
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகை உடலமைப்பு, உணவுப் பழக்கம், ஆயுட்காலம் போன்றவற்றை உடையதாக இருக்கின்றன. வாழும் உயிரினங்களில் மிகப் பழைமை வாய்ந்த 9 வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. க்ரீன்லாந்து சுறா: ஆர்ட்டிக் மற்றும் வட அட்லாண்ட்டிக் பகுதிகளில் அதிகம் காணப்படும் இந்த க்ரீன்லாந்து சுறா சராசரியாக 272 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை. மிகவும் மெதுவாக நகரும் உயிரினங்களில் ஒன்று இது.
2. ராட்சத ஆமைகள்: மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை வாழ்ந்து வருகின்றன. 150 ஆண்டுகளுக்கும் மேலாக இவை வாழக்கூடியவை. இவை கலபகோஸ் தீவு மற்றும் சீஷெல்ஸை சேர்ந்தவை.
3. ஜெல்லி ஃபிஷ்: 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இவை வாழ்ந்து வருகின்றன. உலகெங்கிலுமுள்ள அனைத்து கடல்களிலும் இவை வாழ்கின்றன. இதற்கு உடலில் எலும்புகள் கிடையாது. மூளையும் கிடையாது. இருந்தபோதும், பூமியின் பல வகையான உயிரினங்கள் அடியோடு அழிவை சந்தித்தபோது, ஜெல்லி ஃபிஷ் வகைகள் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
4. ஸ்டர்ஜன்: 'வாழும் புதை படிவங்கள்' என அழைக்கப்படும் ஸ்டர்ஜன்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றன. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள ஆறுகளில் காணப்படும் இவை, பெரிய உருவமும் நீண்ட ஆயுட் காலமும் கொண்டவை.
5. லாம்ப்ரேக்கள்: மிகவும் பழைமையான மீன் வகைகளில் ஒன்று லாம்ப்ரே. இது சுமார் 360 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறது. ஆறுகள் மற்றும் ஏரிகளில் இவை காணப்படுகின்றன. இதற்கு தாடை கிடையாது. கூர்மையான பல் வரிசைகளைக் கொண்டு மற்ற மீன்களைப் பிடித்து அவற்றின் இரத்தத்தையும் திரவங்களையும் உறிஞ்சும்.
6. துவாடாரா: நியூஸிலாந்தில் மட்டும் வாழ்ந்து வரும் இந்த அரிய வகை ஊர்வனமான துவாடாரா சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றன. டைனோசர்களின் காலத்திற்கு முந்தைய பழைமையான ஒரு குழுவைச் சேர்ந்த இந்த துவாடாராவிடம் உள்ள அசாதாரண அம்சம் அதன் தலையின் மீதுள்ள ஒரு சிறிய மூன்றாவது கண் ஆகும்.
7. வில் தலை திமிங்கலம்: உருவத்தில் பெரியதான, வில் போன்ற தலை அமைப்பு கொண்ட தனித்துவமான திமிங்கலம் இது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடிய பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இதன் வலுவான மண்டை ஓடு, 8 அங்குலத்திற்கும் அதிகமான தடிமன் கொண்ட பனிக்கட்டிகளை உடைத்து கடலின் மேற்பரப்பை அடைந்து சுவாசிக்க உதவும் திறமை கொண்டது.
8. குதிரை லாட நண்டுகள்: சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பே குதிரை லாட நண்டுகள் உள்ளன. இவற்றின் நீல நிற இரத்தம், ஆபத்தான பாக்டீரியாக்களை கண்டறியும் மருத்துவ ஆராய்ச்சியில் மிகுந்த அளவு மதிப்புடன் பங்கேற்கிறது. இவை உலகம் முழுவதும் ஆழமற்ற கடலோர நீரில் தொடர்ந்து வாழ்கின்றன.
9. நாட்டிலஸ்: இது வெப்ப மண்டல இந்தோ-பசிபிக் கடற்பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது. இது நீந்துவதற்கு ஜெட் உந்து விசையை பயன்படுத்துகிறது. பல வளைவுகளாலான ஓடுடையது நாட்டிலஸ். இதன் புதை வடிவங்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாட்டிலஸ் வாழ்ந்து வந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.