மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் இயற்கை உரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. மண்புழு உரம் மிக எளிதாக கிடைக்கும் இயற்கை உரங்களில் ஒன்றாகும். மண்ணைப் பண்படுத்துவதில் மண்புழுவுக்கு ஈடு இணை ஏதும் இல்லை. செயற்கை உரங்களால் பாழ்பட்ட நிலத்தைக் கூட வளம் நிறைந்த நிலமாக மாற்றும் தன்மையை மண்புழுக்கள் கொண்டுள்ளன. மேலும், மகசூலை அதிகரிப்பதிலும் மண்புழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 'உழவனின் நண்பன்' என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் மண்புழுக்களை சிறு, குறு விவசாயிகளும் எளிதில் உற்பத்தி செய்ய முடியும். மண்புழு உரம் தயாரிப்பதற்கான படுக்கையை எப்படி தயார் செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு அறையில் குறைந்தபட்சம் 2 அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் உடைய ஒரு சிமெண்ட் தொட்டியை கட்ட வேண்டும். தொட்டியை செங்கல் மற்றும் ஹாலோ ப்ளாக்ஸ் கற்களைப் பயன்படுத்தி கட்டலாம். அறையின் அளவுக்கு ஏற்ப தொட்டியை பெரிதாகவும் கட்டிக் கொள்ளலாம். தொட்டியின் அடிப்பகுதி சாய்வாக இருப்பது போல இருக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை வடிகட்டி சுத்தம் செய்வதற்காக அடியில் ஒரு சிறிய சேமிப்பு குழி வைக்க வேண்டும். இம்முறையில் தொட்டியைக் கட்டினால் ஈரப்பதத்தை சரியான அளவில் பராமரிக்க முடியும்.
மண்புழு உர உற்பத்திக்கான தொட்டியில் உமி, நெல் அல்லது கரும்புத் தோகைகள் அல்லது தென்னை நார்கழிவுகளை 3 செமீ உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த படுக்கையின் மேல் 3 செமீ உயரத்திற்கு ஆற்று மணலைத் தூவ வேண்டும். இதன் மேல் தோட்டக்கால் மண்ணை 3 செமீ உயரத்திற்கு நிரப்ப வேண்டும். பிறகு அதன் மேல் தண்ணீரைத் தெளித்து விட வேண்டும். 30% கால்நடை கழிவுகளுடன் பாதி மக்கிய கழிவுகளை கலக்கி, மண்புழு உரத் தொட்டியின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். தொட்டியில் ஈரப்பதம் 60% இருக்க வேண்டியது அவசியமாகும். 1மீ நீளம் x 1மீ அகலம் x 5 மீ உயரத்திற்கு, தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட சுமார் 2000 மண்புழுக்களை (2 கிலோ மண்புழு) இதன் மேலே பரப்பினால் போதும். மண்புழுக்களை கழிவுகளுக்கு உள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.
மண்புழு உரப் படுக்கைக்கு தினந்தோறும் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியில் எப்போதும் 60% ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். தேவையான சமயத்தில் தண்ணீரினைத் தெளிக்க வேண்டுமே தவிர ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னர் தொட்டியில் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விடலாம்.
மண்புழு உரத்தை சிறு, குறு விவசாயிகள் அவர்களின் பண்ணையிலேயே தயாரித்தால், மண் வளத்தைக் மேம்படுத்தி மகசூலை அதிகரிக்க முடியும். மண்புழு உரத் தொழில்நுட்பத்தை பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ள விவசாயிகளுக்கு ஒரு நாளே போதுமானது. அந்த அளவிற்கு மண்புழு உரம் தயாரிப்பது ஒரு எளிய தொழில்நுட்பமாகும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் இருக்கும் வேளாண் மையங்களை அணுகவும்.