சுற்றுச்சூழலில் தேனீக்களின் பங்கு என்ன தெரியுமா?
தேனீக்கள் என்றதும் உங்களுக்கு முதலில் என்ன ஞாபகம் வருகிறது? அவை சுறுசுறுப்பாக இருக்கும், தேன் கூட்டில் ஒரு ராணி மட்டுமே இருக்கும், மலர்களிலிருந்து தேனை சேகரிக்கும் போன்ற விஷயங்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவை நம் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையில் பங்காற்றுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் இந்தப் பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சிறிய மற்றும் வலிமையான உயிரினங்கள் சுவையான தேனை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, எண்ணற்ற தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு பங்களிக்கும் மகரந்தச் சேர்க்கையாளர்களாகவும் உள்ளன. தேனைத் தேடி அவை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு செல்லும்போது மகரந்தத் துகள்கள் அவற்றின் உடலில் ஒட்டிக் கொள்கின்றன. அந்த மகரந்தத் துகள்களோடு அடுத்த மலரில் அமரும்போது, மகரந்தச் சேர்க்கை எளிதாகிறது. இதனால் தாவரங்களின் உற்பத்திக்கு தேனீக்கள் உதவுகின்றன.
இந்த மகரந்தச்சேர்க்கை சேவை பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்க இன்றியமையாத ஒன்றாகும். தாவரங்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதன் மூலம், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் உயிர் வாழ்விற்கு தேனீக்கள் பங்களிக்கின்றன. உலக அளவில் அனைத்துப் பூக்கும் தாவரங்களில் தோராயமாக 75 சதவீதம் மகரந்தச் சேர்க்கை காரணமாகவே தனது இனத்தை வளர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்கு, விவசாய உற்பத்தி மற்றும் உணவு சார்ந்த விஷயங்களோடு நெருக்கமாக பிணைந்துள்ளது. மனிதர்களுக்கு உணவாக இருக்கும் பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பல பயிர்கள் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையை பெரிதும் நம்பியுள்ளன. இதன் மூலமாகவே அவற்றில் அதிக விளைச்சல் ஏற்படுகிறது. தேனீக்கள் இல்லாமல் நமது உணவு விநியோகம் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
தேனீக்கள் மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் இவை காக்கின்றன. இவற்றின் மகரந்தச் சேர்க்கை தாவரங்களில் மரபணு வேறுபாட்டை ஊக்குவித்து, சுற்றுச்சூழலில் புதுவிதமான தாவரங்கள் உருவாக உதவுகிறது.
நமது சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தேனீக்களின் நடத்தைகளை வைத்து கண்காணிக்க முடியும். தேனீக்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட பகுதி மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியும் உணர்திறன் கொண்டவை. எனவே தேனீக்களை கண்காணிப்பது மூலம் விஞ்ஞானிகளும், அரசாங்கமும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான நுண்ணறிவுகளைப் பெற முடியும்.
இப்படி சுற்றுச்சூழலில் நாம் நம்ப முடியாத அளவுக்கு தேனீக்களின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தேனீக்கள் இல்லையெனில் இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அழிந்தும் கூட போகலாம்.

