சமீபத்திய நாசாவின் ஆய்வு அறிக்கைப்படி பூமியில் அதிவேகமாக நிலத்தடி நீர் மட்டம் மீட்கமுடியாத அளவிற்கு குறைந்து கொண்டே வருகிறது. நாசாவும் ஜெர்மன் நாடும் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோளின் ஆய்வின் தரவுகளின் படி பூமியில் புதிய நீர் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புவியியல் ஆய்வுகளில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பூமியில் உள்ள கண்டங்கள் வறண்ட கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக பூமியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்துள்ளது. நல்ல தண்ணீர் குறைந்த மட்டத்தில் மட்டுமே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வெளிவரும் தரவுகள் உலகளாவிய நீர் பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பற்றிய கவலைகளை தெரிவிக்கின்றன. 2015 லிருந்து 2023 ஆண்டுகள் வரை பூமியின் மேற்பரப்பில் இருந்த நிலத்தடி நீரீல் இருந்த நன்னீரின் சராசரி அளவு, 2002-2014 சராசரியை விட 290 கன மைல்கள் குறைவாக இருந்தது.
வழக்கமாக கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தாலும், மழைக் காலத்திலும், வெள்ள காலத்திலும் நிலத்தில் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி விடும். இதனால் நன்னீரின் சராசரியும் உயரும். ஆனால் 2023 வரையிலான செயற்கைக்கோள் தரவுகளும் புதிய நன்னீர் அளவுகள் இன்னும், மீட்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இதை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
கடுமையான வறட்சியால் பிரேசில் நாட்டில் நீர் இழப்பு தொடங்கியது. பின்னர், பல கண்டங்களில் பெரிய அளவிலான வறட்சி சூழல்கள் நிலவியது. இதற்குக் காரணம் கடல் வெப்பநிலை மற்றும் 2014 முதல் 2016 வரையிலான எல் நினோ நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எல் நினோ தணிந்த பிறகும் உலகளாவிய நன்னீர் நிலைகள் மீளவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பருவநிலை மாற்றமும் சுற்றுச்சுழல் மாசுபாடும் நிலத்தடியில் நன்னீரை உறிஞ்சுகிறது. புவி வெப்பமடைதல் வளிமண்டலத்தில் நீராவியின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது தீவிர மழைக்கு வழிவகுக்கிறது. வறட்சியின் போது மழை பெய்வதால் மண் தண்ணீரை திறம்பட உறிஞ்சுவதை தடுக்கிறது. நிலத்தடி நீர் குறைவதற்கு வழிவகுக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் நன்னீர் அளவு குறைவதால் வறட்சி ஏற்பட்டது. இது வரவிருக்கும் கடுமையான வறட்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
நீர் ஆதாரங்கள் குறைவதால் உலகளாவிய அளவில் மோதல்கள் ஏற்படலாம். வறுமை மற்றும் நோய் அபாயம் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதால் மக்களுக்கு சரியாக நல்ல தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புகள் குறையும். நிலத்தை மாசுபடுத்துதல், தண்ணீரை வீணாக்குதல், வேதியியல் நச்சுக்கள் தண்ணீரில் கலத்தல் போன்றவற்றால் எதிர்காலத்தில் 300 கோடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்காது. நிலத்தடியில் நன்னீர் அளவு குறைவது எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய அபாயமாகும்.