

நீங்கள் இதுவரை கேட்டதிலேயே பயங்கரமான சத்தம் எது? விமானத்தின் சத்தமா அல்லது வெடிச்சத்தமா? பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளையே குழப்பத்தில் ஆழ்த்திய அந்த "The Bloop" சத்தத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்!
1997-ல் கடலுக்கு அடியிலிருந்து 5,000 கிலோமீட்டர் தூரம் வரை ஒரு சத்தம் கேட்டிருக்கிறது. அதாவது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கேட்கக்கூடிய அளவிற்குப் பெரிய சத்தம் அது. அமெரிக்காவின் NOAA அமைப்பு, கடலுக்கு அடியில் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக ஹைட்ரோஃபோன்களை அமைத்திருந்தது. அப்போதுதான் இந்த விசித்திரமான சத்தத்தைப் பதிவு செய்தார்கள்.
இந்தச் சத்தத்தைப் பதிவு செய்து, அதன் வேகத்தை அதிகப்படுத்தி கேட்டபோது, அது ஒரு பொருளைத் தண்ணீருக்குள் போட்டால் வரும் "Bloop" என்ற சத்தத்தைப் போலவே இருந்ததால் இதற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.
விஞ்ஞானிகள் அந்தச் சத்தத்தை ஆராய்ந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்கள். ஏனெனில், உலகின் மிகப்பெரிய உயிரினமான நீலத் திமிங்கிலம் எழுப்பும் சத்தத்தை விட இது பல மடங்கு அதிகமானது. இப்படிப்பட்ட சத்தத்தை எழுப்ப வேண்டுமென்றால், அந்த உயிரினம் எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும்?
இந்தச் சத்தத்தை NOAA அமைப்பின் ஒரு ஹைட்ரோபோன் மட்டும் கேட்கவில்லை. பசிபிக் பெருங்கடலில் சுமார் 3,000 மைல்கள் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த பல சென்சார்கள் இந்தச் சத்தத்தை(The Bloop mystery) ஒரே நேரத்தில் பதிவு செய்தன. இதன் மூலமே அந்தச் சத்தம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட முடிந்தது.
இந்தச் சத்தம் வந்த இடத்திற்கு அருகில்தான் 'ரிலே' (R'lyeh) என்ற மர்மமான நகரம் இருப்பதாக H.P. Lovecraft என்ற எழுத்தாளர் பல வருடங்களுக்கு முன்பே ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தக்கதையின்படி, அங்கே ஆக்டோபஸ் தலை கொண்ட 'கதுலு' (Cthulhu) என்ற ராட்சத அரக்கன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவர் சொன்ன அதே இடத்திலிருந்து சத்தம் வருவதைப் பார்த்தால், இது வெறும் தற்செயலா (Coincidence) அல்லது நிஜமாகவே அங்கே ஏதேனும் உயிரினம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் இது பனிப்பாறை உடையும் சத்தம் (Icequake) என்று கூறி இந்த விஷயத்தை முடித்துவிட்டார்கள். நிஜமாகவே பனிப்பாறைதான் இந்தச் சத்தத்தை எழுப்பியதா அல்லது கடலுக்கு அடியில் நமக்குத் தெரியாத மர்மமான உயிரினம் ஏதேனும் உள்ளதா?
ஏனெனில், கடலில் இன்னும் 95 சதவீத இடங்களை நாம் ஆராயவே இல்லை. கடலுக்கு அடியில் இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்!