

குதிரை லாட நண்டு (Horse shoe Crab) என்பது குதிரையின் லாடம் போன்ற வடிவத்தில் பழங்காலத்தில் இருந்தே வாழும் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இது டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கும் முன்பே தோன்றி, தனது அசல் வடிவம் மாறாமல் இன்றும் இருப்பதால், 'உயிர்வாழும் புதை வடிவம்' (living fossil) என்று அழைக்கப்படுகிறது. இவை ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளில், மணல் நிறைந்த கடற்கரைகளில், குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் கிழக்கு கடற்கரைகளில் காணப்படுகின்றன.
மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் ஒரு பழைமையான கடல்வாழ் உயிரினமான இது நண்டு வகையைச் சேர்ந்தது அல்ல. சிலந்தி, தேள் போன்ற ஆர்த்ரோபாட் வகையைச் சேர்ந்தது. குதிரையின் லாடத்தைப் போன்ற கடினமான புற ஓடு மற்றும் கூரான வால் ஆகியவற்றைக் கொண்டது. இதன் தனித்துவமான கவசம் போன்ற ஓடு மற்றும் வால் ஆகியவற்றால் இப்பெயர் பெற்றது.
இதற்கு 10 கண்கள் உள்ளன. இரண்டு பெரிய கூட்டுக் கண்களும், பல சிறிய கண்களும் இதன் ஓட்டின் மேல் அமைந்திருக்கும். நடக்கவும், நீந்தவும், உணவை வாய்க்குள் தள்ளவும் உதவும் 5 ஜோடி கால்களைக் கொண்டுள்ளது.
இதன் நீண்ட வால் போன்ற பகுதி (telson) எதிரிகளை தாக்குவதற்கு அல்ல, மாறாக நீரில் தலைகீழாக விழுந்தால் மீண்டும் நேராக திரும்புவதற்கு பயன்படுகிறது. இவை ஆழம் குறைந்த கடல் நீர் மற்றும் சதுப்பு நிலப் பகுதிகளில் வாழ்கின்றன. இவை புழுக்களையும், மொலஸ்கா (molluscs) விலங்குகளையும் மற்றும் சிறிய மீன்களையும் கூட உணவாக உட்கொள்கின்றன. பெண் குதிரை லாட நண்டுகள் ஆண் குதிரை லாட நண்டுகளை விடப் பெரியவை.
உலகில் மொத்தம் 4 வகையான குதிரை லாட நண்டுகள் உள்ளன. இதில் இரண்டு வகையான குதிரை லாட நண்டு இனங்கள் இந்திய கடற்கரைகளில், முக்கியமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் காணப்படுகின்றன. இதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இதில் உள்ள 'லிமுலஸ் அமீபோசைட் லைசேட் (LAL) என்ற வேதிப்பொருள் பாக்டீரியா தொற்றுக்களைக் கண்டறிய மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுகிறது.
மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களில் பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை சோதிக்க இதன் ரத்தம் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ரத்தத்தின் மருத்துவ குணம் காரணமாக, ஒரு லிட்டர் ரத்தம் சர்வதேச சந்தையில் சுமார் 11 முதல் 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இணை சேரும் காலங்களில் மட்டுமே இவை கடற்கரைக்கு வருகை தரும். மீன் பிடிப்பதற்கான தூண்டில் இரையாகவும், வளமாக்கிகளிலும் (fertilizers) இவை பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் கரையோர வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும், வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக இவை அதிகளவில் பிடிக்கப்படுவதாலும் அண்மைக் காலமாக இவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இவை அழிவின் விளிம்பில் இருப்பதால் அவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.