
தென் அமெரிக்காவில் கொலம்பியா முதல் பிரேசில் வரையிலும், வடக்கே, பெரு முதல் தெற்கே பராகுவே வரையிலும் உள்ள அமேசான் காடுகளில் துள்ளுகுரங்குகள் (Callicebus) எனும் அணில்கள் போன்ற மிகச்சிறிய குரங்குகள் இருக்கின்றன. இவை அணில்களைப் போன்றிருப்பதால், இதனை அரிங்குகள் என்றும் அழைக்கின்றனர்.
குரங்குகள் இனத்தில், காலிசெபெனே (Callicebinae) என்னும் துணைக்குடும்பத்தில் இன்று எஞ்சியிருக்கும் ஒரே உயிரினம் இது மட்டும்தான். கிளைக்குக் கிளை துள்ளித் தாவுவதால், இவை துள்ளுகுரங்கு என்று அழைக்கப்படுகின்றன. ஜெர்மன் மொழியில் இதனை Springaffen (குதிக்கும் குரங்குகள்) என்று அழைக்கின்றனர்.
இத்துள்ளுகுரங்கின் தலையும் உடலும் சேர்ந்து 23 முதல் 46 செ.மீ (9 முதல் 18 அங்குலம்) அளவே இருக்கும். இதன் வால்கள் தலை மற்றும் உடலை விட நீளமானதாகும். இதன் வாலானது, ஏறத்தாழ 26 முதல் 56 செ.மீ (10 முதல் 22 அங்குலம்) இருக்கும்.
இதன் உடல் மயிர் சற்று நீளமானதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலோ, சாம்பல், கருஞ்சாம்பல் நிறத்திலோ இருக்கும். இதன் வாலில் நிறைய முடி இருக்கும். இக்குரங்குகளுக்குப் பிற குரங்குகளிடம் வாலின் அடிப்பகுதியில் வலுவாகப் பிடித்துக்கொள்ளும் பற்றுவால் இல்லை.
இக்குரங்குகள் அடர்ந்த காடுகளில் நீர் நிலைகளுக்கு அருகிலேயேப் பெரும்பான்மையாக வாழ்கின்றன. பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் பகலாடி உயிரினமாகவே இவை இருக்கின்றன. இவை பெரும்பான்மையாகப் பழங்களையே விரும்பி உண்கின்றன. மரத்தின் இலைகள், பூக்கள், சிறு பூச்சிகள் போன்றவைகளையே உண்கின்றன. பறவைகளின் முட்டைகள், சிறு முதுகெலும்பு உயிரிகளையும் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
இவ்வகைக் குரங்குகள் சிறு குடும்பமாக, ஏறத்தாழ 7 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. ஒன்றையொன்ன்று வருடிக்கொண்டும், இணைகள் ஒன்றோடு ஒன்று வாலை முறுக்கிக்கொண்டும், உறங்கிக்கொண்டும் இருப்பதைப் பார்க்க முடியும். இவை தங்கள் வாழிடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போராடுகின்றன.
இவ்வினக் குரங்குகளின் இனப்பெருக்கத்தில், பெண் அரிங்குகள் ஐந்து மாதங்கள் வரை கருவுற்று இருக்கும். பெரும்பான்மையாக, ஒரு குட்டியையே ஈனுகின்றன. அரிதாக, சில குரங்குகளுக்கு இரண்டு குட்டிகள் பிறப்பதுண்டு. இரண்டாவது குட்டி பெரும்பாலும் உயிர் பிழைப்பது இல்லை எனினும், அந்த இரண்டாம் குட்டியை அருகில் உள்ள மற்றொரு குடும்பம், வளர்க்க எடுத்துக் கொள்கின்றன.
இந்த அரிங்கு இனத்தில் ஆண் அரிங்கே பெரும்பாலும் குட்டி வளர்ப்பில் பங்கு கொள்கின்றது. குட்டிகள் தாய்ப்பால் குடிப்பதை ஐந்து மாதத்திற்குப் பிறகு விட்டு விடுகின்றன. அதன் பின், அவை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆன பின் முழுவளர்ச்சி அடைந்த அரிங்காக மாறிவிடுகின்றன.
மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆன பிறகு தன் துணையயைத் தேர்ந்தெடுப்பதற்காக குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்கின்றன. இவற்றின் வாழநாள் எவ்வளவு” என்று கண்டறியப்படவில்லை. இதைப் போன்ற டார்க்குவாட்டசு (Torquatus) என்னும் உயிரினம் 12 ஆண்டுகள் வரை இயற்கையில் வாழ்வதாகக் கணித்துள்ளனர்.