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற கனிமங்களை பிரித்தெடுக்கும் செயல்முறைக்கு உட்பட்டதாகும். இந்த கனிமங்களை பிரித்தெடுக்கும்போது வாழ்விட அழிப்பு, நீர் மாசுபாடு மற்றும் கார்பன் உமிழ்வு உள்ளிட்ட பாதகமான சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படலாம்.
ஆற்றல்: EV வாகனங்களால் கார்பன் உமிழ்வு இருக்காது என்றாலும், அவற்றிற்குத் தேவைப்படும் ஆற்றலுக்கான மூலம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படிவ எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும்போது, எலக்ட்ரிக் வாகனங்களின் அடிப்படை குறிக்கோள் பயனற்றதாகிறது. எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலமாக மின் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம்.
உட்கட்டமைப்பு தேவை: எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பரவலாக பயன்படுத்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவைப்படுகிறது. எனவே சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவதற்கும் விரிவு படுத்துவதற்கும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின்சாரம் உட்பட குறிப்பிட்ட வளங்கள் தேவைப்படுகிறது. இதனால் வசிப்பிட அழிவு, அதிகப்படியான ஆற்றல் நுகர்வு மற்றும் காடழிப்பு போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
உற்பத்தி உமிழ்வுகள்: எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதென்பது பல்வேறு விதமான உமிழ்வுகளை உள்ளடக்கியதாகும். இதற்காக மூலப் பொருட்களை தயாரிப்பது முதல் உற்பத்தி, அசெம்பிள் என எலக்ட்ரிக் வாகனங்கள் ஒவ்வொரு நிலையிலும் கார்பன் வெளியேற்றத்திற்கு பங்களிக்கின்றன.
குறிப்பிட்ட ஆயுட்காலம் மற்றும் மறுசுழற்சி: எலக்ட்ரிக் வாகனங்கள் சராசரி வாகனங்கள் போலல்லாமல் குறிப்பிடத்தக்க ஆயுட்காலத்தையே கொண்டுள்ளன. குறிப்பாக அவற்றின் பேட்டரிகள் வரையறுக்கப்பட்ட ஆயுட்காலம் கொண்டவை. காலப்போக்கில் பேட்டரியின் திறன் குறைவதால், அதற்கான மாற்று பேட்டரி தேவைப்படலாம். இந்த பேட்டரியை அகற்றி மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழலுக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. இதனால் பேட்டரி கழிவுகள் தொடர்பான அபாயங்கள் உள்ளதால், மறுசுழற்சி முறைகளில் மாற்றம் மிகவும் முக்கியமானது.
அதிக மின்கட்டணங்கள்: எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மின் கட்டணத்தை அதிகரிக்கலாம். அதேநேரம் ஒரே நேரத்தில் பல வாகனங்களை சார்ஜ் செய்வது மின்சாரத் தேவையை அதிகரித்து, பவர் க்ரிட் உட்கட்டமைப்பை அதிகமாக்குகிறது. எனவே மின்சாரம் சார்ந்த அழுத்தம் மற்றும் மாற்றங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலே குறிப்பிட்டுள்ளபடி சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட இதன் தாக்கம் குறைவுதான் என்பதால், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களில் இவ்வுலகை ஆட்சி செய்யும் எனலாம். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலமாக இதற்கான மேம்படுத்தல்களும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரப்படும் என நம்புவோம்.