

ஒரு கொடியில் இரு மலர்கள் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தத் தலைப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகி இருக்கிறது. இருவேறு ரகச்செடிகளை ஒட்டி இணைப்பதன் மூலம் ஒரே செடியில் இரு வண்ண மலர்கள் மலர்வதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரே செடியில் பூமியின் மேற்புறத்தில் தக்காளியும் பூமிக்கடியில் உருளைக்கிழங்கும் காய்க்கும் ஒட்டு ரகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதைப்பற்றி நாம் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தக்காளியும் உருளைக்கிழங்கும் காய்க்கும் ஒரே செடியை பொமாட்டோ செடி (Pomato Plant) என்று அழைக்கிறார்கள். இந்த அறிவியல் அதிசயம் செர்ரி தக்காளி மற்றும் வெள்ளை உருளைக்கிழங்கு செடிகளை முறைப்படி ஒன்றாகக் ஒட்டி உருவாக்கப்படுகின்றன. இது ஒரு ஒட்டுத்தாவர வகையாகும். இதன் மூலம் ஒரே செடியில் தக்காளிப் பழங்களும் அதே செடியின் மண்ணுக்குள் உருளைக்கிழங்கும் விளைவிக்கப்படுகின்றன.
செர்ரி தக்காளியும் வெள்ளை உருளைக்கிழங்கும் சோலனேசி குடும்பத்தில் ‘சோலனம்’ என்ற இனத்தைச் சேர்ந்த தாவர வகைகளாகும். இத்தகைய இரண்டு செடிகளையும் ஒட்டி வளர்ப்பதன் மூலம் செர்ரி தக்காளியானது கொடியில் வளரும். வெள்ளை உருளைக்கிழங்கானது அதே தாவரத்தின் வேர்ப்பகுதியில் மண்ணுக்குள் வளரும்.
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் ஒரே தாவரத்தில் உற்பத்தி செய்யும் தாவரவியல் ஆராய்ச்சியானது கி.பி.1833 முதலே நிலவி வந்தது. இந்த தாவரவியில் ஆராய்ச்சியின் மூலம் குறைந்த இடங்களில் அதிக அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிகிறது என்பது அனுகூலமாகும். பல வருடங்களுக்கு முன்பே கென்யாவில் இந்த முறையில் தக்காளியும் உருளைக்கிழங்கும் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இங்கிலாந்து நாட்டில் இந்த முறையில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
பொமாட்டோ செடியானது எவ்வாறு இணைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது என்பதைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
உருளைச்செடியின் மேற்புறத்தை அகற்றிவிட்டு வேர் பாகத்திலிருந்து சுமார் ஒரு அடி அளவில் தண்டு இருப்பது போல வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி செடியின் வேர் பகுதியை வெட்டி எறிந்துவிட்டு அதன் மேல்பகுதியில் இலைகள் இருக்கும் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு தாவரங்களையும் குறுக்காக சிறிதளவு வெட்டி, அதாவது இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கட்ட ஏதுவாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு தாவரங்களின் வெட்டப்பட்ட பகுதியை இணைத்து வைத்து கிராப்டிங் டேப்பால் இணைத்துக் கட்ட வேண்டும். இந்த ஒட்டுச்செடியை தொட்டியில் நட்டு ஏழு முதல் பதினான்கு நாட்கள் நிழல் பகுதியில் அதே சமயத்தில், ஈரப்பதம் இருக்குமாறு வைத்து வளர்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒட்டப்பட்ட இந்த செடியிலிருந்து இலைகள் துளிர்த்து முளைக்கத் தொடங்கும். இதன் பின்னர் இந்த செடியை நன்றாக சூரிய ஒளியானது படும்படியாக வைத்து வளர்க்க வேண்டும்.
பொதுவாக, ஒட்டு ரகச் செடிகளுக்கு நோய்த் தடுப்பாற்றல் அதிகமாக இருக்கும். மேலும், குறுகிய நிலப்பகுதியில் அதிக அளவு மகசூலையும் பெற முடியும் என்பது இதன் சிறப்பாகும். வீடுகளில் மாடித் தோட்டங்களில் வளர்க்க இத்தகைய ஒட்டு ரகங்கள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.