
உலக கொரில்லா தினம் செப்டம்பர் 24ல் கொண்டாடப்படுகிறது. கொரில்லாக்கள் காடுகளில் வாழும் பெரிய மனிதனைப் போன்ற குரங்குகள். இவை பெரும்பாலும் இலைகள், பழங்கள் மற்றும் பூக்களை உண்ணும் தாவர வகை விலங்குகள் ஆகும். சில நேரங்களில் பூச்சிகளையும் இவை உண்கின்றன. அவை வாழும் சூழலைப் பொறுத்து அவற்றின் உணவும் மாறுபடும். உலக கொரில்லா தினம் 2017ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுகிறது.
கொரில்லாக்கள் காடுகளில் தனித்தனி குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெரிய ஆண் கொரில்லா (சில்வர் பேக்) தலைமை தாங்கி அக்கூட்டத்தை வழிநடத்தும். மேலும் சில பெண் கொரில்லாக்கள் மற்றும் அவற்றின் குட்டிகள் அந்தக் கூட்டத்தில் இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஒரு குட்டியை ஈன்று அதை பல வருடங்களுக்கு பராமரித்து வளர்க்கின்றன. குட்டி அதன் தாயின் உடலோடு ஒட்டிக்கொண்டு வளர்கிறது.
கொரில்லாக்கள் உடல் ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த விலங்குகள். அவை மனிதர்களை விட 10 மடங்கு வலிமையானவை. மேலும், அவற்றின் கடி சிங்கத்தின் கடியை போல இரண்டு மடங்கு வலிமையானது. குழுவில் சில்வர் பேக் மற்றும் பெண் கொரில்லாக்களுக்கு இடையே வலுவான பிணைப்பு உள்ளது. இது கொரில்லாக்களின் சமூக வாழ்க்கைக்கு உரிய அடிப்படையாகும்.
கொரில்லாக்கள் மழைக்காடுகளிலும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் பெரும்பாலும் வாழ்கின்றன. ஆண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்களைவிட அளவில் பெரியவை. அவை 1.7 மீட்டர் உயரம் வரை இருக்கும் மற்றும் 150 கிலோ எடை வரை இருக்கும். கொரில்லாக்கள் தங்கள் கை முட்டிகளை ஊன்றி நடக்கும். கொரில்லாக்கள் ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு ஒரு புதிய கூடு கட்டுகின்றன. அதே இடத்தில் இருந்தாலும் அவை கூடுகளைப் பயன்படுத்துவதில்லை. இரவு வரும்போது தூங்கத் தயாராக, சாயங்காலத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு அவற்றின் உறங்குமிடம் உருவாக்கப்படுகின்றன. கொரில்லாக்கள் மனிதர்களை விட அதிக நேரம் தூங்குகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணி நேரம் அவை தூக்கத்தில் கழிக்கின்றன.
உலக கொரில்லா தினம், கொரில்லாக்களின் முக்கியத்துவத்தை, அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மக்களைத் தூண்டவும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொரில்லாக்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், காடுகளில் கொரில்லாக்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுக்கிறது.
உலக கொரில்லா தினம் கொரில்லாக்கள் நன்றாக வாழ்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அவற்றின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.