

பச்சோந்திகள் ஆங்கிலத்தில் Chameleon என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு கிரேக்க வார்த்தையாகும். ‘chamai’ என்றால் நிலம் ‘leon’ என்றால் சிங்கம். அதாவது, நிலச்சிங்கம் என்பது பொருள். பச்சோந்திகள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை. பச்சோந்திகளில் சுமார் எண்பது இனங்கள் உலகெங்கிலும் காணப்படுகின்றன.
பச்சோந்திகள் ஊர்வன பிரிவில் அடங்கும் ஒரு உயிரினமாகும். உலகில் வாழும் உயிரினங்களில் பல பிராணிகளுக்கு சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களுடைய உடலின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் அதிசய ஆற்றல் இருக்கிறது. அவற்றுள் முதலிடம் வகிப்பது பச்சோந்திகளே. இவற்றின் உடலில் அமைந்துள்ள நிறச்செல்களின் மீது வெளிச்சமானது பட்டதும் அதனால் நிறச்செல்கள் பாதிப்படைந்து சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கேற்ப உடலானது நிறமாற்றம் பெறுகிறது. பச்சோந்தியானது உடல் நிறத்தை மாற்றிக்கொள்ள சுமார் பத்து நிமிடங்கள் ஆகின்றன. இவற்றின் உடலானது பச்சை, மஞ்சள் மற்றும் கரும்பழுப்பு என பல வண்ணங்களில் மாற்றமடைகின்றன.
பச்சோந்திகள் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதிகளில் ஏராளமான அளவில் உள்ளன. வெப்பமான பகுதிகளில் இவை அதிக அளவில் வாழ்கின்றன. மேலும், இவை தெற்கு ஐரோப்பா, ஸ்பெயின் மற்றும் ஆசிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
பச்சோந்திகளின் தலையும் உடலும் எட்டு அங்குலம் முதல் பன்னிரண்டு அங்குலம் வரை காணப்படுகின்றன. பச்சோந்திகளுக்கு நீளமான வால் அமைந்துள்ளது. நீளமான வாலானது ஒரு கையைப் போல செயல்படுகிறது. மரத்தின் சிறு கிளைகளில் இவை தங்களுடைய வால் முனையைச் சுற்றிப் பாதுகாப்பாக அமர்ந்து கொள்ளுகின்றன.
பச்சோந்திகளின் நாக்கானது மிக நீளமாக அமைந்துள்ளது. இதன் முனையில் பசை போன்ற ஒரு அமைப்பு காணப்படுகிறது. பச்சோந்தியானது பூச்சிகளைப் பார்த்துவிட்டால் உடனே தனது நீளமான நாக்கை நீட்டி வைத்துக்கொள்ளும். அதன் முனையிலுள்ள பசையில் பூச்சியானது ஒட்டிக்கொள்ளும். உடனே பச்சோந்தியானது நாக்கை வாய்க்குள் இழுத்து அந்த பூச்சியைத் தின்று விடும்.
பச்சோந்திகள் சிறு சிறு பூச்சிகளையும் சிலந்திகளையும் விரும்பி உண்ணுகின்றன. பெரிய வகை பச்சோந்திகள் சிறிய பறவைகளையும் பல்லிகளையும் பிடித்து சாப்பிடும் இயல்புடையனவாக உள்ளன. சில வகை பச்சோந்திகள் தாவரங்களையும் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.
பச்சோந்திகள் பெரும்பாலும் மரத்திலேயே வாழ்கின்றன. இவை சிறிய புதர் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. சிறிய வகை பச்சோந்திகள் நிலப்பகுதிகளில் வாழ்கின்றன.
பச்சோந்திகள் பொதுவாக அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. இவை குறைந்தபட்சம் இரண்டு வருடங்களும் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன.
பச்சோந்தி இனத்தில் பெரும்பாலானவை முட்டையிடுபவையாக உள்ளன. கருவுற்ற மூன்று முதல் ஆறு வாரங்களில் இவை முட்டைகளை இடுகின்றன. முட்டையிடுவதற்கு முன்னால் பச்சோந்தியானது மரத்திலிருந்து இறங்கி ஈரமான நிலப்பகுதியில் நான்கு முதல் பன்னிரண்டு அங்குல அளவிற்கு குழியைத் தோண்டுகின்றன. தோண்டிய குழிக்குள் பெண் பச்சோந்தி முட்டைகளை இடும். பின்னர் குழியை மூடிவிட்டுச் சென்று விடும்.
முட்டைகளின் எண்ணிக்கையானது இனத்திற்கு இனம் வேறுபடுகிறது. முட்டைகளானது 4 முதல் 12 மாதங்களில் பொரிந்து குஞ்சுகளாக மாற்றமடையும். பச்சோந்தி இனத்தில் ஜாக்சன் பச்சோந்தி மற்றும் ப்ளாப்ஜாக் பச்சோந்தி என்ற இரண்டு வகை பச்சோந்திகள் குட்டிகளை ஈணுகின்றன. இவற்றின் குட்டிகள் வயிற்றுக்குள் சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை வளர்ந்து பின்னர் பிறக்கின்றன.
பச்சோந்திகள் தங்களுடைய உடலைத் திருப்பாமல் பல கோணங்களில் பார்க்கும் ஆற்றலையும் இவற்றின் இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பார்க்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. பச்சோந்திகளின் நாக்கானது அவற்றின் உடலின் நீளத்தை விட அதிக நீளமாக அமைந்துள்ளது.