
‘குட்டியா இருக்கும்போது கழுதையும் குதிரை போலத் தெரியும்’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. நம் மனதைக் கொள்ளைகொள்ளும் அழகில் க்யூட்டாகக் காணப்படும் 10 வகையான குட்டிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
1. பேபி பாண்டா: மென்மையான உடலமைப்பு, புசு புசுவென்ற உரோமம், கள்ளம் கபடமற்ற கண்கள் மற்றும் குறும்புத்தனம் நிறைந்து, அடிக்கடி பந்து போல் சுருண்டு விழுந்து எழுந்து, பார்ப்போரை கவர்ந்திழுக்கும் குணம் கொண்டது இந்த பேபி பாண்டா.
2. குட்டி யானை: யானைக்குட்டி அதிக ஆர்வத்துடன், அதன் இனத்தைச் சேர்ந்த மற்ற குட்டிகள் மற்றும் மனிதர்களுடன் பழகக் கூடியது. துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி பீச்சியடிப்பதும், பட்டாம் பூச்சிகளை துரத்திச் செல்வதும் இதற்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் ஆகும்.
3. பேபி பென்குயின்: பென்குயின் குஞ்சுகள் பட்டுப் போன்ற மென்மையான உரோமங்களால் போர்த்திய உடலுடன் கூட்டமாக நடமாடிக் கொண்டிருக்கும். உடல் உஷ்ணம் பெற ஒன்றையொன்று உரசிக்கொண்டு தள்ளாடியபடி இவை நடந்து செல்வது காண்போர் மனதை உருகச் செய்யும்.
4. பேபி ஸ்லோத்: மென்மையான, சிரித்த முகத்துடன் எப்பொழுதும் இது தன் தாயை கெட்டியாகப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும். மெதுவான நடை, தூங்கு மூஞ்சியுடன் பேபி ஸ்லோத்தைப் பார்ப்பது அத்தனை அழகு.
5. பேபி ஓட்டகச் சிவிங்கி: நீண்ட கால்கள் மற்றும் அகன்ற விழிகளுடன், நிமிர்ந்து நிற்பதற்கு தடுமாறும் இதன் தோற்றம் கவர்ச்சியாக இருக்கும்.
6. பேபி டைகர்: அளவில் சிறியதாக இருந்தாலும், 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா' என்ற பழமொழிக்கேற்ப, பயங்கரமான பார்வையுடன், தனது உடன் பிறந்த மற்ற குட்டிகளுடன் சுறுசுறுப்பாக துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கப் பரவசம் தரும்.
7. பேபி கோலா: மிருதுவான பாதங்கள், அகன்று விரிந்து மென்மையான பார்வையுடைய கண்கள் கொண்ட இந்த பேபி கோலா எப்பவும் தன் தாயின் முதுகில் தொற்றிக்கொண்டு செல்வதைப் பார்ப்பது மிகவும் அழகான காட்சி.
8. முயல் குட்டி: கள்ளம் கபடமற்ற இந்தக் குட்டி முயலின் விறைப்பான காதுகள் மற்றும் துடிப்பான மூக்கு அதன் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்ப்பவையாகும்.
9. பேபி சீல்: வெள்ளை நிற உரோமங்களால் போர்த்தப்பட்டு குண்டான புஸு புஸு உருவம் கொண்ட பேபி சீல், ஐஸ் கட்டிகள் நிறைந்த கடற்பரப்பில் உயிருள்ள ஒரு வெள்ளை நிற பந்து போல் காட்சியளிக்கும்.
10. பேபி ஹெட்ஜ்ஹாக் (Baby Hedgehog): மிக மென்மையான இறகுகளும் பிரகாசமான விழிகளும் கொண்ட ஹாக்லெட்ஸ் (Hoglets) நம் எதிர்பார்ப்பை விட இனிமையாகவும் அன்பாகவும் பழகக் கூடியது.